Header Ads



நாடளாவிய ரீதியில் இன்புளுவென்சா வேகமாக பரவுகிறது - 7 பேர் உயிரிழப்பு

நாடளாவிய ரீதியில்  மனிதர்களிடையே  பரவிவரும் ஏ.எச்.1 என்1 இன்புளுவென்சா தொற்று காரணமாக இவ்வருடம் இதுவரை ஏழு அபர் உயிரிழந்துள்ளளதுடன் 143 பேர் தொற்றுக்கு இலக்காகியுள்ளதாக சுகாதார அமைச்சின் பணிப்பாளர் டாக்டர் பாலித மஹிபால  தெரிவித்துள்ளார்.

குழந்தைகள், கர்ப்பிணித் தாய்மார்கள், முதியோர் மற்றும் வேறு நோய்களினால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் இன்புளுவென்சா நோய்த் தாக்கத்திற்கு உள்ளாவதாக நேற்று புதன்கிழமை  சுகாதார அமைச்சின் தொற்றுநோய் விஞ்ஞானப் பிரிவில்  இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார். தொடர்ந்து  ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த அவர்;

காய்ச்சல், இருமல், தொண்டை அரிப்பு, தடிமன், உடல், கை, கால் வலி, தலை வலி வயிற்றோட்டம், வாந்தி சில வேளைகளில் நீடித்தால் அது இன்புளுவென்சா  நோய்க்கான அறிகுறியாக இருக்கலாம். இது சுவாசத் தொகுதியை நேரடியாக தாக்கக்கூடியது.

கர்ப்பிணித் தாய்மார், இரண்டு வயதிற்கு குறைந்த குழந்தைகள், 65 வயதிற்கு மேற்பட்டோர், ஆஸ்மா, நீரிழிவு நோய் உடையவர், நீண்ட  காலமாக ஸ்டிரொய்ட் மருந்து உபயோகிப்பவர்கள், நீர்ப்பீடனத்தைப் பாதிக்கும் நோயைக் கொண்டுள்ளோர் இன்புளுவென்சா தொற்று நோயினால் ஆபத்தை எதிர்நோக்குவோராக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

ஒவ்வொரு வருடமும்  இத்தொற்று நோய் வெவ்வேறு வகைகளில் மனிதர்களை தாக்கி வருவதை பரிசோதனையின் ஊடாக உறுதி செய்துள்ளனர். மே, ஜூன், ஜூலை மாதங்களிலும் டிசம்பர், ஜனவரி, பெப்ரவரி மாதங்களிலும் இது அதிக தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது.  இம் மாதங்களிலே அதிகளவான நோயாளர்கள் பதிவாகி வருகின்றனர்.

இரண்டு தொடக்கம் ஆறு மணித்தியாலத்திற்குள் ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு பரவக் கூடிய இத்தொற்று நோய் களுபோவில, கேகாலை, பதுளை, கம்பஹா மற்றும் பலப்பிட்டிய பகுதிகளில் இதுவரை பதிவாகியுள்ளது.

இது விலங்குகளில் இருந்து மனிதர்களுக்கு பரவுகின்ற நோயென  தவறான பிரசாரத்தை  முன்னெடுத்துச் செல்கின்றனர். மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்கே இந்த தொற்று பரவுகின்றது.

அதிக சன நெரிசல் உள்ள இடங்களில்  தொற்றின் தாக்கம் அதிகமாகவுள்ளது. தொற்றிற்கான அறிகுறி தென்பட்டால் உடனடியாக வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுக் கொள்ளுமாறு பொது மக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளனர்.

சகல வைத்தியசாலைகளிலும் இதற்கான வசதி வாய்ப்புகள் செய்யப்பட்டுள்ளதுடன், வைத்தியர்கள் உட்பட ஏனைய சுகாதார சேவையாளர்களையும் தெளிவுபடுத்தியுள்ளதாக தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.