Header Ads



அமெரிக்காவை மிரட்டும் கனமழை - 28 பேர் பலி

அமெரிக்காவின் டெக்சாஸ் மற்றும் ஒக்லஹாமா மாநிலங்களில் பெய்து வரும் வரலாறு காணாத கனமழையால், மக்களின் இயல்பு வாழ்க்கை முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தில் சிக்கி அமெரிக்கா மற்றும் மெக்சிகோவில் 28 பேர் பலியாகியுள்ளனர். ஹவுஸ்டன் மாகாணத்தின் மேயர் இன்னும் அதிகளவு வெள்ளம் தேங்கியிருப்பதாக பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அமெரிக்காவின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள டெக்சாஸ் மாநிலத்தில் பெய்த கனமழை காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், தாழ்வான பகுதிகளில் உள்ள சாலைகளிலும் வெள்ளப்பெருக்கு அதிகரித்ததால், வாகனங்கள் தண்ணீரில் மூழ்கின.

ஹவுஸ்டன் நகரின் சாலைகளில் கரைபுரண்டு ஓடிய வெள்ளம் காரணமாக வாகனங்கள் வெள்ளத்தில் மூழ்கின. பல்லாயிரக்கணக்கான வீடுகளில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டது. இடியுடன் கூடிய பலத்த மழை காரணமாக கடந்த இரண்டு நாட்களில் அமெரிக்கா மற்றும் மெக்சிகோவில் 28 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹவுஸ்டன் நகரில் சில மணி நேரத்தில் சுமார் 25 சென்டி மீட்டர் கனமழை பதிவாகியுள்ளதாக மேயர் அனிஸ் பார்க்கர் தெரிவித்தார். கடும் வெள்ளம் காரணமாக ஹவுஸ்டன் மக்கள் வீடுகளுக்கு உள்ளேயே பாதுகாப்பாக இருக்குமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். தற்போது வெள்ளத்தில் சிக்கி காணாமல் போனவர்களைத் தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.

No comments

Powered by Blogger.