Header Ads



மூளையில் எலும்பு, முடியுடன் வளர்ந்த விசித்திரமான கட்டி

இந்தியாவை சேர்ந்த இளம்பெண் ஒருவரது மூளையில் வளர்ந்திருந்த சிசு போன்ற விசித்திரமான கட்டியை அமெரிக்க மருத்துவர் வெற்றிகரமாக அகற்றியுள்ளார்.

இந்தியாவின் ஐதராபாத் நகரத்தைச் சேர்ந்தவர் யாமினி கரணம் (வயது 26). இவர் அமெரிக்காவில் உள்ள இந்தியானா பல்கலை கழகத்தில் முனைவர் படிப்பினை படித்து வருகிறார். இவருக்கு படிப்பது மற்றும் பேசுவதில் சிரமம் ஏற்பட்டதை அடுத்து கடந்த செப்டம்பர் மாதம் மருத்துவரின் உதவியை நாடியுள்ளார். ஒரு கட்டத்தில் அவர் சாப்பிடுவதற்கு சிரமம் ஏற்பட்டதுடன், அவரது தலையில் ஆரம்பிக்கும் வலி உடல் முழுவதும் பரவ ஆரம்பித்தது. 

அவரது மூளையில் மைய பகுதியில் சிறிய பட்டாணி வடிவிலான பைனியல் சுரப்பியில் கட்டி இருப்பது போன்று தெரிந்ததை அடுத்து மருத்துவர்கள் அதற்கான சிகிச்சையை அவருக்கு அளித்து வந்துள்ளனர். அது சரிவராத நிலையில், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள ஹிராய்ர் ஷாஹினியன் என்ற மருத்துவரை அணுகி உள்ளார். அவர் மூளை அறுவை சிகிச்சைகளை மேற்கொள்பவர். அவர், யாமினியின் பின் தலையில், சிறிய அளவில் அறுவை சிகிச்சை செய்து எண்டோஸ்கோப் முறையில் அவரது மண்டையோட்டினுள் உள்ள சந்தேகத்திற்கிடமான கட்டியை குறித்து ஆய்வு செய்துள்ளார். 

அப்போது, விசித்திரமான திசுக்கட்டி இருந்ததைப் பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார். அதில், எலும்பு, முடி மற்றும் பல் என வளர்ந்த நிலையிலான சிறிய சிசு போன்ற வடிவம் காணப்பட்டுள்ளது. சில மருத்துவர்கள் அவை இரட்டையர்கள் வகையை சேர்ந்தவை என்றும், இது போன்ற கட்டிகள் வளராமல் உடலிலேயே தங்கி விடுபவவை என்றும் கூறியுள்ளனர். 

அதன்பின் டாக்டர் ஷாஹினியன், அந்த கட்டியை வெற்றிகரமாக நீக்கி உள்ளார். தற்போது யாமினியின் உடல்நிலை தேறி வருகிறது. விரைவில் பூரண குணமடைந்து இயல்பு நிலைக்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments

Powered by Blogger.