Header Ads



பாராளுமன்றத்தில் தற்போதுள்ள முஸ்லிம் உறுப்பினர்களின் எண்ணிக்கையை பெற்று கொள்ள முடியுமா..?

அரசியலமைப்பில் திருத்தங்களை கொண்டு வரும் நோக்கிலேயே தற்போது தேசிய அரசாங்கம் உருவாக்கப்பட்டது என மத்திய மாகாண சபை உறுப்பினர் அசாத் சாலி தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தேசிய அரசாங்கத்தில் 25 அமைச்சர்கள் மாத்திரமே நியமிக்கப்படுவார்கள் என நாங்கள் தெரிவித்த போதிலும் தேசிய அரசாங்கத்தில் 45 அமைச்சர்கள் மற்றும் 45 பிரதி அமைச்சர்கள் என 100 அமைச்சர்களை நியமிக்கலாம் என சுட்டிக்காட்டிய மாகாண சபை உறுப்பினர், இதை விட அதிகமான அமைச்சரவை நியமனங்களை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நியமித்திருந்தார்.

ஆனால் எங்களுக்கு ஆவண்டியது என்னவெனில் அனைத்து இன மக்களையும், அனைத்து அரசியல் கட்சிகளையும் ஒன்றிணைத்து நாட்டில் பிரச்சினைகள் எதுவுமின்றி, அமுல்படுத்தப்படவுள்ள 19வது அசியலமைப்புக்களுக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்று கொள்வதற்கான குறுகிய கால வேலைத்திட்டமே இந்த தேசிய அரசாங்கம் என அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

அத்துடன் தேசிய அரசாங்கம் 100 நாள் வேலைத்திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது எனவும், தற்போதுள்ள தேசிய அரசாங்கம் தேர்தலின் பின்னரும் தேசிய அரசாங்கமாகவே காணப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இலங்கையின் வரலாற்றிலேயே மாற்றத்தை ஏற்படுத்தி உலகலாவிய ரீதியில் வாழ்த்து தெரிவிக்கும் ஒரு தலைவராக உருவெடுத்துள்ளார்.

மைத்திரி அரசாங்கத்தில் இரவில் நடமாடும் வெள்ளை வேன் கலாச்சாரத்தை இல்லாதொழித்து மக்கள் அச்சமின்றி நாளைய தினம் என்று ஒன்று உண்டு, நாளை காலை தூக்கத்திலிருந்து எழும்பலாம் எனும் நம்பிக்கையில் நித்திரைக்கு செல்லும் சந்தர்ப்பத்தை வழங்கியுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இலங்கைக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குவோம் என கட்டார் அரசாங்கமும் தற்போது தெரிவித்துள்ளது.

இதேவேளை மஹிந்த ராஜபக்ச தனக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு அதிகாரிகள் போதாது என தெரிவித்துள்ளார், இவ்வாறு தெரிவிக்க அவர் யார் மக்களால் தோற்கடித்து விரட்டப்பட்ட ஒரு ஜனாதிபதி. அவர் ஓய்வு பெற்ற ஜனாதிபதியல்ல, தற்போது தோற்று போயுள்ள ஜனாதிபதிக்கு 212 பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில் அவர்களின் எண்ணிக்கை பற்றாக்குறையாகவுள்ளது என தெரிவித்துள்ளார்.

ஏனைய முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட சலுகைகளை விட அதிகளவிலான சலுகைகள் மகிந்த ராஜபக்ஷவிற்கு வழங்கப்பட்டுள்ளன. இவை அவருக்கு போதவில்லையாம், அவர் உள்ளதை கொண்டு திருப்தி பெற தெரியாத முன்னாள் ஜனாதிபதி என அசாத் சாலி குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் டெம்பல் கிறின் பாடசாலையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி செயலாளர் மற்றும் மகிந்த ராஜபக்ஷவின் உயரதிகாரி காமினி செனரத் ஆகியோரை உடனடியாக கைது செய்ய வேண்டும்.

ஒரு நாட்டின் தலைமைத்துவம் சரியாக இருந்தால் மாத்திரமே ஏனையவர்கள் சரியாக இருப்பார்கள், தலைவரே திருடன் என்றால் ஏனையோர் எப்படி நேர்மையானவர்களாக இருக்க முடியும் என அசாத் சாலி கேள்வியெழுப்பியுள்ளார்.

முன்னாள் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த உள்ளிட்ட சில ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்கள் இந்த அரசாங்கத்தை மேலும் ஒரு வருடத்திற்கு ஆட்சியலமர்த்த திட்டமிட்டு வருகின்றனர், இவர்கள் அடுத்த பொது தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி வெற்றி பெறும் என மனக்கோட்டை கட்டி வாழ்ந்து வருகின்றனர்.

கடந்த முறை அடுத்த போயாவுடன் முடிந்தது என்று ஐக்கிய தேசிய கட்சியில் சிலர் தெரிவித்து வந்தார்கள் ஆனால் அது 15 வருடத்தை கடந்தது, அது போலத்தான் சிலர் 100 நாளில் முடிந்து விடும் என தற்போது கோஷமிட்டு வருகின்றார்கள்.

19வது அரசியலமைப்பு சட்ட திருத்தத்தை கொண்டு வரும் சந்தர்ப்பத்தில் அனைவரும் மிகவும் அவதானத்துடனேயே இருக்க வேண்டும்.

தமிழ், முஸ்லிம் மக்களுக்கு எவ்வித பாதிப்புகளும் இந்த அரசியலமைப்பில் ஏற்படுவதற்கு இடமளிக்க கூடாது, விருப்பு முறையிலிருந்து தொகுதிவாரி முறைமைக்கு மாற்றப்பட்டால் அதில் முஸ்லிம்களுக்கு பாராளுமன்றத்தில் தற்போதுள்ள முஸ்லிம் உறுப்பினர்களின் எண்ணிக்கையை பெற்று கொள்ள முடியுமா, கூடுதலான எண்ணிக்கையிலிருந்து குறைவான உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கு நாங்கள் இடமளியோம் எனவும் மத்திய மாகாண சபை உறுப்பினர் தெரிவித்துள்ளதுடன்,

14 வீதமான தமிழ் மக்கள் காணப்படுவதினால் அதற்கேற்பவே அவர்களின் பிரதிநிதிகளும் தெரிவு செய்யப்பட வேண்டும் இந்த எண்ணிக்கையை குறைப்பதற்கு தமிழ் பிரதிநிதிகளும் இடமளிக்க மாட்டார்கள்,

எனவே இது குறித்து பேச வேண்டும் எனவும், 19வது அரசியலமைப்பு கொண்டு வரப்படுவதினால் தமிழ், முஸ்லிம் மக்களுக்கு எவ்வித பாதிப்புகளும் ஏற்பட கூடாதென ஜனாதிபதியும் தெரிவித்து வருகின்றார்.

அத்துடன் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் ஒற்றுமையாக செயற்படுவதற்கான வேலைத்திட்டத்தை நான் கொண்டு வந்துள்ளேன் என ஜனாதிபதி மைத்தி்ரிபால சிறிசேன இலங்கையில் ஆட்சியமைத்த எந்தவொரு தலைவரும் தெரிவிக்காத கருத்தையே முன்வைத்து வருகின்றார் என மத்திய மாகாண சபை உறுப்பினர் அசாத் சாலி குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.