Header Ads



சந்திரிக்காவுக்கு, பஷீர் சேகுதாவூத் வழங்கியுள்ள சான்றிதழ்

-TM-

புதிய ஆட்சி மீதுள்ள  மோகம் பெரும்பான்மையின  மக்களுக்குள் மெல்ல மெல்ல தணிந்துபோகத் தொடங்கியுள்ளதாக முன்னாள் உற்பத்தித்திறன் ஊக்குவிப்பு அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பஷீர் சேகுதாவூத் தெரிவித்தார்.

மட்டக்களப்பு, ஏறாவூர் பிரதேச செயலக கலாசார பேரவையின் வருடாந்த கலை இலக்கிய விழா, ஏறாவூர் வாவிக்கரையோர பூங்காவில் நடைபெற்றது. இங்கு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

'100 நாட்களுக்கு மேல் இந்த அரசு நீடிக்குமாக இருந்தால், 100 நாட்களுக்கு அடுத்து வருகின்ற நாட்களில் அவசரமாக தீர்த்துவைக்கின்ற பிரச்சினைகளில் இனப்பிரச்சினைக்கு முக்கியத்துவம் அளித்து, மத்தியில் இருக்கின்ற புதிய அரசு புத்தியுடன் நடக்கவேண்டும் என்று வடக்கு,  கிழக்கு மற்றும் மலையக சிறுபான்மை இனத்தவர்கள்  சார்பாக நான் வேண்டுகோள் விடுக்கின்றேன்.

இந்தப் புதிய அரசாங்கத்தின்  மீது பெரும்பான்மையின மக்களுக்கு வெறுப்புணர்வு  ஏற்படுவதற்கு  முன்பாக சிறுபான்மையின மக்களின் விடயத்தில்  முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க  அக்கறை காட்டவேண்டும் என்று  விநயமாக நான் வேண்டிக்கொள்கின்றேன்.

இலங்கையில் சமாதானத்தேவதை என்ற பட்டத்துக்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா  அம்மையார் பொருத்தமானவர்.   யுத்தம் உக்கிரமாக இருந்த அன்றைய சூழ்நிலையில் அரசியலுக்குள் நுழைந்து சமாதானப் புறாவாக அவர் வலம் வந்தார். தமிழ் பேசும் மக்களாலும் சமாதானத்தை விரும்புகின்ற பெரும்பான்மையின மக்களாலும் விரும்பப்பட்ட இலங்கை மாதாவாக அவர் விளங்கினார்.

அத்துடன், சிங்கள கடும் போக்குவாதத்தை தலை நிமிரவிடாமல்,  நசுக்கி வைத்திருந்தார்; என்ற பெருமையும் அவரை சாரும்.

மேலும், இலங்கையில்  புதிதாக ஆட்சி அமைக்கின்ற அரசுகள் இனப்பிரச்சினை தீர்வு விடயத்தில் காலத்தை இழுத்தடிக்குமாக இருந்தால், அபிவிருத்தியிலிருந்து  அனைத்து செயற்பாடுகளும் தோல்வியில்  முடிவடையும்.

காலஞ்சென்ற முன்னாள்  ஜனாதிபதி பிரேமதாஸ தொடக்கம் யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்ததன் பின்னர் கோலோச்சிய மஹிந்த ராஜபக்ஷவரை ஆட்சி புரிந்த அனைவரும் இனப்பிரச்சினைக்கான  தீர்வு விடயத்தை இதயசுத்தியுடன் அணுகியிருந்தால்,  இலங்கையில் சமாதானம் ஏற்பட்டிருக்கும்.

இப்போதுள்ள  தேசிய அரசாங்கம் இன்னும் விஸ்தரிக்கப்படுகின்றபோது,  அதைப் பயன்படுத்தி அவசரமாக இனப்பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டும்.

உள்ளக சுயநிர்ணய உரிமையுடன் அனைத்துச்  சமூகங்களும் இணைந்து வாழ்கின்ற சூழ்நிலையை அவசரமாக ஏற்படுத்தினால்,  இந்த நாடு நிம்மதியடையும். அப்பொழுது வெளியுலகம் எங்களுக்கு பாடம் சொல்லித்தர வேண்டிய சூழ்நிலை இருக்காது'  என்றார்.

இந்த நிகழ்வில்  கிழக்கு மாகாணசபையின்  பிரதித் தவிசாளர் எம்.எஸ். சுபைர், மட்டக்களப்பு மாவட்டச் செயலாளர் சறோஜினிதேவி சார்ள்ஸ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

No comments

Powered by Blogger.