Header Ads



'நெஞ்சைப் பிழியும், சோகம்'

சிரியாவில் புகைப்படம் எடுக்க குறிபார்த்த கேமராவை துப்பாக்கி என கருதிய ஒரு சிறுமி தனது கைகள் இரண்டையும் தலைக்கு மேலே தூக்கி சரணடையும் பாணியில் நிற்கும் புகைப்படம் அந்நாட்டில் குழந்தைகள் பட்டுவரும் துன்பத்தையும், வேதனையையும் தோலுரித்துக் காட்டியுள்ளது. 

உள்நாட்டுப் போரினால் சிரியா மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள மக்களை மொத்த உலகமும் கைவிட்டு விட்டதாக ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி-மூன் வேதனை தெரிவித்துள்ளார். 

2011-ல் சிரியாவில் அமைதியான வழியில் அந்நாட்டு அரசுக்கு எதிராக ஆரம்பித்த மக்கள் போராட்டம் பின்னாட்களில் பெரும் உள்நாட்டுப் போராக வெடித்தது. இதன் காரணமாக இன்று வரை அந்நாட்டு அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டு வருகின்றனர். 

நான்கு ஆண்டுகளையும் கடந்து நடைபெற்று வரும் இப்போரில் இதுவரை 2 லட்சத்திற்கு மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டதாகவும், 40 லட்சத்துக்கு மேற்பட்டவர்கள் அகதிகளாக பக்கத்து நாடுகளுக்கும், 7.6 மில்லியன் மக்கள் உள்நாட்டிலேயே அகதிகளாகவும் இடம்பெயர்ந்து வசித்து வருகின்றனர். 

சிரியாவின் பள்ளிகள், ஆஸ்பத்திரிகள் கூட இருதரப்பு தாக்குதலில் இருந்து தப்பிக்கவில்லை. இங்குள்ள குழந்தைகள் கதை புத்தகங்களையோ, கார்ட்டூன் படங்களையோ அறிந்ததில்லை. மாறாக, உடல்களில் இருந்து சதை பிய்ந்து தொங்க, ரத்த காயங்களுடன் உயிருக்கு போராடும் முதியோர் மற்றும் குழந்தைகளின் மரண வேதனையைதான் கண்டு வருகின்றனர். 

இவர்கள் வசந்தகால பூப்புகளையோ, புல்லினம் பாடும் பூபாள ராகத்தையோ, வானவில்லையோ கண்டும் கேட்டும் ரசித்ததில்லை. சீறிப்பாயும் ஏவுகணைகள் மற்றும் ராக்கெட் வெளியிடும் கந்தக புகை, பீரங்கிகளின் காதை துளைக்கும் குண்டின் முழக்கம், வீடுகள் தீக்கிரையாகி கொளுந்து விட்டு எரியும் தீயின் கோர நாக்கு ஆகியவற்றை தினந்தோறும் கண்டு, பீதியில் உறைந்துப் போய் கிடக்கின்றனர். 

சமீபத்தில், இங்குள்ள மக்களின் வாழ்க்கை நிலை எப்படி உள்ளது? என்பது தொடர்பாக செய்தி சேகரிக்க காசாவை சேர்ந்த புகைப்பட நிருபரான நாடியா அபு ஷபான் என்பவர் சிரியாவில் உள்ள ஒரு நகரத்துக்கு சென்றிருந்தார். அங்கு குண்டு வீச்சில் சிதிலம் அடைந்த ஒரு பகுதிக்கு சென்ற அவர், ஒரு தெருவில் தனியாக சோகத்துடன் நின்றிருந்த சுமார் 4 வயது சிறுமியை தனது கேமராவால் படம் பிடிக்க நினைத்தார். 

அதற்கான கோணத்தை தயார் செய்து, சிறுமியை கேமரா லென்சால் குறிபார்த்தார். துப்பாக்கி முனையில் சிக்கிக் கொண்டவர்கள் எதிரியிடம் சரணடையும் பாணியில் கைகள் இரண்டையும் தனது தலைக்கு மேலே உயர்த்திய அந்த சிறுமி திகிலில் அழும் நிலைக்கு சென்று விட்டாள். 

நெஞ்சை பிழியும் இந்த புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள நாடியா அபு ஷபான், சிரியாவில் குழந்தைகளின் வாழ்க்கை நிலை எப்படி உள்ளது? என்பதை விளக்க இந்த புகைப்படம் ஒரு சோற்றுப் பதம் என அவர் விளக்கக் குறிப்பும் பதிவு செய்துள்ளார். 

அவரது இந்த பதிவினை உலகெங்கிலும் உள்ள பல்லாயிரக்கணக்கானோர் ’ரிடுவீட்’ செய்து வருகின்றனர்.

4 comments:

  1. சிரியா அமைதியாக இருந்த நாடு. அழகான மக்கள். அங்கே இருந்தவர்கள் சுன்னிகளா, ஷியாக்களா என்பது குறித்தெல்லாம் யாரும் கவலைப் பட்டதும் இல்லை, அவர்கள் அனைவரும் மனிதர்களாக பார்க்கப் பட்டார்கள்.

    ஆனால் திடீர் என்று எங்கிருந்தோ ஒரு விச வித்து அங்கே விதைக்கப் பட்டது, அசாத் திடீர் என்று கொடுங்கோலன் ஆனான், ஷியா சுன்னி என்று புனிதப் போர் பிரகடனமாகியது, உள்நாட்டுப் பிரச்சினை என்பதைத் தாண்டி உசார் மடியார்கள் ஜிஹாதிகள் என்ற பெயரில் ஐரோப்பாவில் இருந்தெல்லாம் அங்கே செல்ல வைக்கப் பட்டார்கள்.

    அழகான ஒரு நாடு, சவூதி - ஈரான் பலப் பரீட்சையில் அநியாயமாக சிக்கி சின்னாபின்னமாகிக் கொண்டு இருக்கின்றது. ஷியா - சுன்னி என்பதெல்லாம் சிலரின் அரசியல் தேவைகளுக்காக பூதாகரமாக்கபப்ட்ட பிரச்சினைகளே தவிர, அவை பற்றி கடந்த நான்கு வருடங்களுக்கு முன்னர் சிரியாவில் எந்தப் பொதுமகனும் கவலைப் பட்டதில்லை.

    இன்று மிகக் கொடிய ஷியா வெறியன் என்று சொல்லப்படும் அஷாதின் தந்தை ஆட்சியில் இருக்கும் பொழுதுதான், அஹ்லுஸ் சுன்னாவின் மிகப்பெரும் அறிஞரும், முஹத்திசீனுமாகிய நாஸிருத்தீன் அல்பானி அவர்கள், சவுதியில் இருக்க முடியாது என்று முரண்பட்டு, அங்கிருந்து வெளியேறி சிரியாவில் பலவருடம் தங்கியிருந்து தமது ஆய்வுகள், கல்வி நடவடிக்கைகளை மேட்கொண்டார்கள். அப்பொழுது இந்த ஷியா சுன்னி வேறுபாடு எங்கே இருந்தது?

    ReplyDelete
  2. Yaa Allah save the innocence

    ReplyDelete
  3. சகோதரர் அவர்களே! ஒரு பிரதேசத்தின் வரலாறு தெரியாமல் பேசுவதைத் தவிர்த்துக்கொள்ளுங்கள். ஷீஆ, ஸுன்னி வேறுபாடு அரசியல் ரீதியானது என்று நீங்கள் சொல்வது ஷீஆவையும் ஸுன்னத் வல் ஜமாஅத்தின் கொள்கைகள் உங்களுக்குத் தெரியாது என்று தெளிவாகச் சொல்கிறது. இது இந்தக் காலத்தில் வாழும் மக்களிடமுள்ள முஸீபத் எந்த விடயத்தில் அறிவில்லையோ அந்த விடயத்தில்தான் அதிகமாகப் பேசுகிறார்கள். வெறும் ஊகங்களையும் வதந்திகளையும் அறிவாக நினைத்துக்கொள்கிறார்கள். அல்லாஹ்தான் எம்மைப் பாதுகாக்க வேண்டும். ஸிரியாவில் வெடித்த புரட்சி அரபு வசந்தத்தின் போது உருவானது ஈரானின் முழுப் பலத்துடன் ஆட்ச்சி செய்த பஸரை பாதுகாக்க ஈரான் முழுமையாக முயற்சித்தது. அதற்கு அவரது தந்தையின் ஆட்ச்சியைப் பற்றி நீங்கள் வாசித்தால் எந்த அளவு அவர் அஹ்லுஸ்ஸுன்னாக்களைக் கொன்றொளித்துள்ளார் என்பதைக் காண்பீர்கள். அல்லாஹ் போதுமானவன்.

    ReplyDelete

Powered by Blogger.