Header Ads



பாராளுமன்ற தேர்தல் தொடர்பில் ஜனாதிபதிக்கும், ஐக்கிய தேசிய கட்சிக்கும் முரண்பாடு..??

இலங்கையில் தேர்தல் முறையில் திருத்தம் கொண்டுவந்ததன் பின்னரே புதிய பொதுத் தேர்தல் நடத்தப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.

நேற்று புதன்கிழமை கூடிய அமைச்சரவைக் கூட்டத்தின்போது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த முடிவை அறிவித்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியும் தேர்தல்கள் ஆணையாளரும் சட்டமா அதிபரும் தலைமை நில-அளவையாளரும் புதிய தேர்தல் முறை பற்றி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகவும் அவர் கூறினார்.

'தொகுதிவாரி பிரதிநிதித்துவ முறையில் ஒவ்வொரு தொகுதிக்கும் ஒருவர் தெரிவாகும்படியாக, விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையையும் கலந்த தெரிவு முறையின் கீழ் இந்தக் காலப் பகுதியிலேயே வரும் பொதுத் தேர்தலை நடத்துவது தொடர்பில் ஜனாதிபதி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்' என்றார் ராஜித்த சேனாரத்ன.

புதிய அரசாங்கம் முன்னெடுத்துவருகின்ற 100-நாள் வேலைத்திட்டத்தின் கீழ், ஏப்ரல் 23-ம் திகதி தற்போதைய நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, புதிய தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட வேண்டும்.

அவ்வாறே, மார்ச் 17-ம் திகதி புதிய தேர்தல்முறைக்கான சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு விரைவில் நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் 100-நாள் வேலைத்திட்டம் கூறுகின்றது.

இந்த பின்னணியில், தேர்தல் முறை மாற்றத்தில் ஏற்படக்கூடிய தாமதத்தைக் கருத்தில் கொண்டு, பழைய முறையின் கீழேயே தேர்தலை நடத்திவிட்டு, புதிய அரசாங்கத்தின் கீழ் தேர்தல் முறையை மாற்றலாம் என்கின்ற யோசனையையும் சில தரப்பினர் முன்வைத்து வருகின்றனர்.

'தேர்தல் உரிய காலத்தில் நடக்கவேண்டும்': ஐதேக

எனினும், புதிய தேர்தல் முறையை விரைவில் அறிமுகப்படுத்திவிட முடியும் என்று தேர்தல்கள் ஆணையாளர் ஜனாதிபதியிடம் நம்பிக்கை தெரிவித்துள்ளதாக அமைச்சர் ராஜித்த சேனாரத்ன கூறுகின்றார்.

'ஆகாயத்திலிருந்து மேற்கொள்ளப்படும் நில அளவீட்டு முறை இங்கு இருக்கின்றது. மக்கள் சனத்தொகை விகிதாசாரம், நிலப்பரப்பு போன்றவற்றை கணனி மூலம் விரைவில் கணித்துவிட முடியும்' என்றார் அமைச்சரவை பேச்சாளர்.

புதிய தெரிவுமுறையின் கீழ் நடத்துவதாக இருந்தால் தேர்தலை சிறிது காலம் தள்ளிவைப்பது ஒன்றும் பிரச்சனையாக இருக்காது என்றும் ராஜித்த சேனாரத்ன கூறியிருக்கிறார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிலைப்பாடு இப்படியாக இருந்தாலும், ஏற்கனவே உடன்பட்ட காலத்துக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று புதிய அரசாங்கத்தின் முக்கிய பங்காளியான ஐக்கிய தேசியக் கட்சி கூறுகின்றது.

'100 நாட்களுக்குள் செய்யவேண்டியவற்றை செய்துமுடிக்க நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். நிறைவேற்று ஜனாதிபதிமுறை மாறவேண்டும், தேர்தல் முறை மாறவேண்டும். அவ்வாறே தேர்தலை உரிய காலத்தில் நடத்தவேண்டும்' என்றார் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் கபீர் ஹஷீம்.

புதிய தேர்தல் முறையைக் காரணம் காட்டி தேர்தலை நடத்தாமல் இருக்கமுடியாது என்றும் அமைச்சர் கபீர் ஹஷீம் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.