Header Ads



இன நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேலைத்திட்டங்களை புதிய அரசாங்கம் முன்னெடுத்துள்ளது - ஜெனிவாவில் மங்கள


ஐக்கிய நாடுகள் சபையின் 28 வது மனிதவுரிமை தொடர் இன்று நடைபெற்று வருகின்றது. புதிய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர், மனித உரிமை தொடர்பில் முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் இலங்கை மக்கள் மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தை  பெருவாரியான வாக்கு வீதத்தில் தோற்கடித்து மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாக தெரிவு செய்தனர். மோதல்கள் இடம்பெற்ற வடக்கு, கிழக்கு உட்பட முழு நாட்டு மக்களும் புதிய ஜனாதிபதி தெரிவு செய்துள்ளார்.

நாட்டின் புதிய அரசாங்கம், நாட்டு மக்களின் பேச்சுரிமை, ஜனநாயகம், ஊடக சுதந்திரம், உள்ளிட்ட மனித உரிமைகளை பாதுகாக்கும். இனப் பாகுபாடு இன்றி அனைவருக்கும் சம உரிமை அளிப்பத்தில் இந்த அரசு உறுதியாக உள்ளது. இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான வேலைத்திட்டங்களை புதிய அரசாங்கம் முன்னெடுத்துள்ளது.

கடந்த அரசாங்கம் பாரிய அளவில் மனித உரிமைகளை மீறி வந்தது. உலக மனித உரிமை அமைப்புகள், மனித உரிமை ஆணையாளர், புலம்பெயர் தமிழர்கள் இலங்கைக்கு விஜயம் செய்து நிலைமைகளை  கண்டறிந்து இலங்கைக்கு உதவ வேண்டும் எனவும் மங்கள சமரவீர கோரிக்கை விடுத்துள்ளார்.

ராஜபக்ச ஆட்சியில் இடம்பெற்ற மனிதவுரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணைகள் நடாத்தப்படும். மைத்திரி ஆட்சி பொறுப்பேற்று 48 நாட்களில் சமூக மக்களின் தனி உரிமைகளை பாதுகாப்பதில் மிகுந்த அக்கறை கொண்டு செயற்பட்டு வருகின்றது.

ஐக்கிய நாடுகள் வரையறுத்துள்ள மனிதவுரிமை சட்ட திட்டங்களை இலங்கையிலும் முழுமையாக பின்பற்றுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம். மனித உரிமை மீறல்கள் தொடர்பாக விசாரணை நடத்த நம்பகமான உள்நாட்டு விசாரணை கட்டமைப்பை ஏற்படுத்த  இலங்கை அரசாங்கம் முனைப்புகளை மேற்கொண்டுள்ளது.

நல்லிணக்கம் மற்றும் பொறுப்பு கூறல் விடயத்தில் உலகத் தலைவர்களின் ஒத்துழைப்பு மற்றும் உதவிகளையும் இலங்கை அரசு எதிர்பார்த்துள்ளது. மோதல்கள் இடம்பெற்ற வடக்கு, கிழக்கு பகுதிகளில் சிவில் நிர்வாகத்தை ஏற்படுத்துவதற்காக முதல் கட்ட நடவடிக்கையாக இந்த மாகாணங்களுக்கு சிரேஷ்ட சிவில் அதிகாரிகள் இருவர் ஆளுனர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் உள்நாட்டில் இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் அதியுயர் பாதுகாப்பு வலயங்களை குறைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றும் வகையில், அதியுயர் பாதுகாப்பு வலயத்தில் 1000 ஏக்கர் நிலத்தை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதேவேளை இலங்கை, நாட்டில் ஐக்கிய மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்த சர்வதேச உதவிகளை எதிர்பார்த்துள்ளது. நாட்டில் நல்லிணக்க செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக தென் ஆபிரிக்காவின் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் செயற்பாடுகளை இலங்கை மேற்கொண்டுள்ளது.

இதனடிப்படையில், தென் ஆபிரிக்கவின் சர்வதேச ஒத்துழைப்புக்கான பிரதியமைச்சர் அண்மையில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டார். இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு ஐ.நா மனித உரிமை ஆணையாளருக்கு அழைப்பு விடுத்துள்ளோம், ஐ.நா பிரதிநிதியொருவர் தற்போது இலங்கைக்கு விஜயம் செய்துள்ளதாகவும் மங்கள சமரவீர குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.