Header Ads



அமெரிக்காவுடன் பேச்சு நடத்தத் தயார் - அல் அஸாத்

அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாக சிரியா அதிபர் பஷார் அல்-அஸாத் தெரிவித்தார். அமெரிக்க தொலைக்காட்சி நிறுவனமான சிபிஎஸ்ஸூக்கு அவர் அளித்த பேட்டியில் இதைத் தெரிவித்தார்.

சிரியா அதிபர் அல்-அஸாதை, சிபிஎஸ் தொலைக்காட்சியின் மூத்த செய்தியாளரான சார்லி ரோஸ் பேட்டி கண்டுள்ளார். அதில் அல்-அஸாத் கூறியிருப்பதாவது:

பேச்சுவார்த்தை என்றாலே பரஸ்பரம் மரியாதை செலுத்துவதாகும். எல்லா பேச்சுவார்த்தையும் நன்மை தரக் கூடியதுதான்.

இதுவரை எங்களுடன் பேச்சு நடத்த அமெரிக்கா முன்வரவில்லை. சிரியாவுக்கும் அமெரிக்காவுக்கும் நேரடியாகத் தொடர்பு இல்லை. ஆனால் அமெரிக்காவுடன் பேச்சு நடத்த சிரியா தயாராக உள்ளது என்றார்.

அல்-அஸாதின் பேட்டி வரும் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 29) ஒளிபரப்பாகும்.

சிரியாவில் அரசுக்கு எதிராக கிளர்ச்சி நடைபெறத் தொடங்கி நான்கு ஆண்டுகளுக்கும் மேலாகிறது. மேற்கத்திய நாடுகளின் ஆதரவுடன் ஆயுதமேந்திப் போராடி வரும் கிளர்ச்சியாளர்களுக்கும் அரசுப் படையினருக்கும் இடையே நடைபெற்று வரும் சண்டையில் 2 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்ததாக ஐ.நா. தெரிவித்துள்ளது.

அந்நாட்டில் அமைதி திரும்ப வேண்டுமானால், அதிபர் அல்-அஸாதுடன் பேச்சு நடத்த வேண்டியது அவசியம் என்று அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி கடந்த மார்ச் 15-ஆம் தேதி தெரிவித்திருந்தார்.

உலக அளவில் இக்கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, அல்ஃ-அஸாதுடன் நேரடியாகப் பேச்சு நடத்தப்பட மாட்டாது என்றும், அவரது அரசில் இடம் பெற்றுள்ள அதிகாரிகளுடன் பேச்சு நடத்தப்படலாம் என்றும் அமெரிக்க வெளியுறவுத் துறை விளக்கமளித்தது.

சிரியா அரசு - கிளர்ச்சியாளர்கள் இடையேயான பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்ய ரஷியா முயற்சியெடுத்து வருவது குறிப்பிடத் தக்கது.

No comments

Powered by Blogger.