Header Ads



சவூதி அரேபிய சட்டமும், குற்றம்செய்த இலங்கையர்களும்..!

-ரியாத்திலிருந்து இனியவன் இஸார்தீன் -

சவூதி அரேபியாவில்  மரண தண்டனை விதிக்கப்பட்ட மூதூர் றிஸானா நபீக்கின் விடயம் இறந்த காலத்துச் சோகம் என்றாலும் அது  காலம் கடந்தாலும் நமக்குள்; வலிக்கிற ரணமாகவே  இருக்கின்றது. அந்த வலி உற்றவனுக்குத் தெரிந்திருக்கலாம் பெற்றவனுக்குத் தெரிந்திருக்கலாம் உணர்ந்தவனுக்கும் கூட தெரிந்திருக்கலாம். ஆனால் கோட்டுப் போட்டுக் கொண்டு சவூதி சுற்றிவிட்டுப் போன மற்றவர்களுக்குத் தெரிந்திருக்காது என்பதுதான் எதார்த்தம். றிஸானாவுக்கு சவூதியில் நிறைவேற்றப்பட்ட மரண தண்டனை சட்டத்தின் பெயரால் செய்யப்பட்ட படுகொலை என்றும் செய்யாத குற்றத்திற்குக் விதிக்கப்பட்ட அநீதி  என்றும் மனித நாகரீகத்துக்கெதிரான  கொடுஞ்செயல் என்றும்; சவூதிஅரசினால் ஓர் ஏழைப் பெண்ணுக்குக்  கொடுக்கப்பட்ட பிழையான தீர்ப்பு என்றும் பலர் தத்தமது  கருத்துக்களால் சொற்போர் செய்து கொண்டிருந்தார்கள். ஆனால்; ஏழைகளின் வறுமை போக்க நாம் நமது உழைப்பிலிருந்து ஸதகா - ஸக்காத் போன்ற ஏழை வரி வழங்காமல் போனதற்கும், வாழ வேண்டிய ஒரு ஏழைக் குடும்பத்தை வறுமையில் வாட்டி வதைத்ததற்கும்,  தனிமையி;ல் கடல் தாண்டிச் சென்ற பெண்ணை மரண தண்டனைக்கு  காவு கொடுத்ததற்கும், இலங்கை இஸ்லாமிய சனத்தொகையில் ஒரு பெண்னை இழக்க நேர்ந்துகொண்டதற்கும் - அதன் மானம் காக்கத் தவறிய சோகத்திற்கும் யார் காரணம்?; நாம் காரணம் - நம்; சமூகம் காரணம் - முஸ்லீம்கள் காரணம் - இலங்கை அரசாங்கம் காரணம். இதில் இலங்கையர் எல்லோருக்கும் பங்கிருக்கிறது என்பதை எவரும் மறுத்தலாகாது.

மரணித்த குழந்தையின் தந்தையான சுவூதி எஜமான் றியாத்திலுள்ள ஒரு அமைச்சில் பணி புரிபவர். எஜமானும் அவரது மனைவியும் வீட்டில்; இல்லாதபோது அவர்களது 4 மாத குழந்தையைக் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்ட றிஸானாவின் முதலாம் கட்ட விசாரணையில் அவளது கையில் ஒரு பொம்மையைக் கொடுத்து எப்படிக் குழந்தையின் கழுத்தைப் பிடித்தாயோ அப்படியே மறுபடி நீ செய்து காட்டு என்று சொன்ன நீதிபதிக்கு இப்படித்தான்; பிடித்தேன் என்று றிஸானா பொம்மையின் கழுத்தைப் பிடித்துக் காட்டியிருக்கிறார். அதுமட்டுமல்லாமல் (தமிழிலும் மலையாளத்திலும் ஒரே சொற்கள் பேசுவதுண்டு) றிஸானா தனது குற்றத்தை ஒப்புக்கொண்டாரென்று நீதிமன்றத்தில் உதவிக்கிருந்த கேரளத்து மொழிபெயர்ப்பாளரும் கூறியிருக்கிறார். ஆனால் இரண்டாவது விசாரணையின்போது தான் குழந்தையைக் கொல்லவில்லை என்று மறுத்திருக்கிறார். இப்படி அறபு மொழியறியாத அந்த அபலை றிஸானாவின் நா நீதிமன்றத்தில் சில முறை பிறழ்ந்திருக்கின்றது. தண்டனை நிறைவேற்றும் முன்பு அதே இடத்தில் கடைசியாக நமது இலங்கையைச் சேர்ந்த மொளலவி  ஒருவர் றிஸானாவிடம் பேசியபோது  'மன்னித்து விடும்படி சொல்லி எப்படியாவது என்னை காப்பாற்றுங்கள் நானா' என்று கூறியிருக்கிறார். அவர் சார்பாக 'அந்தப் பெண்ணின் குற்றத்தை அல்லாஹ்வுக்காக மன்னியுங்கள் என்று அங்கிருந்த எல்லோரும் மன்றாடிக் கேட்டும் அந்த எஜமான் அவர்கள் எல்லோரது கோரிக்கைகளையும் ஏற்றுக்கொள்ளாமல் தண்டனை நிறைவேற்றும்வரை மறுத்திருக்கிறார். 

றிஸானாவின் தண்டனை நிறைவேற்றுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்னர் சவூதியில் உள்ள இலங்கை முஸ்லீம் நலன் விரும்பிகள் சிலர் கடைசி முயற்சியாக தூதரகத்திற்குச் சென்று றிஸானாவின் எஜமானுடன் பேச்சு வார்த்தை நட்துவதற்குப் போவோம் வாருங்கள்; என்றழைத்தபோது 'தனக்கு நேரமில்லை' என்று மறுத்த அன்றைய இலங்கைத் தூதுவர், தண்டனை நிறைவேற்றுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர்தான்; சவூதி அரசாங்க ஆளுனரை (மரண தண்டனை நிறைவேற்றக்  கடைசியாகக் கட்டளையிடும் ஓர் உயரதிகாரி) றியாத்திலுள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்திருக்கிறார். அந்த சந்திப்பின்போது அந்த ஆரேபிய ஆளுனர் நமது இலங்கைத் தூதுவரிடம் 'இத்தனை நாளாய் நீ எங்கே போயிருந்தாய்?;' என்று ஆங்கிலத்தில் கேட்டு விசனமுற்றிருக்கிறார். 'நான் 'பிஷி' வர முடியவில்லை' என்று சொன்ன பதிலுக்குப் பின்னரும் 'இதை விட உனக்கு மிக முக்கியமான வேலை வேறென்ன இருக்கிறது?.. றிஸானாவின் விடயத்தில் இனி எதுவும் செய்ய முடியாது' என்று பலரது முன்னிலையில் நையப்புடைத்திருக்கிறார். இப்படி கோர்ட்டும் சூட்டும் போட்டுக் கொண்டு வந்த வெளிநாட்டமைச்சு உயரதிகாரிகளையும் அரசியல்வாதிகளையும்  உத்தியோகத்தர்களையும்  ஏன் இடைத் தரகர்களையும் கூட மகிந்த அரசாங்கம் அந்தப் பெண்ணைக் காப்பாற்றி வாருங்கள் என்று விமானத்தில் வழியனுப்பி விட்டிருந்த போதிலும்; அக்குழுவினரால் அந்த அபலைப்பெண் றிஸானாவின் உயிரைக் காப்பாற்ற இயலாமையால் விட்டு விட்டார்கள். அது 'விழலுக்கிறைத்த நீர்போலவே பலனளிக்காமல் போய்விட்டதை நினைத்தால் மனம் இன்னமும்தான் வருந்திக்கொண்டிருக்கிறது. ஆனால்; சீதனம் பேசியே தீர்க்கலாம் என்று நினைத்து வந்த அரச குழுமத்தின் கூடிப் பேசிய ஒரு கல்யாண மண்டப நிகழ்வு - அந்த நெறிப்படுத்தப்படாத திட்டம் -  ஆளுமையற்ற அணுகுமுறை - ஆரோக்கியமற்ற பேச்சு -பரஸ்பரமற்ற  பேரம் - ஆன்மீகநெறியற்ற பேச்சு வார்த்தை -உணர்ச்சி பூர்வமற்ற சந்திப்பு என இவை எல்லாமே றிஸானாவின் மரண தண்டனையை ரத்துச் செய்ய முடியாமல் செய்த அவர்களது பலவீனம்  என்பதை அன்று அரச சிறப்புக்குழு தங்கள் உள்ளத்தால் உணர்ந்தார்களோ என்னவோ? ஆனால் அரசு செலவழித்த பணபலத்தால் சொகுசான சுற்றுப் பயணம் மட்டும் வெற்றி பெற்றது. 

சவூதி அரேபியாவிற்கு வருகை தரும் இலங்கை முஸ்லீம் பணிப்பெண்களின் எண்ணிக்கை தற்போது கணிசமான அளவு குறைந்திருந்தாலும் ஏனெய தமிழ் சிங்கள பெண்களின் வருகை குறைவதாகத் தெரியவில்லை. இருந்தாலும் கிழக்கத்திய நாடுகளில் பணிசெய்யும் ஒட்டு மொத்த இலங்கையர்களின் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேற்பட்ட ஊதிய வருமானம் இலங்கையின் தேசிய வருமானத்தை உயர்த்துகிறது. அது இலங்கையின் அபிவிருத்தியில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. அவற்றில் சவூதி, கட்டார், குவைத், துபாய் போன்ற இஸ்லாமிய நாடுகள் இலங்கையின் அபிவிருத்தியில் பங்குகொண்டு வீட்டுத் திட்டத்திற்கும், கல்வி மேம்பாட்டுக்கும்;, பாலம் கட்டுவதற்கும், பாதைகள் அமைப்பதற்கும்  உதவி செய்திருக்கின்றன.  குறிப்பாக சவூதி  அரசாங்கம் பல்லாயிரம் வேலை வாய்ப்பு விஸாக்களையும் வழங்கி  குடும்ப விஸா  உம்றா விஸா - ஹஜ் விஸா ஆகியவற்றோடு  பொருளாதார ரீதியாகவும் பல கோடிப் பணத்தை வழங்கி உதவியிருக்கின்ற போதினிலும் உழைப்பதற்காகச் சென்ற இலங்கையர்களில் பலர் கொலை கொள்ளை திருட்டு போதைப் பொருள் தயாரிப்பு வன்முறை பாலியல் தாடர்பு வாகன விபத்துக் கொலை கடத்தல் போன்ற குற்றங்களையும் செய்துள்ளார்கள்.  வேலை தரும் எஜமானை விட்டுப் பாய்ந்தோடும் பெருவாரியான குற்றவாளிகளினதும்;, இன்னும் வேறு சட்ட விரோத குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களினதும், சிறைக் கைதிகளினதும், மரண தண்டனைக் கைதிகளினதும் எண்ணிக்கை வருடந்தோறும் ஆங்காங்கே கூடிக்கொண்டே போகின்றன.  இதனால் நமது நாட்டின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுவது மட்டுமல்லாமல் கிழக்கத்திய நாடுகளின் சட்டத்தைப் பேணாமல் அறபு நாட்வர்களின் இஸ்லாமிய கலாசார பண்பாட்டை நாம் அவமதித்துச் சீரழிப்பதாகவும் அந்நாட்டு மக்களும் அரசாங்கமும் விசனமடைகிறார்கள். 

சமீபத்தில் இலங்கையர்கள்; செய்த கொலைக் குற்றத்திற்காக ஜோர்தானில் ஒரு பெண்ணுக்கும் குவைத்தில் இன்னொரு பெண்ணுக்கும் ஏன் சவூதியிலும் கூட இப்போது மூன்று ஆண்களுக்கும் அந்தந்த நாட்டு நீதி மன்றங்களால் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.  சவூதியில் இப்போது இலங்கையர் மூவருக்கு விதிக்கப்பட்டிருக்கும்  மரண தண்டனையை இரத்துச் செய்வது தொடர்பாக நமது அரச சார்பில் பேச்சு வார்த்தைக் குழுவின் தலைவராக அமைச்சர் ரஃப் ஹக்கீம் தலைமை தாங்கிச் சென்றிருக்கிறார். முன்னர் றிஸானாவின் விடயத்திற்காக அனுப்பிய குழுவின் பொய்யாய்ப் போன முயற்சி போலல்லாமல் இப்போது சென்றுள்ள குழுவின் முயற்சி  மரண தண்டனையை ரத்துச் செய்வதில் ஆக்க பூர்மான பேச்சுவார்த்தை நடத்தி வெற்றி கொள்ள வேண்டுமென நாம் இறைவனிடம் பிரார்த்தித்துக்கொண்டிருக்கின்றோம். தற்போது கொல்லப்பட்ட நபர் இப்போது பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் எமன் நாட்டைச் சேர்ந்தவர் என்பதால்; அவரது உறவினரோடு இணக்கம் காண்பது இலகுவாயிருக்கும் எனவும் நம்புகின்றோம். அத்தோடு நிற்காமல் குற்றவாளிகளைக் காப்பாற்ற முயலும் இலங்கை அரசாங்கமும், வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகமும், இலங்கை தூதுவராலயங்களும்  வெளிநாடு செல்பவர்களுக்கு முன் கூட்டியே அந்தந்த நாட்டுக்குரிய உறவு, ஒழுக்கம், மத நல்லிலக்கணம், மொழி, சட்டம், தண்டனை, கலாசாரம், பண்பாடு பொளதீக சரித்திரம், கால நிலை அமைப்பு ஆகியனவற்றை நாம் பேணுவதற்கான ஆரம்ப பயிற்சி நெறி வகுப்புக்களை வழங்கும் திட்டம் ஒன்றை ஏற்படுத்தி அமுல் படுத்துவதன் மூலம் இலங்கையர்கள்; வெளிநாடுகளில்  குற்றம் செய்வதை ஒரு கணிசமான அளவு தடுக்கலாம் எனவும் நாம் நம்புகின்றோம்.

'இலங்கை பெண்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்குச் செல்வதை விரும்பவில்லை – அதைத் தடை செய்ய வேண்டும்' என்று வெளிநாட்டு வேலை வாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சர் தலதா அதுகொரள்ள தெரிவித்துள்ளமை வரவேற்கத் தக்கது. ஆனால் அதே வேளை அதற்கு மாற்று வழியாக அவசியம் அவர்களது வாழ்க்கை மேம்படக் கூடிய சிறந்த கைத்தொழில் வசதிகளை இலங்கையின் ஒவ்வொரு பகுதியிலும் அரசாங்கம் உருவாக்கிக் கொடுக்க வேண்டும். பொருளாதாரப் பிரச்சினையினாலும் குடும்ப வறுமையின் காரணத்தாலும் வெளிநாடுகளுக்கச் சென்று தொழில் புரியும் அனேக பெண்கள் அதிக ஆசை காட்டும் முகவர்களால் ஏமாற்றப்படுவதுண்டு. அதே போல் இடைத் தரகர்களுக்கும் பெரும் தொகைப் பணத்தைக் கொடுத்து விட்டுச் சென்றடைகின்றனர். கடன் பட்டும்,  வட்டிக்கு வாங்கியும்;, உடைமைகளை விற்றும் பெரும் தொகைப் பணம் கொடுத்து சிறு தொகைச் சம்பளத்துக்காகப் போகின்ற பல அப்பாவிகளுக்கு சில கொம்பனிகள் அவர்களது ஒப்பந்தப்படி குறித்த தொகை சம்பளம் கொடுப்பதில்லை. அவர்களிடம் அதிக மணி நேரம் மேலதிக வேலை  வாங்குகிறார்கள். உணவு, இருப்பிடம், சுகாதார வசதி எதுவும் கொடுக்கப்படாமல் கஸ்டப்படுகிறார்கள். இறுதியில் இல்லாமையால் தங்கள் குடும்ப செலவுக்குக் கூட எதுவும் அனுப்ப முடியாமல் கவலைப்படுகிறார்கள். சிலர் தூக்கமின்றி வேலை செய்தும் சம்பளமின்றி திண்டாடுகையில் தங்கள் நிலை பற்றி  தூதுவராலயத்தில் கூட முறையிட்டாலும் அங்கே உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை. சரியாக அவர்களுக்குரிய நீதி அல்லது தீர்வு கிடைப்பதில்லை. இப்படிப் பல மாதங்கள் கழிந்தும் விமோசனம் இல்லாத நிலையில் நாட்டுக்குத் திரும்பிச் செல்ல முடியாமலும் அவலப்படுகிறார்கள்.

குடும்பத்தில் உதவியில்லாத பெண்கள் தான் வாழவும் தன் குடும்பத்தை வாழ வைக்கவும் வெளி நாட்டு வேலை வாய்ப்பே சிறந்தது என்று நம்பி போகிறார்கள். கல்யாணம் கட்டிய இளம் பெண்கள், கணவன்மார் கை விட்ட பெண்கள், கணவனை இழந்த பெண்கள,; கல்யாணம் முடிக்காத கன்னிப்பெண்கள,; தங்கள் பச்சிளம் குழந்தைகளையும் கூட விட்டுப் பிரிந்த பல குடும்பப் பெண்களும் கூட வெளிநாட்டில் பணிபுரியும் வீடுகளிலுள்ள சில ஆண் பெண்களால் உடல் உள ரீதியாகவும் வதைக்கப்படுகிறார்கள், பாலியல் ரீதியாகவும் வன்முறைகளுக்கும் ஆளாகிறார்கள், இன்னும் சில பெண்கள் கொலை  செய்யப் பட்டிருக்கிறார்கள,; சில பெண்கள் கர்ப்பமுற்றிருக்கிறார்கள், இன்னும் சிலர் ஒழுக்கம் தவறி குழந்தையும் பெற்றெடுத்திருக்கிறார்கள்,  இவைகளையும் விட இன்னும் வௌ;வேறு பல காரணங்களால் சிலர் உடனே இலங்கைக்கும் திருப்பி அனுப்பப் பட்டிருக்கிறார்கள். ஓய்வில்லாமல் தொடர்ச்சியாக வேலை செய்யும் பணிப் பெண்கள் பலர் நோயாளிகளாக்கப் பட்டிருக்கிறார்கள், இப்படியான இழி நிலையில் தம்மை அர்ப்பணித்து வெளிநாட்டில் உழைக்கும் இலங்கைப் பெண்கள் நமது சமூகத்தில் ஒரு நவீன அடிமை வடிவங்களாகவே பரிணமித்துக்கொண்டிருக்கிறார்கள்.

எனவே சவூதி கொம்பனிகளில் வேலை செய்யும் ஆண்களுக்கு இப்போது அமுல்படுத்தப்பட்ட அரச சட்டத்திற்கேற்ப வீட்டுப் பணிப் பெண்களுக்கும் வேலை வழங்குனர்களால்; காப்புறுதி செய்யப்பட வேண்டும் என்ற சட்டம் இயற்றப்பட வேண்டும். அவர்களது இறைமையும் உரிமையும் பாதுகாப்பும் நீதியும் பாதுகாக்கப்பட இலங்கையிலுள்ள பணக்காரர்களும் பள்ளி வாசல் நிருவாக சபையினரும் சமூக சேவை இயக்கங்களும் தொழில் அமைச்சும் இலங்கை அரசாங்கமும் இனி நல்லதொரு நடவடிக்கை எடுக்கும் என நாம் நன்னம்பிக்கை கொள்வோம்.   

1 comment:

  1. வாசிக்கிறதுக்கு நல்லா இருக்கு ஆனால் அது மாதிரி நடக்கணுமே. இங்க எம்பஸிக்கு போனால் அத்தனை பேரும் ஜனாதிபதி. எவனும் அன்பாய் பேசி கஷ்டத்துக்கு உதவி பன்றவங்கள் இல்லை ரூல்ஸ் போட்ரவனுங்க தான் அதிகம் எல்லாத்தையும் மாத்தணும் எவனாவது கொம்ப்லைன் பண்ணினால் உடனே அவன மாத்தனும். வெளிநாட்டு எங்கயும் அவனை அனுப்பபடாது. இங்கு வருவது இலங்கையர்களுக்கு உதவி செய்ய ஆனால் இவநோல்ட காஸ் அடேய் யப்பா நாசம்மா போக

    ReplyDelete

Powered by Blogger.