Header Ads



ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின், பங்காளி கட்சிகள் எந்தப்பக்கம்..?

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்ததன் மூலம் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு வாக்களித்த 58 லட்சம் மக்களை காட்டிக்கொடுத்துள்ளதாக முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ஸ தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதியமைச்சர் கீதாஞ்சன குணவர்தனவின் வீட்டில் நடைபெற்ற கடந்த அரசாங்கத்தில் அங்கம் வகித்த சில கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்ட இரகசிய கூட்டம் ஒன்றில் வீரவன்ஸ இவ்வாறு கூறியுள்ளார்.

கீதாஞ்சன குணவர்தன வீட்டில் நடைபெற்ற கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் தினேஷ் குணவர்தன, விமல் வீரவன்ஸ, திஸ்ஸ விதாரண, டியூ. குணசேகர, டக்ளஸ் தேவானந்தா, வாசுதேவ நாணயக்கார, முன்னாள் மேல் மாகாண அமைச்சர் உதய கம்மன்பில ஆகியோர் கலந்து கொண்டனர்.

அங்கு கருத்து வெளியிட்ட உதய கம்மன்பில, அரசாங்கம், மகிந்த ராஜபக்ஷ மற்றும் கோத்தபாய ராஜபக்சவுக்கு எதிராக பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகிறது என குறிப்பிட்டுள்ளார்.

இப்படியானவர்களை கொண்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினருடன் எப்படி இணைந்து பணியாற்றுவது என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். நாடாளுமன்றம் கூட்டப்படுவதற்கு முன்னர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நிறைவேற்றுக்குழுவை கூட்டியிருந்தார்.

அந்த கூட்டத்தில் கலந்து கொள்வதில்லை என, கீதாஞ்சன குணவர்தன வீட்டில் நடைபெற்ற இரகசிய கூட்டத்திலேயே தினேஷ் குணவர்தன, விமல் வீரவன்ஸ, வாசுதேவ நாணயக்கார மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் தீர்மானித்திருந்தனர்.

எனினும் நிறைவேற்றுக் குழுக் கூட்டத்தில் கலந்து கொள்வது என டியூ. குணசேகர மற்றும் திஸ்ஸ விதாரண ஆகியோர் முடிவு செய்தனர். தாம் நிறைவேற்றுக்குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு, தமது நிலைப்பாடுகளை தெரியப்படுத்தி விட்டு வருவதாக இவர்கள் கூறினர்.

இதேவேளை இந்த இரகசிய கூட்டத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் எதிர்க்கட்சித் தலைவரின் கீழ் செயற்படுவதில்லை எனவும் தீர்மானம் எடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments

Powered by Blogger.