Header Ads



''மஹிந்தவுக்கு 3 முறை முடியாது'' - ஜே.வி.பி. இன்று வெளியிட்டுள்ள முக்கியமான அறிக்கை..!

ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை தோற்கடிக்க அணிதிரள வேண்டும் என ஜே.வி.பி வலியுறுத்தியுள்ளது.

ஜே.வி.பி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.

2010 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட 18வது திருத்தச் சட்டத்திற்கு அமையவே இன்றைய ஜனாதிபதி மூன்றாவது தவணைக்காக அவசரமாக தேர்தலை நடத்த போகிறார்.

எனினும் அந்த திருத்தச் சட்டம் தாரமீகமான முறையில் நிறைவேற்றப்பட்ட திருத்தச் சட்டம் அல்ல.

2010 ம் ஆண்டு ஜனவரியில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலுக்கு பின் நடைபெற்ற பொதுத் தேர்தலில் தமது கூட்டணிக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை வழங்குமாறு ஜனாதிபதி ராஜபக்ஷ மக்களிடம் கோரிக்கை விடுத்தார்.

எனினும் மக்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை அரசாங்கத்திற்கு வழங்கவில்லை.

அரசாங்கத்திற்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சிக்கு கிடைத்த வாக்குகளினால் தெரிவான நாடாளுமன்ற உறுப்பினர்களை பணத்தை கொடுத்து வாங்கி மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை ஏற்படுத்திக்கொண்டது.

பணம் உள்ளிட்டவற்றை இலஞ்சமாக கொடுத்து வாங்கிய மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை பயன்படுத்தியே அரசாங்கம் 18வது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றியது. 

இந்த மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் என்பது மக்களின் உண்மையான நிலைப்பாடுகளை பிரதிபலிக்கவில்லை என்பதால், 18வது திருத்தச் சட்டம் தார்மீக விரோதமான திருத்தச் சட்டம்.

18வது திருத்தச் சட்டத்தின் கீழ் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவசரமான தேர்தலை நடத்த தயாராகினாலும் அந்த சட்டத்தின் அடிப்படையில் கூட அவரால் இரண்டு முறைக்கு மேல் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட முடியாது.

அத்துடன் இரண்டாம் தவணைக்கான ஆறு ஆண்டு பதவிக்காலத்தை நிறைவு செய்யாது ஜனாதிபதித் தேர்தலை நடத்த முடியாது.

1978 ஆம் ஆண்டு ஜே.ஆர். ஜயவர்தன நிறைவேற்றி அரசியல் அமைப்புச் சட்டத்தின் 31 (2) பிரிவில் இரண்டு முறை ஜனாதிபதி பதவிக்கு மக்களால் தெரிவு செய்யப்பட்ட நபர், மக்களால் மீண்டும் அந்த பதவிக்கு தெரிவு செய்ய தகுதியற்றவர் எனக் கூறப்பட்டுள்ளது.

அத்துடன் அரசியல் அமைப்புச் சட்டத்தின் 92 ஏ பிரிவில் மக்களால் இரண்டு முறை ஜனாதிபதி பதவிக்கு தெரிவு செய்யப்பட்டவர், மீண்டும் தேர்தலில் போட்டியிட தகுதியற்றவர் எனக் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் 2010 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 26 ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் இரண்டாம் தவணைக்காக தெரிவு செய்யப்பட்டதும் அவர் மூன்றாவது முறை தேர்தலில் போட்டியிடும் தகுதியை இழக்கின்றார்.

இதனையடுத்து 8 மாதங்களின் பின்னர் 2010 செப்டம்பர் மாதம் 9 ஆம் திகதி 18வது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டத்தில் மேற்கூறப்பட்ட இரண்டு பிரிவுகள் நீக்கப்பட்டாலும் மகிந்த ராஜபக்ஷ மூன்றாவது முறையாக போட்டியிடவும் பதவிக்கு தெரிவு செய்யப்படவும் தகுதியற்றவராகி விட்டார்.

இலங்கையின் விளக்க கட்டளை சட்டமூலத்தின் 6(3) சரத்திற்கு அமைய சட்டம் நீக்கம் ஒன்று அமுல்படுத்தப்படுவது எதிர்காலத்திற்கே அன்றி இறந்த காலத்திற்கு அல்ல எனவும் ஜே.வி.பி குறிப்பிட்டுள்ளது.

1 comment:

  1. சிறந்த விளக்கம்..!
    அப்போ அவசர அவசரமா திருத்தியது அரசியல், ஆப்புச்சட்டமா ?

    ReplyDelete

Powered by Blogger.