Header Ads



நாட்டில் சீரற்ற காலநிலை தொடருகிறது - 10 மாவட்டங்களில் அபாயம்

கடும் மழைக் காரணமாக அனர்த்தங்களை எதிர்நோக்கியுள்ள நான்கு மாவட்டங்களில் 2,435 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

காலி, மாத்தறை, களுத்தறை மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்களே பாதிக்கப்பட்டுள்ளதாக இடர்முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிபிலி தெரிவிக்கின்றார்.

இதேவேளை, கிங், நில்வலா, மற்றும் களு ஆகிய கங்கைகளின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதாக நீர்பாசன திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பத்ரா கமலதாச குறிப்பிட்டுள்ளார்.

இதன் காரணமாக  குறித்த பகுதியிலுள்ள மக்களை அவதானத்துடன் செயற்படுமாறும் அவர் கூறியுள்ளார்.

நிலவும் வானிலைக் காரணமாக ஏற்படக்கூடிய மண்சரிவு மற்றும் மண்மேடு சரிந்து விழுதல் என்பன தொடர்பில் மலையக மக்களை அவதானத்துடன் செயற்படுமாறு தேசிய கட்டட ஆய்வு நிலையம் தெரிவிக்கின்றது.

இதனால் ஏற்படவுள்ள அனர்த்தத்தை தவிர்க்க இயலாத போதிலும் பாதிப்புக்களை குறைத்துக் கொள்ள முடியும் என நிலையத்தின் மண்சரிவு எச்சரிக்கை முகாமைத்துவ பிரிவின் சிரேஷ்ட புவியியல் நிபுணர் காமினி ஜயதிஸ்ஸ குறிப்பிடுகின்றார்.

மேலும் காலி மாவட்டத்திற்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு எச்சரிக்கை இன்று காலை பத்து மணி வரை நீடிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

No comments

Powered by Blogger.