Header Ads



அமெரிக்க ஊடகவியலாளர் James Foley கொலையில் மறைந்திருக்கும் மர்மங்கள்..!

(Kalaiyarasan Tha)

ஒரு ISIS ஜிகாதிப் போராளி, James Foley இன் தலையை வெட்டிக் கொன்றதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அந்தக் காட்சிகளை படமாக்கிய ISIS, வழமை போல அந்த வீடியோவையும் யூடியூப்பில் போட்டதாக கூறப்படுகின்றது. ஆனால், அதைப் பார்த்தவர்கள் மிக மிகக் குறைவு. Google நிறுவனத்திற்கு சொந்தமான Youtube, அந்த வீடியோவை உடனே அழித்து விட்டது. 

இன்னொரு விசித்திரமான சம்பவம் நடந்தது. Twitter நிறுவனம், அந்த வீடியோவை அல்லது தலை வெட்டும் காட்சிகளை பகிர்ந்து கொள்வோரின் டிவிட்டர் கணக்கு இடைநிறுத்தப்படும் என்று அறிவித்தது. ஏற்கனவே பகிர்ந்து கொண்டவர்கள் இரண்டு நாட்களுக்கு டிவிட்டர் பக்கம் வர விடாமல் தண்டிக்கப்பட்டார்கள். 

இந்தத் தகவலை டிவிட்டரே நேரடியாக ஊடகங்களுக்கு அறிவித்திருந்தது. ஏற்கனவே சிரியாவில் ISIS பலரது தலைகளை துண்டித்து அவற்றை பகிரங்கமாக இணையத்தில் வெளியிட்டது. அவை டிவிட்டரில் பல தடவைகள் பகிர்ந்து கொள்ளப் பட்ட போதும் எந்த நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை. 

James Foley கொலைக் காட்சிகளை காட்டும், அமெரிக்க அரசினால் தேர்ந்தெடுக்கப்பட்ட புகைப்படங்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டன. அதைத் தான் தற்போது எல்லா ஊடகங்களும், சமூக வலையமைப்புகளும் பயன்படுத்தி வருகின்றன. மேலும் ISIS ஏற்கனவே பல நூற்றுக் கணக்கானோரின் தலைகளை வெட்டிய பொழுது கவனிக்காத ஊடகங்கள், ஒரு அமெரிக்கரின் கொலைக்கு மட்டும் அதிக முக்கியத்துவம் கொடுத்தன. 

2012 நவம்பர் மாதம் James Foley கடத்தப் பட்டு காணாமல்போயுள்ளார். அப்போது, சிரிய அரச படைகளே அவரைக் கடத்திச் சென்றதாக, வட அமெரிக்க ஊடகங்கள் சில அறிவித்தன. அப்படிச் சொல்வதற்கு ஒரு காரணம் இருந்தது. James Foley, இதே ISIS நண்பர்கள் கொடுத்த தகவல்களைத் தான், செய்திகளாக சேகரித்து அனுப்பிக் கொண்டிருந்தார்.  

James Foley என்ற அமெரிக்க ஊடகவியலாளரின் கொலை, உண்மையிலேயே நடந்ததா என்பதே சந்தேகத்திற்குரியது. ஆனால், அதைக் கொண்டு உலக மக்கள் முழுவதையும் உணர்ச்சிக் கொந்தளிப்பில் ஆழ்த்துவதற்கு, ஊடகங்கள் அயராது பாடுபட்டன. என்ன இருந்தாலும், அமெரிக்க இரத்தம் விலை மதிப்பற்றது அல்லவா..?

அமெரிக்கா தானே வளர்த்து விட்ட இசிஸ் எனும் பூதத்துடன் போரிட்டு அடக்கப் போவதாக தம்பட்டம் அடித்துக் கொண்டு திரிகின்றது. இது வரை காலமும், அமெரிக்க விமானங்கள் போட்ட குண்டுகள் இசிஸ் அமைப்பை நிலைகுலைய வைக்கவில்லை. யாருமற்ற பாலைவனத்தில் குண்டு போட்டால் என்ன பிரயோசனம்?

பெஷ்மேர்கா எனப்படும் ஈராக்கிய குர்திஷ் படையினர், இசிஸ் நவீன ஆயுதங்களை பயன்படுத்துவதாகவும், தம்மிடம் அந்தளவு ஆயுத பலம் இல்லை என்றும் குறைப்பட்டனர். ISIS போராளிகள், அமெரிக்க ஹம்வீ கவச வாகனங்களை பயன்படுத்துகின்றனர். சிறிய ரக ஆயுதங்களினால் அவற்றை ஒன்றும் செய்ய முடியாது. டயர் பார்த்து சுட்டால் கூட, சில்லுக்கு காற்றுப் போன நிலையிலும் 80 கிலோ மீட்டர் தூரம் ஓடிச் சென்று நிற்கும் வல்லமை கொண்டது.

ஹம்வீ கவச வாகனங்களை எதிர்த்து நிற்க முடியாமல், பல இடங்களில் பெஷ்மேர்கா படையணிகள் பின்வாங்கி ஓடியுள்ளன. தற்போது அமெரிக்காவும், பிரிட்டனும் பெஷ்மேர்கா படையினருக்கு உதவி செய்யப் போவதாக வாக்குறுதி அளித்துள்ளனர். அவை கனரக ஆயுதங்களாக இருக்குமா என்று தெரியவில்லை. 

கடைசியாக, "மனித குலத்திற்கு விரோதமான ISIS அமைப்பை முற்றாக அழிக்கப் போவதாக" அமெரிக்க அரசு சூளுரைத்துள்ளது. இதிலே முக்கியமாக கவனிக்க வேண்டியது என்னவெனில், ISIS இயக்கத்தை அழிக்க வேண்டுமானால், சிரியாவுகுள்ளே சென்றும் போரிட வேண்டி வரும் என்று அமெரிக்கா அறிவித்துள்ளது. சிரியாவில் ஒரு பகுதியையும், ஈராக்கில் ஒரு பகுதியையும் தனது இஸ்லாமிய அரசு என்று ISIS அறிவித்துள்ளமை அனைவரும் அறிந்ததே.

ஆனால், எதற்காக சிரியாவுக்குள் அமெரிக்கப் படைகள் செல்ல வேண்டும்? மிகவும் பலவீனமான நிலையில் உள்ள ஈராக் அரசுடன், சிரிய அரசை ஒப்பிட முடியாது. கடந்த ஒரு வருட கால போரில், சிரிய அரச படைகள் கணிசமான வெற்றிகளை பெற்றுள்ளன. முன்பு கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருந்த பல பிரதேசங்களை விடுவித்துள்ளன. தற்போது, சிரியாவில் ISIS கோட்டை என்று கருதப்படும் ராக்கா நகர் மீது விமானத் தாக்குதல்களை நடத்தி வருகின்றது.

ராக்கா நகருக்கு அருகாமையில் உள்ள கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த விமானத் தளம், தற்போது சிரிய அரச படைகளின் கட்டுப்பாட்டில் உள்ளது. ISIS பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவது தான், அமெரிக்காவின் உண்மையான நோக்கம் என்றால், அதனை சிரிய அரசுடன் சேர்ந்து செய்யலாமே? சிரிய அரச படைகளுக்கு ஆயுதங்களை வழங்கலாமே? 

ISIS என்பது யார்? அவர்களது கொள்கைகள் என்ன? குறிக்கோள் என்ன? இவை எல்லாம் அறியாமல், முன்னொரு காலத்தில் அமெரிக்கா அவர்களை ஆதரிக்கவில்லை. அமெரிக்கர்கள் அந்தளவு வெகுளிகளாக இருப்பார்கள் என்று நினைத்தால், நாங்கள் தான் அறிவிலிகள் ஆவோம்.  "அமெரிக்கர்களின் கட்டுப்பாட்டுக்குள் அடங்காமல் சுதந்திரமாக செயற்படுவதாக" நாங்கள் நம்பினாலும், அமெரிக்கர்களுக்கு அதனால் எந்த நஷ்டமும் இல்லை. சிரியாவை ஆக்கிரமிப்பதும், அதன் மூலம் ஈரானின் கழுத்தை இறுக்குவதும் தான், அமெரிக்காவின் நோக்கம். அதனை நிறைவேற்றிக் கொள்ள உதவக் காத்திருக்கும் ஆருயிர் நண்பன் ISIS இருக்கும் போது என்ன தயக்கம்?

இருபது வருடங்களுக்கு முன்னர், அல்கைதாவும், தாலிபானும் அமெரிக்காவால் உருவாக்கப்பட்டன. பிறகு அவற்றை எதிர்த்துப் போராடப் போவதாகக் கூறி, அமெரிக்கப் படைகள் ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்தன. அதையெல்லாம் நாங்கள் இப்போது மறந்து விட்டோம். 

"எல்லாம் அவன் செயல்!"
"அவனன்றி ஓர் அணுவும் அசையாது!"

No comments

Powered by Blogger.