Header Ads



நைஜீரியாவிலும் இஸ்லாமிய கிலாபத் - போகொஹாரம் அறிவிப்பு

நைஜீரியாவில் செயல்பட்டுவரும் போகொஹாரம் என்னும் இயக்கத்தினர் அங்கு இஸ்லாமிய தேசம் ஒன்றை நிறுவ முயற்சி செய்துவருகின்றனர். அந்நாட்டின் தெற்குப் பகுதியில் உள்ள போர்னோ மாநிலத்தின் பல பகுதிகளையும், அண்டை மாநிலமான யோபின் ஒரு நகரத்தையும் இவர்கள் தற்போது தங்கள் கட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் போர்னோ மாநிலத்தின் க்வோசா நகரத்தில் இஸ்லாமிய கலிபாவை நிறுவியுள்ளதாக அந்த இயக்கத்தின் அபூபக்கர் செகாவ் அறிவித்துள்ளார். நேற்று வெளியிடப்பட்ட 52 நிமிட வீடியோ உரை ஒன்றில் அல்லாவுக்கு நன்றி கூறும் இவர் இஸ்லாமிய ஆட்சியை நிறுவியதான இந்த அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார்.

உலக அளவிலான ஒரு பயங்கரவாதி என்று இவரை அமெரிக்கா அறிவித்திருக்க ஐ.நாவின் பாதுகாப்புக் கவுன்சிலும் இவர் மீது தடைகளை விதித்துள்ளது. அதுமட்டுமின்றி ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான அலுவலகம் க்வோசா நகரம் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருப்பதை இந்த மாத ஆரம்பத்திலேயே உறுதி செய்திருந்தது.  

முன்னெப்போதும் இல்லாதவகையில் இஸ்லாமியவாதிகள் தங்களின் திட்டத்தில் முன்னேற்றத்தைக் கண்டுள்ளனர் என்று அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.இருப்பினும் நைஜீரியாவின் ராணுவம் இந்த நிலைமையை மாற்றக்கூடும் என்றும் இவர்கள் குறிப்பிட்டுள்ளனர். 

ஆனால் கடந்த வாரம் நடைபெற்ற கலவரத்தில் தகுந்த ஆயுதங்கள் இன்றி பாதுகாப்புப் பணியில் ஈடுபட அரசு துருப்புகள் வெளிப்படையாகவே மறுத்துள்ளன என்ற தகவல்களும் வெளிவந்துள்ளன.

No comments

Powered by Blogger.