Header Ads



ஊவாவில் ஹக்கீமின் பிரசாரத் தொடக்கம், குற்ற உணர்வுக்குள் அவர் பேச்சின் அடக்கம்

(நவாஸ் சௌபி)

(பேச்சு – 01)

குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும் என்பது போன்று தன் குற்ற உணர்விலிருந்து விடுபட முடியாமல், ஊவாத் தேர்தல் பிரசார மேடையில் தூய்மையும் துணிச்சலுமற்றவராக ஹக்கீம் தன் தவறுகளுக்கு நியாயம் கூற முற்பட்டிருப்பதனை நன்கு புரிந்துகொள்ள முடிகிறது.

கடந்த 17 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஹல்துமுல்லையில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் தங்கள் மீதுள்ள விமர்சனங்களை முன்வைத்து அதற்கான நியாயங்களை கற்பிக்க முயற்சித்ததில், ஹக்கீம் தன்னை அறியாமல் தன் குற்ற உணர்வுகளையே கொட்டித் தீர்த்திருக்கும் அர்த்தங்கள் அவர் பேச்சு முழுவதிலும் அடங்கி இருப்பதனை தெளிவாகக் காணமுடிகிறது.

மக்களின் முன் தெளிவான ஒரு தலைவராக நிற்க முடியாமல் கலக்கத்துடனும், தடுமாற்றத்தைச் சுமந்த பேச்சுடனும் ஊவாத் தேர்தலுக்கான தங்களது நிலைப்பாட்டை ஹக்கீம் சரிபடுத்த முயன்றும் தனக்குள் இருந்த குற்ற உணர்வு தன்னை இழுத்துப்பிடிப்பதாகவே அவர் தன் பேச்சை முழுமைப்படுத்தி இருக்கிறார் என்பது ஆழமான உண்மை.

இதனை அவரது பேச்சுக்குள்ளிருந்து நாம் கண்டுகொள்வதோடு, அதற்கான மறுபேச்சையும் இதில் முன்வைக்கலாம் என்பதே இக்கட்டுரையின் வெளிப்பாடாகும்.

பேச்சு :  

இந்த அரசாங்கத்தில் அமைச்சராக இருக்கும் நான் உங்கள் முன்னிலையில் வந்து நாங்கள் தனித்து தேர்தலில் போட்டியிடுகிறோம் எங்களுக்கு வாக்களியுங்கள் என்று கூறும்போது, அர்சாங்கத்திற்குள் இருந்துகொண்டு இவர் இந்த வேலையைச் செய்ய வேண்டுமா? அரசாங்கத்தை விட்டு விலகினால் என்ன? என்ற விதமானங்களை பலரும் மேற்கொள்வார்கள்.

மறுபேச்சு: 

இவ்வாறான விமர்சனங்களை பலரும் மேற்கொள்வார்கள் என்பது இரண்டாம் கட்டமே. முதலில் இது ஹக்கீமுக்குள் இருக்கும் ஆகவும் பெரிய குற்ற உணர்வு என்பதே உண்மை. 

முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்துடன் இருப்பதா? இல்லையா? என்பதல்ல பிரச்சினை அதன் இருப்பில் சமூகம் எத்தகைய நிலைப்பாட்டை அடைகிறது என்பதுதான் இங்குள்ள கேள்வி. 

தற்போதுள்ள மஹிந்தவின் அரசாங்கத்தில் முஸ்லிம் சமூக இருப்பும் அதன் நிலைப்பாடும் ஆபத்தான ஒன்றாவே இருந்து வருகின்றது. இதனை அரசுக்கும் முஸ்லிம் காங்கிரஸூக்குமுள்ள ஆட்சி உறவின் மூலம் தடுக்கவும் முடியாமல் தட்டிக் கேட்கவும் இயலாமல் முஸ்லிம் காங்கிரஸ் அரசுடன் இருப்பதன் பெயரால் ஏமாற்றப்படும் நிலையில் அரசுடன் இருப்பதன் அர்த்தம் என்ன? என்பதைத்தான் ஹக்கீம் தன் குற்ற உணர்வுக்குள் தோண்டிப் பார்க்க வேண்டும்;.

தேர்தலில் தனித்துப் போட்டியிடுவது என்பது மட்டும் ஒருபோதும் தனித்துவமான அரசியலாக இருக்க முடியாது. இன்றுள்ள அரசாங்கத்தில் ஒரு அங்கமாக இருந்துகொண்டு முஸ்லிம்கள் ஓரணியில் தேர்தலை எதிர்கொள்வதில் தனித்துவ அரசியல் என்ற நிலையை அடையவும் முடியாது அதன் மூலம் தனித்துவ அரசியல் என்பதன் அர்த்தத்தை காப்பற்றவும் முடியாது.

அடுத்து, தேர்தல், தனித்துவம், அரசுடன் கூட்டு என்பதற்கு அப்பால் தலைவர்களுக்கிடையிலான உறவு, விசுவாசம், நம்பிக்கை என்பன மிகவும் முக்கியமானது. அந்தவகையில் ஹக்கீம்-மஹிந்த உறவு, அவர்களுக்கிடையிலான நம்பிக்கை விசுவாசம் என்பன எப்பொழுதும் சந்தேகமான ஒன்றாகவே இருந்துவருகின்றன. 

மஹிந்த நேரடியாக எதிர்கொண்ட கடந்த இரண்டு ஜனாதிபதித் தேர்தல்களிலும் அவருக்கு எதிராகப் பிரசாரம் செய்து அவரது அவநம்பிக்கைக்கு ஆளான ஹக்கீமால் மஹிந்த மீதான நம்பிக்கையை எச்சந்தர்ப்பத்திலும் ஏற்படுத்த முடியாமலே இருக்கிறது. 

தேர்தலின் போது எதிர்த்து நிற்பதும் ஆட்சியின் போது முட்டிக்கொள்வதுமான கைங்கரியத்தைச் செய்துவரும் ஹக்கீம் சமூகத்திற்காக மஹிந்தவின் ஆட்சியில் எதனையும் சாதிக்க முடியாது என்பது தெளிவாகத் தெரிந்த பிறகும் அரசுடன் இருப்பதன் நியாயத்தை ஒரு குற்ற உணர்வாகவே ஹக்கீமால் சுமந்துகொள்ள முடியும்.

எதிர்வருகின்ற வருட ஆரம்பத்தில் நடைபெற இருப்பதாகப் பேசப்படும் ஜனாதிபதித் தேர்தலிலும் இந்த தவறைச் செய்யக் கூடாது என்றுதான் 6 மாதகாலத்தினுள் எதுவும் நடக்கலாம் என்று பொறுமையாக இருக்கும் கருத்தை ஹக்கீம் முன்வைத்து வருகிறார். 

இதன் உண்மையான விளக்கம் என்னவென்றால், மஹிந்தவுக்கு எதிராக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் பொது வேட்பாளர் யார் என்று பார்ப்பதற்கான தந்திரம் இதில் இருப்பதுதான். வருகின்ற வேட்பாளர் மஹிந்தவை  வெற்றிபெறும் வாக்குப் பலத்துடன் இருப்பவரா? என்பதை நாடி பிடித்துப் பார்த்து அவரது வெற்றி உறுதியானது என்று கணக்குத் தெரிந்தால் மட்டுமே அவருடன் இணைவது அதுவரை அரசுடனேயே இருப்பது என்ற முடிவில்தான் இன்று ஹக்கீம் அரசில் இருக்கிறார்.

இதனால் ஏற்படக் கூடிய பாதகமான விளைவுகள் பற்றியும் நாம் சிந்திக்க வேண்டும். 

· ஆட்சியில் இறுதிவரை இருந்துவிட்டு தேர்தலின்போது வெளியேறுவது வழக்கமான ஓர் அரசியல் துரோகமாகப் பார்க்கப்படும். 

· மஹிந்தவுக்கு எதிராக நிற்பவரை ஆதரித்து அவர் தோற்றால், கட்சியையும் கட்சியிலிருப்பவர்களையும் காப்பாற்ற வேறு வழியில்லாமல் மஹிந்தவுடன் இணைய வேண்டும் என்ற கதையை கூறிக்கொண்டு மீண்டும் சமூகத்தை அடகு வைக்கும் நிலை ஏற்படும்.

இரண்டாவது ஆட்சிக் காலத்திலும் இதுதான் நடந்துகொண்டிருக்கின்றது. மஹிந்தவின் மூன்றாவது ஆட்சிக் காலம் வந்தால் இதைவிடவும் இன்னும் ஆபத்தான நிலைமைகளை எதிர்கொள்ள நேரிடலாம்.

· மாறாக மஹிந்தவுக்கு எதிரான ஜனாதிபதி வேட்பாளர் தோற்றுப் போவாரென்று அறிந்தால் அதற்காக மஹிந்தவை ஆதரித்து முஸ்லிம் வாக்குகளைப் பெற்றுக் கொடுக்கவும் முடியாது. அவ்வாறு மஹிந்தவை ஆதரிக்கும் முடிவினை எடுத்தால் இதுவரை கிழக்கு மாகாணசபை முதல் ஊவாக மாகாண சபை வரையிலான முஸ்லிம் காங்கிரஸ் பிரசாரங்களும் தேர்தல் குறித்து எடுத்த முடிவுகளும் வெறும் பொய்யாகவும் அரசியல் நாடகமுமாகவே ஆகும்.

இவ்வாறு முஸ்லிம் காங்கிரஸ் அரசுடன் இருப்பது குறித்து தீர்க்கமான முடிவினை எடுக்கும் தருணமாக இக்காலகட்டம் இருக்கிறது. மஹிந்தவிலிருந்து பிரிய முடியாமலும் மஹிந்தவை ஆதரிக்க முடியாமலும் திண்டாடும் ஒரு நிலை ஹக்கீமுக்குள் நேர்ந்துள்ளது. துப்பவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் அரசாங்கம் ஹக்கீமின் தொண்டையில் சிக்கிய முள்ளாகவே இருக்கிறது.

இந்நிலையில் ஊவாவில் தனித்து ஒன்றுபட்டு தாங்கள் போட்டியிடுவது என்று ஹக்கீம் கூறுவதில் சமூக அக்கறைகள் எதுவுமில்லை மாறாக ஏற்கனவே அரங்கேறிய அரசியல் நாடகங்களில் ஒன்றாகவே இதுவும் பார்க்கப்படும். ஹக்கீம் கூறுவது போன்று கூறினால் இது பழைய பல்லவியைப் பாடுவதாகவே தெரிகிறது.

(பேச்சு 2 தொடரும்....)

No comments

Powered by Blogger.