Header Ads



சிரியாவில் அமெரிக்க கமாண்டோக்களின், நடவடிக்கை தோல்வியில் முடிந்தது

மேற்காசிய நாடுகளில் ஒன்றான சிரியாவில், அமெரிக்க பத்திரிகையாளர், ஜேம்ஸ் போலே, அல் குவைதா ஆதரவு, ஐ.எஸ்.ஐ.எஸ்., வாதிகளால் படுகொலை செய்யப்படுவதை தடுக்கும் நோக்கில், சில நாட்களுக்கு முன், அமெரிக்க கமாண்டோ படை, சிரியாவில் ரகசிய தேடுதல் நடவடிக்கை மேற்கொண்டதும், அது தோல்வி அடைந்ததும், இப்போது தெரிய வந்துள்ளது.

சிரியாவில், அதிபர் பசார் அல் அசாத்திற்கு எதிராக, 2011ல், உள்நாட்டு கலவரம் ஏற்பட்டது. அதில் முக்கிய பங்காற்றிய, ஐ.எஸ்.ஐ.எஸ்.,  பல பகுதிகளைக் கைப்பற்றி, அரசுக்கு எதிராக சண்டையிட்டு வருகின்றனர். பயங்கரவாதிகளுக்கும், அரசு படை களுக்கும் இடையே நடைபெற்று வரும் சண்டையில், 1.7 லட்சம் போர் கொல்லப்பட்டுள்ளனர்.

அந்நாட்டிற்கு செய்தி சேகரிக்க சென்ற அமெரிக்க பத்திரிகையாளர், ஜேம்ஸ் போலே, ஐ.எஸ்.ஐ.எஸ் பிடியில் சிக்கினார். அது போல், 2012ல், ஆறு ஐரோப்பிய நாடுகளின் பத்திரிகையாளர்களும், சிக்கினர்.

கடந்த ஆண்டு, ஐரோப்பிய பத்திரிகையாளர்கள், ஐ.எஸ்.ஐ.எஸ் களால் விடுவிக்கப்பட்டனர்; ஆனால், அமெரிக்க பத்திரிகையாளர்கள் இருவர் விடுவிக்கப்படவில்லை. இதனால் அவர்கள் இருவரும், கொல்லப்படலாம் என கருதிய அமெரிக்கா, தன் கமாண்டோ படை வீரர்களை சிரியாவுக்கு அனுப்பி, அமெரிக்க பத்திரிகையாளர்களை மீட்க முயற்சித்தது.

அமெரிக்க அதிபர், பராக் ஒபாமா உத்தரவின் படி, ராணுவத்தின் சிறப்பு அதிரடிப் படை வீரர்கள், ஹெலிகாப்டரில் சென்று, சிரியாவில் ரகசியமாக தரையிறங்கி, சந்தேகத்திற்கு இடமான இடங்களில், அமெரிக்க பத்திரிகையாளர்களை மீட்க சோதனை நடத்தியுள்ளனர்.

அப்போது, ஐ.எஸ்.ஐ.எஸ். களுக்கும், கமாண்டோ படை வீரர்களுக்கும் இடையே நடைபெற்ற சண்டையில், பல ஐ.எஸ்.ஐ.எஸ்.கள் கொல்லப்பட்டுள்ளனர்; அமெரிக்க வீரர் ஒருவர் படுகாயம் அடைந்தார். எனினும், அமெரிக்க பத்திரிகையாளர்கள் அந்த இடத்தில் சிறை வைக்கப்படாததால், அவர்களை, கமாண்டோ வீரர்களால் மீட்க முடியவில்லை.

இந்த தகவலை நேற்று, அமெரிக்க ராணுவம் மற்றும் வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர்கள் தெரிவித்தனர். 'சிரியாவில், அமெரிக்க ராணுவம் மேற்கொண்ட இந்த அதிரடி நடவடிக்கை குறித்த செய்திகள், ஊடகங்களில் வெளியாக இருந்ததை அறிந்து, முன்கூட்டியே தெரிவிக்கிறோம்' என, அவர்கள் தெரிவித்தனர்.

அமெரிக்க பத்திரிகையாளர், ஜேம்ஸ் போலே, ஐ.எஸ்.ஐ.எஸ்., களால் படுகொலை செய்யப்பட்ட காட்சி, நேற்று முன்தினம் வெளியானது. 'ஈராக்கில், அமெரிக்க ராணுவ விமானங்கள் குண்டு வீசுவதை தடுத்து நிறுத்தா விட்டால், எங்கள் பிடியில் உள்ள மற்றொரு அமெரிக்க பத்திரிகையாள ரையும் கொல்வோம்' என, பயங்கர வாதிகள் அமெரிக்காவை மிரட்டியுள்ளனர்.

No comments

Powered by Blogger.