Header Ads



அழிவுகளின் போது அரசாங்கம் வேடிக்கை பார்ப்பது ஆபத்தானது - இம்தியாஸ் பாக்கீர் மாக்கார்

நாட்டில் தொடர்ச்சியாக மனித உரிமை மீறல்கள் இடம்பெற்று வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் உப தலைவர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் தெரிவித்துள்ளார்.

சிங்களப் பத்திரிகையொன்றுக்கு அளித்த நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் தண்டிக்கப்படாத நிலைமை தொடர்ச்சியாக நீடித்து வருகின்றது. குற்றவாளிகளை பாதுகாக்கும் அரசாங்கமாக இந்த அரசாங்கம் மாற்றமடைந்து வருகின்றது.

நாட்டின் தேசிய ஒற்றுமை, ஜனநாயகம், நல்லாட்சி போன்ற விடயங்கள் தொடர்பில் வெறும் பிரசாரங்களை செய்யாது, மெய்யான அர்ப்பணிப்பு இருந்தால் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் உடனடியாக அமுல்படுத்தப்பட வேண்டும்.

அழிவுகளின் போது அரசாங்கம் வேடிக்கை பார்ப்பது ஆபத்தானது. வெற்று வார்த்தைகளினால் மக்களுக்கு நன்மை ஏற்படப் போவதில்லை. மெய்யாகவே ஜனநாயகத்தை நிலைநாட்ட அர்ப்பணிப்படன் அரசியல்வாதிகள் செயற்பட வேண்டும்.

கடந்த இரண்டு தசாப்த காலங்களில் இடம்பெற்ற துரதிஸ்டவசமான சம்பவங்கள் தொடர்பில் ஆணைக்குழுக்கள் நிறுவப்பட்டன. எனினும் இந்த விசாரணைக் குழுக்களுக்கு என்ன நேர்ந்தது என்பதனையும் நாம் அறிவோம்.

விசாரணைக்குழுக்கள் தொடர்பிலான பொறுப்பினை எவரும் ஏற்றுக்கொள்வதில்லை. மத நல்லிணக்கம் வெற்று வார்த்தையாக மாற்றமடைந்துள்ளது என பாக்கீர் மாக்கார் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.