Header Ads



நவநீதம் பிள்ளைக்கு போட்டியாக மஹிந்த ராஜபக்ஸ..!


வடக்கு,கிழக்கில், போர் நடந்த காலப்பகுதியில், காணாமற்போனோர் குறித்து விசாரணை செய்யும், அதிபர் ஆணைக்குழுவுக்கு ஆலோசனை வழங்குவதற்காக, மூன்று வெளிநாட்டு நிபுணர்களை சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச நியமித்துள்ளார். 

2014 ஜுலை 15ம் நாள் இடப்பட்டு, சிறிலங்கா அதிபரால் வெளியிடப்பட்டுள்ள  வர்த்தமானி அறிவித்தலில், நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரையின் பேரில் அமைக்கப்பட்ட, போர் இடம்பெற்ற காலப்பகுதியில் காணாமற்போனோர் குறித்து ஆராயும் அதிபர் ஆணைக்குழுவுக்கு ஆலோசனை வழங்குவதற்காக மூன்று சிறப்பு நிபுணர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. 

பிரித்தானிய சட்டவாளரும், சியராலியோனில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் குறித்த வழக்கில் ஐ.நாவின் தலைமை சட்டவாளராக பணியாற்றியவருமான, சேர் டெஸ்மன்ட் டி சில்வா இந்த ஆலோசனைக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். 

முன்னாள் யூகோஸ்லாவிய அதிபருக்கு எதிரான, அனைத்துலக குற்றவியல் தீர்ப்பாயத்தில் நடந்த போர்க்குற்ற வழக்கில் வாதாடியவரான பிரித்தானிய சட்ட நிபுணரும், சட்ட பேராசிரியருமான, சேர் ஜெப்ரி நைஸ் மற்றும், 

அமெரிக்காவின் சைராகியூஸ் பல்கலைக்கழக சட்ட பேராசிரியரான, டேவிட் கிறேன் ஆகியோர் இந்த நிபுணர் குழுவில் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். 

இந்த ஆலோசனைக் குழு, காணாமற்போனோர் குறித்த அதிபர் ஆணைக்குழு கோரினால், ஆலோசனை வழங்குவதுடன், தேவைப்பட்டால், ஏனைய வேறு நிபுணர்களையும் சிறிலங்கா அதிபர் நியமிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. 

2013ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம், மக்ஸ்வெல் பராக்கிரம பரணகம தலைமையிலான மூன்று பேர் கொண்ட அதிபர் ஆணைக் குழு நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம் பிள்ளை இலங்கையின் மனித உரிமைகள் மீறல்கள் குறித்து ஆராய்வதற்காக 3 பேர் கொண்ட நிபுணர்கள் குழுவொன்றை நியமித்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.