Header Ads



அளுத்கமயில் முஸ்லிம்களின் வாடகை கடைகள் தப்பியதன் மர்மம் என்ன..?

அதிகாரத்தைப் பகிர்ந்து நாட்டை ஐக்கியப்படுத்துவோம் என்ற அமைப்பு இன்று (16.07.14) கொழும்பில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் தேசிய ஐக்கிய முன்னணி தலைவரும் மத்திய மாகாண சபை உறுப்பினருமான அஸாத் சாலி தெரிவித்த கருத்துக்கள்

இடதுசாரி போக்குடைய ஒருவருக்கு மகனாகப் பிறந்த எமது தேர்தல் ஆணையாளர் எதிர்வரும் ஊவா மாகாண சபை தேர்தலில் சிறுபான்மையினரின் பிரதிநிதித்துவத்துக்கு வேட்டு வைக்கும் ஒரு முயற்சியில் இறங்கியுள்ளாரா என்று எண்ணத் தோன்றுகின்றது. ஊவா மாகாண சபையின் கீழ் வரும் பதுளை மாவட்டம் சுமார் 8லட்சத்து 80 ஆயிரம் வாக்காளர்களைக் கொண்டுள்ளது. மொனறாகலை மாவட்டம் சுமார் 4லட்சத்து 40 ஆயிரம் வாக்காளர்களைக் கொண்டுள்ளது. ஆனால் தேர்தல் ஆணையாளர் ஏதேதோ புரியாத காரணங்களை எல்லாம் கூறி பதுளை மாவட்டத்துக்கான மூன்று பிரதிநிதிகளை குறைத்து அவற்றை மொனறாகலை மாவட்டத்துக்கு வழங்கும் ஒரு கபட முயற்சியில் இறங்கியுள்ளார். இது மிகவும் ஆபத்தானதோர் நிலைமை. அவர் யாருடனும் எந்த ஆலோசனையும் மேற்கொள்ளாமல் இந்த முடிவை எடுத்துள்ளார். இந்த முடிவு வர்த்தமானி அறிவித்தலாக வெளிவரும் வரைதான் நாமும் காத்துள்ளோம்.அதற்கு எதிராக நீதிமன்றம் செல்வதற்கு. இது பதுளை மாவட்டத்தில் சிறுபான்மையினர் பிரதிநிதித்துவத்தை இல்லாதொழிப்பதற்கான ஒரு முயற்சியோ என எமக்கு வலுவான சந்தேகம் எழுந்துள்ளது. தயவு செய்து ஏனைய கட்சிகளும் இந்த விடயத்தில் கவனம் செலுத்தி தமது ஆட்சேபனைகளை முன்வைக்குமாறு நாம் கேட்டுக் கொள்கிறோம்.

மேல்மாகாணத்துக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் அநுர சேனநாயக்கவுக்கு தற்போது வயது 62. ஆனால் அவருக்கு மூன்றாவது தடவையாகவும் பதவி நீடிப்பு வழங்கப்பட்டுள்ளது. 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பதவி நீடிப்புக்களை வழங்க வேண்டாம் என்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல் வழங்கி இருக்கின்றது. இந்த அறிவுறுத்தலை மீறியே அநுர சேனநாயக்கவுக்கு இந்த பதவி நீடிப்பு வழங்கப்பட்டுள்ளது. இவருடைய பதவி நீடிப்பு விடயமானது இவரோடு மட்டும் தொடர்பு பட்டதல்ல. இதனால் பதவி உயர்வு பெற வேண்டிய பல சிரேஷ்ட அதிகாரிகள் அந்தப் பதவி உயர்வுகளபை; பெறாமலேயே ஓய்வு பெற வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

உச்ச நீதிமன்ற தீர்ப்புக்களையோ அதன் அறிவுறுத்தல்களையோ இந்த அரசாங்கம் ஒருபோதும்; மதிப்பதில்லை என்பது இப்போது மீண்டும் ஒரு தடவை நிருபணமாகியுள்ளது.பெட்ரோல் விலை விடயம்,ஸ்ரீராணி பண்டாரநாயக்க விடயம் என பல தடவைகளில் உச்ச நீதிமன்ற உத்தரவுகளை இந்த அரசு ஏற்கனவே மீறியுள்ளது. இலங்கை அரசு உச்ச நீதிமன்ற தீர்ப்பை மீறி செயற்படுகின்றது என்பதை இலங்கை தேசிய வானொலியே ஒரு நாளைக்கு பல தடவைகள் பறைசாற்றிக் கொண்டிருப்பதை நாம் தினசரி கேட்க முடிகின்றது. முஸ்லிம்களின் பள்ளிவாசல்களில் அதான் ஒலிபரப்ப தடை விதிக்கப்பட்ட போது அதை மீறி இலங்கை வானொலியில் தினசரி ஐவேளை அதான் ஒலிக்க அனுமதி அளித்தவர் ஜனாதிபதிதான் என்று இலங்கை வானொலி முஸ்லிம் சேவை பறைசாற்றுகின்றது. ஒரு காலத்தில் இந்த நாட்டின் உச்ச நீதிமன்றமும் ஏனைய நீதிமன்றங்களும் மக்களுக்கான அமைப்புக்களாகத்தான் இருந்தன. ஆனால் இன்று அந்த நிலை இருப்பதாகத் தெரியவில்லை. நீதிமன்றங்கள் மனித உரிமை ஆணைக்குழு என எல்லாமே இன்று அரச நிறுவனங்களாகிவிட்டன. அரசுக்கு தேவையானவை தான் எல்லா இடங்களிலும் நடக்கின்றன. இருந்தாலும் வேறு வழியின்றி தமது முறைப்பாடுகளைப் பதிய வேண்டும் என்பதற்காக மக்கள் அங்கு சென்று முறையிட்டு வருகின்றனர். யாழ்ப்பாணத்தில் மக்கள் நடத்தவிருந்த ஆர்ப்பாட்டத்துக்கு நேற்று பொலிஸார் நீதிமன்ற தடை உத்தரவைப் பெற்றுள்ளனர். ஆனால் அளுத்கமவில் என்ன நடந்தது என்பதை மக்கள் இன்னும் மறக்கவில்லை. இப்போது எங்குமே நியாயம் பிடைப்பதாகத் தெரியவில்லை. ஆனால் முறைப்பாடுகளை செய்து வைத்துக் கொண்டால் அது நிச்சயம் எதிர்காலத்துக்கு தேவைப்படும். முறைப்பாடுகளை மட்டும் அல்ல ஆவணங்களைக் கூட நாம் சேர்த்து திரட்டி வைத்துக் கொள்வது எதிர்காலத் தேவைக்குத்தான்.

அளுத்கமை சம்பவங்களால் பாதிக்கப்பட்ட நூற்றுக்கும் அதிகமானவர்கள் இன்று மனித உரிமை ஆணைக்குழுவுக்கு விஜயம் செய்து தனிப்பட்ட முறையில் தங்களது முறைப்பாடுகளைப் பதிவு செய்யவுள்ளனர். தீர்வு கிடைக்கும் என்ற நோக்கத்தில் அல்ல. தமக்கு இழைக்கப்பட்ட அநீதி பதியப்பட வேண்டும் என்பதற்காகத்தான் இந்த முறைப்பாடுகளை மக்கள் செய்யவுள்ளனர்.

இந்த நாடு இராணுவ மயப்படுத்தலை நோக்கி சென்று கொண்டிருக்கின்றது என்பதையும் அதனால் பாரிய பிரச்சினையை எதிர்நோக்க வேண்டிவரும் என்பதையும் நாம் அடிக்கடி ஊடகங்கள் வாயிலாகக் கூறி வந்துள்ளோம். அது இன்று நடந்திருப்பதை நாம் காண முடிகின்றது. மக்களுக்கு எங்கு சென்றாலும் இராணுவ அதிகாரிகளையே காண வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பாடசாலைக்கு சென்றால் அதிபர் இராணுவ அதிகாரி,அரச அலுவலகத்துக்குச் சென்றால் அங்கும் இராணுவ மயம். ஆளுனர் அலுவலகத்துக்குச் சென்றால் அங்கும் இராணுவ அச்சம். நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு சென்றால் அங்கு எல்;லாமே இராணுவ மயம். இன்னும் கொஞ்ச நாற்களில் கிராம சேவகர் கடமையும் இராணுவ மயமாக்கப்படவுள்ளதாக தெரியவருகின்றது. இப்டியே சென்றால் வீதியில் தடுக்கி விழுந்தாலும் ஒரு இராணுவ சிப்பாயுடன் தான் தடுக்கி விழ வேண்டும் என்ற நிலை தோன்றினாலும் ஆச்சரியப்படத் தேவையில்லை. சரி போகட்டும் என்று நாட்டை விட்டு வெளியேறி சென்றால் வெளிநாட்டில் உள்ள நமது தூதரகத்துக்கு ஏதாவது ஒரு தேவைக்காக சென்றால் அங்கு இருப்பவரும் ஒரு இராணுவ அதிகாரியாகத்தான் இருக்கின்றார். இராணுவ மயமாக்கல் என்பது இந்த நாட்டுக்கு நல்லதல்ல. அது தீமையையே விளைவிக்கும் என்பதை மீண்டும் வலியுறுத்தி கூறிக்கொள்ள விரும்புகின்றேன். எம்மை விட மிகப் பெரிய அரசியல் கட்சிகள் என தம்மை கூறிக் கொள்ளும் கட்சிகள் இந்த விடயங்களை கவனத்திற் கொண்டு மக்களை திரட்டிக் கொண்டு வீதிக்கு இறங்க வேண்டிய நேரம் வந்து விட்டது. அடுத்த மாதம் செய்வோம் அதற்கு அடுத்த மாதம் செய்வோம் என்று காலத்தைக் கடத்திக் கொண்டிருப்பதில் இனி பயனில்லை. இது உடனடியாக களத்தில் குதிக்க வேண்டிய நேரமாகும். இல்லையேல் நாட்டின் எதிர்காலம் மிக மோசமான நிலைக்கு தள்ளப்படும். இரவோடு இரவாக இந்த நாடு முழுவதும் இராணுவ மயமாகி இன்னொரு ஈராக்காகவோ அல்லது லிபியாவாகவோ கூட இந்த நாடு மாறும் ஆபத்தான நிலை தோன்றலாம்.

இன்று இந்த நாட்டில் உள்ள 3500 பாடசாலகளுக்கு நிரந்தரமான தகுதியான அதிபர்கள் இல்லை என்று தெரியவந்துள்ளது. தகுதியானவர்களை அதிபர் பதவிகளுக்கு நியமிக்காமல் அரசியல் வாதிகளின் ஆதரவாளர்களை பதில் அதிபர்களாக நியமித்து பாடசாலைகள் நடத்தப்படுகின்றன. எல்லாவற்றையும் ஒரு திட்டத்தோடு தான் அரசாங்கம் முன்னெடுத்துச் செல்கின்றது. தங்களுக்கு ஆதரவாக இல்லாதவர்களை அடையாளம் கண்டு அவர்களை நீக்கிவிட்டு எப்படி அடுத்த தேர்தலில் வெற்றிபெறலாம் என்பது தான் திட்டம். கிராம சேவகரிடம் உங்களது வாக்காளர் இடாப்பு பதிவுக்கான விண்ணப்பத்தை கையளித்தாலும் முறைப்படி உங்களது பெயர் விவரம் தேர்தல் இடாப்பில் பதியப்பட்டுள்ளதா என்பதையும் கட்டாயம் சரிபார்த்துக் கொள்ள வேண்டும். தேர்தல் திணக்களம் சென்றாவது இந்தக் காரியத்தை கட்டாயம் செய்ய வேண்டும். இல்லையேல் உங்களது அடிப்படை உரிமையே மறுக்கப்படும் ஆபத்து உள்ளது. மக்களின் வாக்குரிமை என்பது இந்த அரசாங்கத்திடம் இருக்கின்ற துப்பாக்கி ரவைகளை விட சக்தி மிக்கது. எனவே அதை நாம் தான் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். அது ஒன்று தான் இன்று மக்கள் கைகளில் இருக்கும் பலமான ஆயுதம். அதையும் தொலைத்துவிட்டால் மக்கள் கதி அதோ கதிதான்.

இன்று நமது நாட்டின் சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவரின் உயிருக்கே ஆபத்து எற்படுத்தும் வகையில் காரியங்கள் நடந்துள்ளன. லசந்த விக்கிரமசிங்கவைப் போன்றே சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவரான உபுல் ஜயசூரியவின் வாகனத்தையும் சிலர் பின் தொடர்ந்து வருகின்றனர். இது மிகவும் மோசமான நிலையாகும். அவர் தனது கடமைகளைச் சிறப்பான முறையில் நிறைவேற்றி வருகின்றார். வெளிப்படையாகவும் துணிச்சலாகவும் கருத்துக்களை முன் வைத்து வருகின்றார். பல சந்தர்ப்பங்களில் அவர் அரசாங்கத்தை விமர்சித்தும் உள்ளார். அவரை அச்சுறுத்தி அவரின் வாயை மூடச் செய்வதற்கான ஒரு முயற்சி தான் தற்போது மேற்கொள்ளப்படுகின்றது. மரண அச்சுறுத்தல்தான் இந்த அரசின் பிரதான 'ஸ்டைலாக' மாறியுள்ளது. முழு நாடும் இந்த விடயத்தை கண்டிக்க வேண்டும். சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவருக்கே சுதந்திரமாக நடமாட முடியாது என்றால் அது மிகவும் ஆபத்தான நிலையாகும். அவரை அச்சுறுத்த முனைவது அரசாங்கம் செய்கின்ற மாபெரும் தவறாகும்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை நான் மீண்டும் அளுத்கமவிற்கு விஜயம் செய்தேன். துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து காலை இழந்துள்ள ஒரு சிறுவனுக்கு முச்சக்கர நாற்காலி ஒன்றை நாம் வழங்கியுள்ளோம். தேசிய வைத்தியசாலையில் இந்த சிறுவனின் கால் துண்டிக்கப்பட்டது. அங்கு போனபோது மக்கள் என்னிடம் ஒரு புதிய விடயத்தை கூறினார்கள். சமிந்த என்று ஒரு உள்ளுர் அரசியல் வாதி இருக்கின்றாராம். அவருக்கு சொந்தமாக இந்தப் பகுதியில் 25 கடைகள் உள்ளனவாம். அவை அனைத்தையும் அவர் முஸ்லிம்களுக்கு தான் வாடகைக்கு கொடுத்துள்ளாராம். இவ்வளவு பெரிய கலவரங்கள் நடந்தும் கூட அவர் தனியாக நின்று தனது கடைகள் எல்லாவற்றையும் ஒரு சேதமும் இன்றி காப்பாற்றிக் கொண்டாராம். இதை என்னிடம் கூறிய மக்கள் ஒரு யோசனையையும் முன்வைத்தனர். பேசாமல் இந்த சமிந்த என்பவரை பிரதி பொலிஸ் மா அதிபர் ஆக்கினால் என்ன சேர் என்று அவர்கள் கிண்டலாகக் கேட்கின்றனர். பிரதி பொலிஸ் மா அதிபர் ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட தனது படையை வைத்துக் கொண்டு சாதிக்க முடியாததை சமிந்த தனியாக நின்று சாதித்துள்ளாரே இது எப்படி என்று மக்கள் வினவுகின்றனர்.

அளுத்கமையில் இராணுவம் மேற்கொள்ளும் புனரமைப்பு நடவடிக்கைகளிலோ அவர்களை அங்கு அனுப்பியதிலோ எமக்கு அடிப்படையில் உடன்பாடில்லை. இருந்தாலும் நாம் பெரிதும் மதிக்கின்ற அமைச்சர் ராஜித சேனாரத்ன கேட்டுக் கொண்டதன் பிரகாரம் தான் நாம் இந்த நடிவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்வில்லை. ஆனால் தற்போது அங்கு பாதிக்கப்பட்ட மக்கள் ஏமாற்றப்படுவதாக கூறப்படுகின்றது. தீயில் கருகி நாசமான கட்டிடங்களை முழுமையாக தகர்த்து விட்டு திருத்தி அமைக்காமல் தீ அடையாளங்களை மட்டும் மாற்றி வெள்ளைபூசும் நடவடிக்கையை இராணுவம் மேற்கொண்டு வருவதாக மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். அமைச்சர் ராஜிதவிடம் நாம் அன்பாகக் கேட்டுக் கொள்கிறோம் அவர் எமக்கு வழங்கிய வாக்குறுதியை அவர் நிறைவேற்ற வேண்டும். பாதிக்கப்பட்ட மக்கள் மீண்டும் ஏமாற்றப்படாமல் உரிய முறையில் கடைகள் திருத்தி அமைக்கப்படுவதை அமைச்சர் தலையிட்டு உறுதி செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம். உங்கள் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள் எனவும் கேட்டுக் கொள்கிறோம்.


No comments

Powered by Blogger.