Header Ads



மலேசியா விமானத்தில் அன்று மனைவி தப்பினார், இன்று கணவர் சிக்கினார்

ஏவுகணையால் சுட்டு வீழ்த்தப்பட்ட மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பணிப் பெண்ணாக பணியாற்றி பாதி வயதிலேயே தனது கனவு வாழ்க்கையை முடித்துள்ளார் மலேசியத் தமிழ்ப் பெண்ணான ஏஞ்செலின் பிரமீளா ராஜேந்திரன். 

30 வயதேயாகும் ஏஞ்செலினின் அகால மரணம் அவரது குடும்பத்தார், உறவுகள், நண்பர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரது பேஸ்புக்கில் இரங்கல்கள் குவிந்து வருகின்றனர். பலர் தனியாக ஒரு பக்கத்தை ஆரம்பித்து இரங்கல் தெரிவித்தும், நினைவு கூர்ந்தும் செய்திகள் வெளியிட்டு வருகின்றனர். 

பிரமீளா, மலேசியாவின் கிளாங் பகுதியைச் சேர்ந்தவர் ஆவார். இளம் வயது முதலே விமான பயணங்கள் மீது அதிக ஆர்வம் கொண்டவர். அதேபோல நீர் விளையாட்டு உள்ளிட்ட சாகசங்களிலும் அதிக ஆர்வம் கொண்டவர். தனது தாய் மண் மீதும் அதிக பாசம் வைத்திருந்தவர் பிரமீளா. மலேசியாவில் பிறந்து வளர்ந்தவர் என்றாலும் இந்தியா மீதும் அதிக பாசத்துடன் இருந்து வந்தவர். கடந்த மார்ச் மாதம்தான் பிரமீளா, கேரளாவுக்கு சுற்றுப்பயணமாக வந்து போயுள்ளார். அந்தப் பயணத்தின்போது கேரளாவின் எழிலை ரசித்து அதன் புகைப்படங்களையும் தனது பேஸ்புக்கில் போட்டுள்ளார் பிரமீளா. விமானப் பணிப் பெண்ணாக பல நாடுகளுக்கும் சிறகடித்துப் பறந்த இந்த அழகுப் பறவை இன்று பஸ்மாகிப் போய் விட்டது அவரது உறவுகளையும், நட்புகளையும் அதிர வைத்துள்ளது. 

மறுபக்கம் இன்னொரு மலேசிய இந்தியரான, அதாவது சீக்கியரான சஞ்சித் சிங் சந்துவின் கதை மிகவும் சோகமானது. இவரது மனைவியும் மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பணியாற்றுபவர்தான். சந்துவின் மனைவி சில மாதங்களுக்கு முன்பு மாயமாகிப் போன மலேசியன் ஏர்லைன்ஸின் எம்எச் 370 விமானத்தில் பணியாற்றியவர். அந்த விமானத்தில் கடைசி நேரத்தில் அவர் தனது பணி நேரத்தை மாற்றியதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். 

ஆனால் தற்போது அவரது கணவரான சந்து பரிதாபமாக உயிரிழந்து விட்டார். அதேபோல சந்துவும் கூட எம்எச் 17 விமானத்தில் பயணிக்கும் திட்டத்தில் முதலில் இல்லை. ஆனால் தனது கோலாலம்பூரில் சந்திக்க வேண்டும் என்பதற்காக இன்னொருவரை மாற்றி விட்டு இவர் பயணித்துள்ளார். ஆனால் விதி விளையாடி விட்டது. அன்று மனைவி தப்பினார்.. இன்றோ கணவர் மாட்டிக் கொண்டு விட்டார். சந்துவின் தந்தை ஜிஜார் சிங் கூறுகையில், தனது மகனின் வருகையை எனது மனைவிதான் ஆர்வமாக எதிர்பார்த்திருந்தார். மகனுக்குப் பிடித்த அனைத்து உணவுகளையும் செய்து வந்தார். ஆனால் அவன்தான் வராமலேயே போய் விட்டான் என்று கூறி கதறி அழுதார் ஜிஜார் சிங். சஞ்சித் சிங் சந்து, ஜிஜார் சிங்கின் ஒரே மகன் ஆவார். இவருக்கு ஒரே ஒரு சகோதரி மட்டுமே. மூத்த சகோதரியான அவர் இத்தாலியில் வசித்து வருகிறார். 41 வயதான சந்துவின் மரணம் ஜிஜார் சிங் குடும்பத்தை சிதறடித்துள்ளது. ஜிஜார் சிங் மேலும் கூறுகையில், எனக்கு 71 வயதாகிறது. எனது மனைவிக்கு 73 வயது. என்னை விட 2 வயது மூத்தவர். இருவரும் வயோதிகத்தின் பிடியில் இருப்பவர்கள். சந்து எங்களுக்கு ஒரே மகன். இப்போது அவன் போய் விட்டான். எனக்கு 2 முறை பைபாஸ் அறுவைச் சிகிச்சை நடந்துள்ளது. இதயமே நொறுங்கி்ப் போனது போல உணர்கிறேன். இனி நாங்கள் என்ன செய்யப் போகிறோம். நினைத்தாலே பதறிப் போகிறது என்றார் ஜிஜார் சிங். 

No comments

Powered by Blogger.