Header Ads



தொடரும் முஸ்லிம் அழிப்புகளும், எதிர்கொள்ள முடியாத முஸ்லிம் அரசியலும்

நவாஸ் சௌபி

(இது 21.06.2014 பாணந்துறை சம்பவத்திற்கு முந்திய கட்டுரை)

சர்வதேச உலகையும் திரும்பிப் பார்க்க வைத்த அழுத்கம, பேருவளை, தர்காநகர் முஸ்லிம் அழிப்புக் கலவரம் தற்செயல் நிகழ்வோ, இனம் தெரியாதவர்களின் வெறியாட்டமோ அல்ல. மாறாக இது நன்கு திட்டமிடப்பட்ட ஒன்றாகவும், பொதுபல சேனா அமைப்பினுடைய முஸ்லிம் அழிப்பு தீவிரவாதத்தின் உச்ச நிலைக்கான ஆரம்பமாகவும் பகிரங்கமாக நடந்த ஒன்று.

இவ்வாறான பல பாரிய கலவரங்களை உருவாக்கி அதன் மூலம் இலங்கை முஸ்லிம்களின் இருப்பினை மிக மோசமாக அழித்தொழிப்பது பொதுபல சேனாவின் பிரதான நிகழ்ச்சி நிரலாகும். இதற்காகவே முஸ்லிம் சமூகத்தை வலிந்து வம்புக்கு இழுக்கும் மத விவகாரப் பிரச்சினைகளைத் தோற்றுவித்து அதன் மூலம் முஸ்லிம் எதிர்ப்புணர்வுகளை சிங்கள மக்கள் மத்தியில் ஏற்படுத்தி வந்தார்கள். 

இவ்வாறான பிரச்சினைகளாக எழுந்த ஹலால் எதிர்ப்புக் கோஷம், ஹபாய் மறுப்பு வாதம், பள்ளிவாசல்கள் உடைப்பு, கடை எரிப்புத் தீவிரவாதம், மீள் குடியேற்ற விரோதம் என்ற எத்தனையோ சம்பவங்களைக் கடந்துதான் இன்று அழுத்கம பூமியில் எரியுண்ட கறுப்பு தின கலவரம் தோற்றுவிக்கப்பட்டிருக்கிறது என்றால், இதுவரை இந்த பொதுபல சேனாவின் தீவிரவாதச் செயற்பாடுகளுக்கு எம்மிடம் இருந்த மாற்று நடவடிக்கைகள் என்ன? என்பதை சமூகம் உட்பட அரசியல் தலைமைகளையும் நோக்கி கேட்க வேண்டி இருக்கிறது.

எதிர்த்துப் போராடுவதைத் தவிர சமூகத்தினால் இதற்கு என்ன செய்ய முடியும் என்ற கேள்வி இருந்தாலும், எமது சமூகம் இதற்காக தங்களது அரசியலை எவ்வாறு வழிப்படுத்துகிறது என்பது இதில் மிக முக்கியமான ஒன்றாகும். இப்போதுள்ள பிரச்சினைக்கான தீர்வு, முஸ்லிம் அரசியல் சூழமைவிலிருந்து உருவாக்கப்பட்டு எமது மக்கள் பாதுகாக்கப்படுவதைத் தவிர வேறு வழி எதுவுமில்லை.

ஆனால் பொதுபல சேனா ஆரம்பித்த முதல் பிரச்சினையிலிருந்து எரியுண்ட அழுத்கம பிரச்சினைவரைக்கும் எமது அரசியல் தீர்வுகள் குறிப்பிட்ட சந்தர்ப்பத்தில் மாத்திரம் கொதித்தெழுந்து மக்களையும் ஊடகங்களையும் உணர்ச்சிபூர்வமான பேச்சுக்களால் திருப்திப்படுத்தியதே தவிர, அதுபற்றி எந்த  தூரநோக்கு செயற்பாடும் முற்பாதுகாப்பு நடவடிக்கையும் இல்லாமலே இருந்துவிட்டோம் என்பதை எமது அரிசியல் தலைமைகள் தடையில்லாமல் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். 

கடந்துபோன எத்தனையோ சந்தர்ப்பங்களை தவறவிட்டுத்தான் இன்று நாம் இந்த அழிவினை எதிர் கொண்டிருக்கின்றோம். ஜெனிவா தீர்மானத்தின்; போது இலங்கைக்கு ஆதரவாக முஸ்லிம் நாடுகள் வாக்களித்த நிலையிலும், ஜனாதிபதி மஹிந்தவுக்கு முஸ்லிம் நாடுகள் பெரும் பட்டங்களை வழங்கிய நிலையிலும்  அந்த நாட்டுத் தலைவர்களைக் கொண்டு அல்லது தூதுவர்களைக் கொண்டு பொதுபல சேனா மீதான அரசின் நிலைப்பாட்டை அரசாங்கத்துடன் பேசி தீர்வு காண முயன்றிருக்கலாம். எதுவுமே செய்யாதிருந்துவிட்டு, கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம் என்பது போல இப்போது அந்த செயற்பாட்டை செய்கின்றோம் இதனை எப்போதோ செய்திருக்க வேண்டும். 

முஸ்லிம் சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற முஸ்லிம் காங்கிரஸின் நிலைப்பாடுதான் இதில் முக்கியமான இடத்தினை வகிக்கின்றது. பொதுபல சேனாவின் பிரச்சினைகள் ஒவ்வொன்றின் போதும் எமது மக்கள் முஸ்லிம் காங்கிரஸ் பெற்றுத் தரக் கூடிய தீர்வினைத்தான் எதிர்பார்த்து விமர்சித்திருந்தார்கள். தற்போதைய அழுத்கம, பேருவளை, தர்காநகர் கலவரத்திலும் முஸ்லிம் காங்கிரஸ் என்ன செய்து கொண்டிருக்கிறது அதன் தலைமை எவ்வாறு செயற்படுகிறது என்பதுதான் மக்களுக்கு நம்பிக்கையூட்டும் ஒரு வழியாகப் பார்க்கப்படுகிறது.

ஆனால் எமக்குத் தேவையான நேரடித் தீர்வு என்பது பொதுபல சேனாவின் தீவிரவாதம் முற்றாக நிறுத்தப்பட வேண்டும் என்பதுதான். மாறாக முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்தில் இருப்பதா? இல்லையா? என்பது அல்ல. இதனை முதலில் முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் விளங்கிக் கொள்ள வேண்டும் பின்னர் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

ஏனெனில் பிரச்சினை ஒன்று வருகின்ற போது உடனே மக்கள் கொதித்தெழுந்து முஸ்லிம் காங்கிரஸ் அரசை விட்டு வெளியேற வேண்டும். அரசாங்கத்திற்கு எதிராக வாதாட வேண்டும் என்ற கோஷங்களை எழுப்புவதும், அதற்கேற்றவாறு தலைவரும் இந்த அமைச்சுப் பதவியைத் தூக்கி வீச நான் ஒருபோதும் தயங்கமாட்டேன்  என்பதும் இயல்பான வழக்கமாகிவிட்டது. தொடரும் ஏமாற்று வித்தையாகிவிட்டது.

இதில், ஏன் அரசாங்கத்துடன் இருக்க வேண்டும்? ஏன் அரசாங்கத்தை விட்டு வெளியேற வேண்டும் என்பதில் அரசியல்வாதிகளுக்கும் தெளிவில்லை, மக்களுக்கும் தெளிவில்லை என்பது மட்டும் எமக்குத் தெளிவாகத் தெரிகிறது. ஏனெனில் பிரச்சினை ஒன்று ஏற்படுகின்ற போது அரசாங்கத்துடன் இருப்பதா? இல்லையா? என்பதற்குத்தான் முடிவு காண முயல்கிறோமே தவிர பிரச்சினையை முற்றாக நிறுத்த என்ன வழி என்பதற்கு முடிவு எடுப்பதாகத் தெரிவதில்லை.

கலவர மண்ணில் நின்று கொண்டு 'எமது மக்களைக் காப்பாற்ற முடியாத ஒரு அமைச்சராக இந்த அரசாங்கத்தில் இருப்பதற்கு நான் வெட்கப்படுகிறேன்' என்று கண்ணீர் வடித்த ஹக்கீம் கொழும்பு வந்து ஊடகத்திற்கு கருத்துச் சொல்கையில்,'அமைச்சுப் பதவியை துறந்தால் எமது மக்களுக்கு பாதுகாப்பு கிடைக்கும் என யாராவது உத்தரவாதம் தருவார்களாயின் எனது அமைச்சுப் பதவியை துறக்கத் தயார்' என்று மிகவும் அழகான ஒரு கருத்தை முன்வைக்கிறார்.

அவரிடம் அதற்குப் பதிலாக,'அரசாங்கத்தில் நீங்கள் அமைச்சராக இருப்பதில் எங்களது பாதுகாப்புக்கு என்ன உத்தரவாதம் இருக்கிறது?' என்ற கேள்வியைக் நாங்கள் மாறிக் கேட்கிறோம் இதற்கு என்ன உத்தரவாதம் அவரால் தரமுடியும்? இதற்காக றஊப் ஹக்கீமை பகிரங்க மேடைக்கு அழைக்கின்றோம் அவரால் முடிந்தால் வரட்டும் என்ன உத்தரவாதம் தருகிறார் என்று பார்ப்போம்.

மக்களின் ஆவேசங்களுக்கும், ஆத்திரங்களுக்கும், உணர்ச்சிகளுக்கும் கட்டுப்பட்டு முடிவெடுக்கும் கட்சியாக முஸ்லிம் காங்கிரஸ் இல்லை. அது மிக நீதானமாகவும் பக்குவமாகவும் சிந்தித்து செயற்படுகின்ற ஒரு கட்சி என்ற நியாயங்களைக் கூறிக்கொண்டு நீங்கள் அரசாங்கத்துடன் இருங்கள் அல்லது இல்லாமல் போங்கள் அதுவல்ல இங்கு பிரச்சினை. மேலும், இருப்பவை போதாது என்றால் இன்னும் இரண்டு மூன்று பிரதி அமைச்சுக்களைப் பெற்று அதற்காகக் கனவு கண்டுகொண்டிருப்பவர்களுக்கு கொடுங்கள் அதுபற்றி நாங்கள் கேட்கவுமில்லை. எங்களுடைய கேள்வி எல்லாம் பொதுபல சேனாவின் தீவிரவாதம் முற்றாக நிறுத்தப்பட வேண்டும்; அதற்கு என்ன வழி? என்பதுதான்.

அளுத்கம கலவரத்தின் பின்னர் பொதுபல சேனா அமைப்பின் தலைவர் அந்த அமைப்பை விட்டு வெளியேற முடிவெடுத்திருக்கிறார் என்றால், ஏன் எங்களால் அரசாங்கத்தின் ஆதரவிலிருந்து வெளியேற முடியாதிருக்கின்றது. ஜனாதிபதியும் அமைச்சரவையில் 'உங்களைப்போன்று சிங்கள மக்களுக்காக சிங்கள அமைச்சர்கள் பேசத் தொடங்கினால் உங்களது நிலை என்ன' என்று கேட்கிறார் என்றால் இதனை அரசாங்கத்திற்கு வெளியிலிருந்துதான் பேச வேண்டும் என்பதும் தெளிவாகிறது. மாத்திரமன்றி சிங்கள அமைச்சர்கள் அப்படி பேசும் அளவிற்கு முஸ்லிம்கள் சிங்கள மக்களுக்கு என்னதான் செய்தார்கள் என்ற கேள்வியும் இங்கு எழுகிறது.

இன்னுமொரு விடயத்தை தலைவர் ஹக்கீம் மிகவும் பெருமையுடன் சொன்னார் நான் இருமுறை எனது அமைச்சுப் பதவிகளைத் துறந்தவன் என்று. அது எதற்காக 2001இல் சந்திரிக்காவின் அரசாங்கத்தை வீழ்த்தி ரணிலின் ஆட்சியை உருவாக்குதற்கு ஒரு அமைச்சுப் பதவி இழக்கவுமில்லை, அது பறிக்கப்பபட்டது. மற்றது 2007 இல் வரவு செலவு வாக்களிப்பில் மஹிந்த அரசை வீழ்த்த கட்சி மாறி எதிர்த்து வாக்களித்து அதில் ஏமாந்துபோனது. இதில் சமூகத்திற்காக எங்கே தலைவர் தனது அமைச்சுப் பதவியை இழந்தார் என்பதை எப்படிக் கூறி பெருமைப்படுகிறாரோ? 

எனவேதான் நாங்கள் அரசாங்கத்தில் இருந்தும் எங்களுக்கு இந்த அழிவுதான் தீர்வு என்றால், அரசுடன் இருப்பதற்கு என்ன அர்த்தம் இருக்கிறது என்று கேட்கின்றோம். அரசை ஆதரித்து அழிகின்ற முட்டாள் அரசியலைவிடவும் அரசை எதிர்த்து அழிகின்ற துணிச்சலான உரிமைத்துவ அரசியலை ஏன் முஸ்லிம் காங்கிரஸால் முன்னெடுக் முடியாமலிருக்கிறது. ஆதரித்தாலும், எதிர்த்தாலும் இதுதான் நிலை என்றால் இதில் எது சிறந்தது? எந்த முடிவை நாம் எடுப்பது?

நவநீதம் பிள்ளையிடம் 50 பக்க அறிக்கை சமர்பித்த போது அமைச்சராக இருந்துகொண்டு அரசாங்கத்தை காட்டிக்கொடுப்பதாகவும், அரசாங்கத்திலுள்ள கூட்டுப் பொறுப்பை மீறி அரசாங்கத்திற்கு எதிராக செயற்படுவதாகவும்  ஹக்கீம் மீது குற்றம் சுமத்தப்ட்ட நிலையில் இனிவருகின்ற பிரச்சினைகளுக்கும் எப்படி அரசாங்கத்தில் இருந்துகொண்டு ஹக்கீமால் தீர்வு காண முடியும்.

ஓவ்வொரு பிரச்சினைகளுக்கும் கண்டனமும், ஆர்ப்பாட்டமும், ஹர்த்தாலும் அறிக்கையும் வெளியிட்டுக்கொண்டிருக்க எமக்கு ஒரு அரசியல் அடையாளம் தேவை இல்லை. அழிவுகளும் இழப்புகளும் நடந்த பின் இவற்றைச் செய்வதுதான் எமது அரசியல் சாணக்கியம் என்று எமது சமூகத்தைப் பழக்கப்படுத்தி வைத்திருக்கின்றோம். மாறாக அழிவுகளையும் இழப்புகளையும் வரவிடாது தடுத்து எமது சமூகத்தைப் பாதுகாக்கும் பலமான ஒரு அரசியலை இன்றைய சூழலில் நாம் எந்த சந்தர்ப்பத்திலும் சாதித்துக் காட்டாமலிருக்கின்றோம். 

இப்போதும் இது முடிந்த கதை அல்ல இதைவிடவும் மோசமான பேரழிவுகளை இந்த நாட்டில் முஸ்லிம்களுக்கு ஏற்படுத்தி 2015 ஆம் ஆண்டில் நூற்றாண்டு வரலாறு மீட்டிப்பார்க்கப்பட இருக்கிறது.  இருந்தும் இதனை முற்றாக நிறுத்தி முஸ்லிம்கள் மீது குறிவைத்து நடத்தும் பொதுபல சேனாவின் அனைத்துச் செயற்பாடுகளும் நிறுத்தப்படுவதற்கான ஒரு உத்தரவாதம் நிலைநிறுத்தப்படுவதுதான் இன்று தேவைப்படும் அரசியல் தீர்வு, இன்னுமொரு அழுத்கம எரியாதிருப்பதற்கு என்ன வழி என்பதுதான் இன்றுள்ள கேள்வி. 

கடந்த மார்ச் மாதத்திலிருந்து பொதுபல சேனாவின் தொடர் தீவிரவாத செயற்பாடு முஸ்லிம்களை பகிரங்கமாகத் தாக்கிக்கொண்டுவந்த போதே நாம் முறையான ஒரு நடவடிக்கையை அரச மட்டத்தில் எடுத்திருக்க வேண்டும். இது தொடர்பாக ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதியிடப்பட்ட முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் 16 பேர் ஒப்பமிட்டு ஜனாதிபதிக்கு ஒரு கடிதத்தினை அனுப்பி வைத்ததோடு சமூகத்தின் மீதான அக்கறையை மிகச் சிறப்பாக வெளிப்படுத்தியிருப்பதாக மார் தட்டிக்கொண்டு இருந்துவிட்டார்கள்.   

சமூகமும் இதனை பெரும் பணியாக நினைத்து அதில் ஒப்பமிடாத இருவரை முஸ்லிம்களே இல்லை அவர்களை சமூத்திலிருந்து ஒதுக்கி வைக்க வேண்டும் என்றெல்லாம் விமர்சித்தனர். ஆனால் இந்த ஒப்பமிட்ட கடிதத்தினால் என்ன முடிவு கிடைத்தது? கடிதம் கொடுத்த பிறகு அதனை தொடர்ந்து சென்று அதற்காக எமது அரசியல்வாதிகள் பெற்றுக்கொண்ட தீர்வு என்ன? அழுத்கம, பேருவளை, தர்காநகர் எரிந்ததைத் தவிர வேறு எந்தப் பயணும் எமக்கு கிடைக்கவில்லை.

இக்கடிதத்திற்கு அப்பால் எமது முஸ்லிம் அமைச்சர்கள் கூட்டாக ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி ஜனாதிபதியிடம் நேரடியாக ஒரு வட்ட மேசை உரையாடல் மூலம் இதற்கு தீர்வு காணும் முயற்சி எடுக்கப்பட்டு அதற்கு தீர்க்கமான முடிவுகள் ஏதும் பெறப்பட்டிருக்கிறதா?  எமது பாராளுமன்ற பலத்தினை இதற்காக எவ்வாறு பயன்படுத்த முடியும் என்ற ஒரு கூட்டு முயற்சி இதில் எடுக்கப்படவில்லை என்பதுதான் எமது முதலாவது பலயீனம். ஆனால் தேர்தல் வந்தால் அரசாங்கத்தை அசைக்கும் சக்தி நாங்கள்தான், அரசாங்கத்தை ஆட்டம் காணவைப்பவர்கள் நாங்கள்தான், பேரம் பேசும் பலம் எங்களுடையது என்ற வீர வசனங்களை மேடைக்கு மேடை நன்றாகப் பேசி ஏமாந்த சமூகங்களின் கைதட்டல்களையும் வாங்கிக் கொள்கின்றோம். 

இறுதியாக இத்தனை அனுபவங்களோடும் முஸ்லிம் காங்கிரஸ் அரசுடன் இருப்பதுதான் அதன் சாணக்கியமான முடிவு என்றால், அந்த முடிவு முஸ்லிம் சமூத்தின் மீதான பொதுபல சேனாவின் தீவிரவாத வன்முறைகளை முற்றாகத் தடுத்து நிறுத்த வேண்டும். ஆனால் இந்த உத்தரவாதத்தை ஹக்கீமால் ஆதாரப்படுத்த முடியாது என்பது மக்களுக்குத் தெரியும். இந்தக் கொந்தளிப்பும் கொதிப்பும் தற்காலிகமானதுதான் இன்னுமொரு பிரச்சினை வருவதற்குள் மக்கள் யாவற்றையும் மிக விரைவாக மறந்தவிடுவார்கள் என்பது ஹக்கீமுக்குத் தெரியும். இந்த இரண்டுக்குமிடையில் 'ஆயிரம் விளக்குடன் ஆதவன் எழுந்தவந்தான்' போன்ற பாடல்கள் இருக்கும்வரை அழுத்கம, பேருவளை, தர்காநகரைப் போல் எத்தனை கலவரங்கள் நடந்தாலும் அவர்களுக்கு கவலை இல்லை. 

1 comment:

  1. Dear Bro Nawas Saufi, Your Article Actually true and correct but our comminuty still did not understand this mater (our soceity same asSODA BOTTLE) So our community expecting whole inteligent involde (same as you) as a good Politics. you too think about these meter ALLAH Help us and WITH us.

    ReplyDelete

Powered by Blogger.