Header Ads



என்னை மன்னித்து விடுங்கள், சொல்வதற்கு ஒன்றுமில்லை - தென்கொரிய கப்பல் கப்டன்


தென்கொரிய கடற்பரப்பில் பயணிகள் கப்பல் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஆகக் குறைந்தது ஒன்பது பேர் உயிரிழந்திருக்கலாமென அந்நாட்டு அரசாங்கம் நேற்று அறிவித்துள்ளது. 

கப்பல் கவிழ்ந்தது முதல் நேற்று வரை 179 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். எனினும் மிகுதி 287 பேரை தேடும் பணிகள் தொடர்கின்றன. கடல் நீரின் வெப்பநிலை 10 பாகை செல்சியஸ்ஸாக இருப்பதனால் அவர்கள் கப்பலுக்குள் இருந்தாலும் உயிருடன் இருப்பது சாத்தியமில்லையென்றே நம்பப்படுகிறது.

சம்பவத்தின் போது கப்பலில் 475 பேர் இருந்ததாக தென்கொரியா புதிதாக அறிவித்துள்ள போதிலும் தென்கொரிய அரசாங்கம் அடிக்கடி மாறுபட்ட எண்ணிக்கையை அறிவிப்பதாக அந்நாட்டு மக்கள் குற்றம் சுமத்தி வருவதாக சர்வதேச செய்தி சேவைகள் சுட்டிக்காட்டியுள்ளன. உயிருடன் மீட்கப்பட்டவர்களுள் பலர் காயங்களுக்குள்ளாகியுள்ளனர்.

மீட்புப் பணியில் 512 சுழியோடிகளும் 169 படகுகளும் 29 விமானங்களும் இறங்கியுள்ளன. கவிழ்ந்த கப்பல், படகுகளினால் கரையை நோக்கி கட்டியிழுக்கப்படுகின்றது. 

95 சதவீதம் கவிழ்ந்திருந்த கப்பல் ஓரளவு நிமிர்த்தப்பட்டுள்ளது. அதனை முழுமையாக நிமிர்த்தும் நோக்கில் பாரந்தூக்கியை பயன்படுத்தவும் அந்நாட்டின் பாதுகாப்பு தரப்பு தீர்மானித்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மீட்பு பணிகளுக்கு சீரற்ற காலநிலை, இருண்ட கடல்நீர் மற்றும் அபாயகரமான சுழிகள் பாரிய இடையூறை ஏற்படுத்தி வருகின்றன. இராணுவ சுழியோடிகள் கவிழ்ந்த கப்பலை அடைவதற்காக அதிக காற்று மற்றும் பாரிய அலைகளுடன் போராடி வருகின்றனர். இதன் போது மூன்று சுழியோடிகள் கடல் அலைகளால் அடித்துச் செல்லப்பட்டு மீன்பிடி படகொன்றின் உதவியுடன் மீட்கப்பட்டுள்ளனர்.

தென்கொரிய ஜனாதிபதி கப்பல் மூழ்கிய இடத்திற்கு விஜயம் செய்ததுடன் மீட்பு பணிகளை துரிதப்படுத்துமாறும் பணிப்புரைவிடுத்தார்.

இதே வேளை பொலிஸாரின் விசாரணைகளின் கீழ் வைக்கப்பட்டிருக்கும் கவிழ்ந்த கப்பலின் கெப்டன் லீ ஜுன்- சி யொக், “என்னை மன்னித்துவிடுங்கள். நடந்த சம்பவத்திற்காக நான் மிகவும் வெட்கம் அடைகிறேன். 

எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. கூறுவதற்கு என்னிடம் வார்த்தைகள் இல்லை” எனத் தெரிவித்துள்ளார். விபத்தில் உயிரிழந்த ஒன்பது பேரின் சடலங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. இவற்றில் மூன்று 17 வயதுடைய மாணவர்களுடையது. 25 வயதான ஆசிரியரினதும் 22 வயதான கப்பலின் பெண் பணியாளரிதும் சடலங்களும் இனங்காணப்பட்டுள்ள அதேவேளை ஏனைய மூன்று சடலங்களும் உடனடியாக அடையாளம் காணப்பட முடியாத நிலையிலுள்ளதெனவும் தெரிவிக்கப் படுகிறது.

கப்பல் விபத்துக்குள்ளானதற்கான காரணம் இதுவரையில் உறுதிப்படுத்தப் படாத நிலையில் கப்பல் தனது பாதையை விட்டு விலகிச் சென்றிருப்பதாக செய்தியாளர்கள் கூறுகின்றனர். எனினும் முழுமையாக கவிழ்வதற்கு, கப்பல் நீருக்கடியில் உள்ள ஏதேனும் ஒரு பொருளுடன் மோதுண்டிருக்க வேண்டுமெனவும் சில நிபுணர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர். 

கவிழ்ந்த கப்பலுக்கு சொந்தமான முகவர் நிலையத்தின் பேச்சாளர் நேம் ஜே ஹியோன் கப்பல் சென்றுள்ள பாதைக்கும் ஏற்கனவே வரைபிற்குற்பட்ட பாதைக்குமிடையில் பாரிய வித்தியாசம் எதுவும் இல்லையெனக் கூறியுள்ளார். 

இதேவேளை, கப்பல் மூழ்கும் தறுவாயில் கூட பலர் தமது பெற்றோருக்கு தொலைபேசியினூடாக குறுந் தகவல்களை அனுப்பியுள்ளனர்.

“அப்பா, கவலைப்படாதீர்கள் நானும் மற்றைய பெண்களுடன் உயிர்காப்பு அங்கியினை அணிந்துள்ளேன். நாங்கள் கப்பலுக்குள் இருக்கிறோம். இன்னமும் கப்பல் மேற்பரப்பிலேயே உள்ளோம்” என ஒரு பெண் தனது அப்பாவுக்கு குறுந்தகவல் அனுப்பியுள்ளார். இருப்பினும். முற்றாக மூழ்கிய கப்பலுக்குள்ளிருந்து யாரும் தொடர்பு கொண்டதற்கான ஆதாரங்கள் கிடைக்கவில்லையெனவும் பொலிஸார் கூறுகின்றனர். 

இந்தக் கப்பல் 20 ஆண்டுகளுக்கு முன்னர் ஜப்பானால் தயாரிக்கப்பட்டது. கடந்த 20 வருடங்களில் தென் கொரியாவில் இடம்பெற்ற மிகப்பெரிய அனர்த்தமாகவும் இது கருதப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பில் ஜப்பானிய பிரதமர் தனது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை மீட்பு பணிகள் தாமதிக்கப்படுவதாக பயணிகளின் உறவினர்கள் விசனம் தெரிவித்துள்ளனர். மீட்பு பணியாளர்கள் மீட்பு நடவடிக் கைகளை விட விசாரணைகளிலேயே அதிக அக்கறை செலுத்தி வருவதாகவும் குற்றம் சுமத்தியுள்ளனர். தென்கொரியாவின் சியொல் பிரதேசத்தின் மேற்கேயுள்ள இன்ச்சொன் துறைமுகத்திலிருந்து மேற்படி கப்பல் புறப்படும் வேளை சீரற்ற காலநிலையே நிலவியுள்ளது. இதனால் கப்பல் வழமையாகப் புறப்படும் நேரத்திலும் சுமார் 02 மணித்தியாலங்கள் வரை தாமதித்தே பயணத்தைத் தொடங்கியுள்ளது. சில வேளைகளில் கப்பல் கப்டன் ஏற்கனவே திட்டமிடப்பட்ட நேரத்திற்குள் சென்றடைவதற்காக அதிக வேகத்தில் கப்பலை செலுத்தியிருக்கலாமெனவும் அதன் முகவர் நிலையத்திற்குப் பொறுப்பான இன்னுமொரு கெப்டன் கூறுகின்றார்.

கப்பல் நடத்துனரான சொவ்காஜின் எந்த விளக்கமும் கொடுக்க முன்வரவில்லை மன்னிப்பு மட்டுமே கோரினார்.

No comments

Powered by Blogger.