Header Ads



விஷ எறும்புகளை கடிக்க விட்டு திருடர்களை தண்டித்த மக்கள்

பொலிவியாவின் மத்தியப் பகுதி நகரமான கொச்சபம்பாவை ஒட்டியுள்ள அயோபயா என்ற கிராமத்தில் மூன்று மோட்டார் சைக்கிள்களைத் திருடிய இரண்டு ஆண்கள் கடந்த வாரம் பிடிபட்டனர். இவர்களின் செய்கையால் ஆத்திரமடைந்த மக்கள் அவர்களுக்கு கொடூரமான தண்டனை ஒன்றை அளிக்க முற்பட்டனர். 18 மற்றும் 19 வயது நிரம்பிய இந்த இருவரையும் அந்த மக்கள் அந்தப் பகுதிகளில் காணப்படும் டிரிப்லரிஸ் என்ற வகை மரங்களில் கட்டி வைத்துள்ளனர்.

இந்த வகையான மரங்களில் வாழும் சூடோமைர்மிக்ஸ் என்ற கொடிய விஷ எறும்புகள் பொதுவாக தாக்குதல் தன்மை கொண்டவை இல்லை என்றபோதிலும் தங்களுக்குக் கிடைக்கும் இரைகளைத் தொடர்ந்து கொட்டி விஷத்தைப் பரப்பும் கொடிய வகையைச் சேர்ந்தவை ஆகும். தொடர்ந்து மூன்று நாட்களுக்கு அவர்கள் இந்தத் தண்டனையை அனுபவித்துள்ளனர்.

திருடப்பட்ட மோட்டார் சைக்கிள்களுக்காக நஷ்ட ஈடாக 3694 டாலர் தொகையை இவர்களின் உறவினர்கள் கொண்டுவந்து கொடுத்த பின்னரே இந்தத் திருடர்கள் விடுதலை செய்யப்பட்டதாக அவர்களில் ஒருவரின் சகோதரி கூறியுள்ளார். இல்லையெனில் அவர்கள் இருவரும் இறந்திருப்பார்கள் என்று அந்தப் பெண் குறிப்பிட்டுள்ளார்.

மூட்டுவாத பாரம்பரிய சிகிச்சையில் பயன்படுத்தப்படும் இந்த விஷமானது இவர்களில் ஒருவரது சிறுநீரகத்தைப் பாதித்துள்ளதாகவும், மற்றொருவர் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கு சிகிச்சை அளித்துவரும் டாக்டர் ரொபர்டோ பாஸ் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.