Header Ads



இவர்களை கொலை செய்ய பெற்றோர் வலியுறுத்து - அபுதாபி இளவரசர் உதவிக்கு தயார்


இந்தியா - பீகார் மாநிலம், பாட்னாவைச் சேர்ந்த, சபா, பராக் சலீம் ஆகிய இருவரும், உடல் ஒட்டிப் பிறந்த சகோதரிகள். இப்போது, 15 வயதாகும் இருவரின் உடலையும், அறுவை சிகிச்சை மூலம் தனித்தனியாக பிரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஏழைச் சிறுமிகள்: இவர்கள், ஏழை குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பதால், அறுவை சிகிச்சை செலவை, இந்த சிறுமிகளின் பெற்றோர் ஏற்க முடியாத நிலையில் உள்ளனர். இது பற்றி அறிந்த, அபுதாபி இளவரசர் ஷேக் முகமது பின் ஜயத், அறுவை சிகிச்சைக்கு ஆகும் செலவை ஏற்பதாக அறிவித்தார்.

இருப்பினும், இக்குழந்தைகளின் பெற்றோர், கருணை கொலை செய்ய அனுமதி கோரி, கோர்ட்டில் மனு செய்தனர். இது குறித்த வழக்கு, சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது.பாட்னா குழந்தைகளை தனியாக பிரிப்பது குறித்து, மருத்துவ அறிக்கை தாக்கல் செய்யும் படி, மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. இதையடுத்து, டில்லியில் அகில இந்திய மருத்துவ கவுன்சிலின் நரம்பியல் நிபுணர் தலைமையிலான குழுவினர், கடந்தாண்டு பாட்னா சென்று, ஒட்டிப்பிறந்த குழந்தைகளை பார்வையிட்டு, மருத்துவ அறிக்கை தாக்கல் செய்தனர். அதில், "அறுவை சிகிச்சைக்கு பின், ஒரு குழந்தையை மட்டுமே காப்பாற்ற முடியும்; இருவர் உடல் வேறாக இருந்தாலும், சீறுநீரகம், மூளை, ரத்தக்குழாய் ஒன்று தான் உள்ளது. எனவே, பிரிப்பது நல்லதல்ல; பிரித்தாலும், பிழைக்கும் ஒருவரின் நிலைமையும் உறுதியாக சொல்ல முடியாது' என குறிப்பிடப்பட்டிருந்தது.

இதையடுத்து, தங்கள் குழந்தைகளை பராமரிக்க, பீகார் மாநில அரசு நிதியுதவி அளிக்க வேண்டும் என, அக்குழந்தைகளின் பெற்றோர் கோரினர். இந்த வழக்கு, மீண்டும், நேற்று (10-04-2013) சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், தீபக் மிஸ்ரா தலைமையிலான, "பெஞ்ச்' தங்கள் உத்தரவில் கூறியதாவது,

தினமும் பரிசோதனை: ஒட்டி பிறந்த சகோதரிகள், சபா மற்றும் பராக் சலீம் ஆகியோரின் பராமரிப்பு செலவை பீகார் அரசு ஏற்க வேண்டும். அவர்களுக்கான மருத்துவ செலவையும், பீகார் அரசு பார்த்து கொள்ளவேண்டும். பாட்னா மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை டாக்டர்கள், ஒட்டிப் பிறந்த சகோதரிகளுக்கு தேவையான மருத்துவ பரிசோதனைகளை செய்ய வேண்டும்.இவ்வாறு நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறினர். எனினும், அந்த சகோதரிகளின் பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை அளிக்க தயாராக இல்லை என்பதால் குழப்பம் நிலவுகிறது.


No comments

Powered by Blogger.