Header Ads



முஸ்லிம் சமூகம் ஒன்றுபட்டு செயற்படுமா..?



கடும்போக்கு பௌத்த அமைப்புக்கள் கடந்த சில மாதங்களாக முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை எதிர்கொள்வதற்காக பல்வேறு காரணங்களால் பிரிந்து செயற்பட்ட முஸ்லிம் அரசியல் கட்சிகள், முஸ்லிம் ஆத்மீக குழுக்கள் மற்றும் முஸ்லிம் பிரமுகர்கள் பேதங்களை மறந்து ஒன்றுபட்டு செயற்படுவதற்கு முற்பட்டிருப்பதனை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.

சிறு சிறு காரணங்களுக்காகவும் சுய லாபத்திற்காகவும் பிரிந்து செயற்பட்டவர்கள் இன்று பொது எதிரியை எதிர்கொள்வதற்காக ஒன்று சேர்ந்து இருப்பது வரவேற்புக்குரியது. ஆளும் கட்சிக்குள் இருந்த அமைச்சர்கள் மத்தியில் கூட கடந்த காலத்தில் பிளவுகள் காணப்பட்டன. அவர்கள் ஒன்றாகச் சேர்ந்து பிரச்சினைகளை பேசியதைக் காணக்கூடியதாக இருக்கவில்லை.

ஆளும் கட்சியில் இன்று ஐந்து அமைச்சர்களும் மூன்று பிரதியமைச்சர்களும் இருப்பதோடு பாராளுமன்றத்தில் பதினைந்து பேர் ஆளும் கட்சியில் இருக்கிறார்கள். எதிர்க்கட்சியில் இரு முஸ்லிம்கள் இருக்கிறார்கள். இவர்கள் எல்லோரும் ஒன்றுபட்டு செயற்பட வேண்டியதன் அவசியத்தை நாடளாவிய ரீதியில் முஸ்லிம்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த வலியுறுத்தலின் பயனாகவோ என்னவோ முஸ்லிம் அமைச்சர்கள் ஒன்றாக இயங்க முற்பட்டுள்ளனர். அண்மைக்காலமாக கடும்போக்கு அமைப்புக்கள் முஸ்லிம்கள் தொடர்பாக விடுத்துள்ள அச்சுறுத்தல்கள் மற்றும் சவால்களை எதிர்கொள்வதற்காக இந்த அரசின் மூத்த அமைச்சரான அல்ஹாஜ் ஏ.எச்.எம் பௌசியுடன் இணைந்து மற்றைய அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், ஏ.எல்.எம். அதாவுல்லா, றிஷாத் பதியுதீன் ஆகியோர் ஒன்றுபட்டு செயற்பட்டு வருவதனை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.

இந்த அணியில் புதிதாக அமைச்சரவையில் இணைந்த பஷீர் சேகுதாவூத் இருப்பதாக தெரியவில்லை. அவரையும் இணைத்து அல்லது அவரும் இணைந்து இப்பணிகளை முன்னெடுப்பதே சமூகத்திற்கு பலம் மிக்கதாக அமையும். சமூகம் தொடர்பான விடயங்களில் சில பிரதியமைச்சர்கள் தனித்தனியாக கருத்துக்களை தெரிவிப்பதற்கு முற்படுவதனை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. இது அவ்வளவு நல்லதல்ல. எல்லோரையும் ஒன்றிணைத்து முஸ்லிம் அமைச்சர்கள் பிரதியமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் செயற்படுவது வரவேற்கத்தக்கது.

எந்த ஒரு காரணத்திற்காகவும் தமது செயற்பாடுகள் பொது எதிரிக்கு நன்மையாக அமையாத வகையில் செயற்படுவது குறித்து முஸ்லிம் அரசியல் தலைவர்கள் செயற்படுவது அவசியமாகும். இதுவே முஸ்லிம் சமூகத்தின் எதிர்பார்ப்பாகவும் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் முஸ்லிம் சமூகத்தின் சார்பில் எழுப்பப்படும் குரல்களில் இருந்து உணர முடிகின்றது.

ஹலால் தொடர்பான பிரச்சினை தொடர்பாக அது தொடர்பான அமைச்சரவை குழுவில் முஸ்லிம் அமைச்சர்கள் நால்வரும் ஒருமித்து செயற்பட்டிருப்பது பாராட்டுக்குரியது, அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவுக்கு களங்கம் ஏற்பட இடமளிக்காத வகையில் முஸ்லிம் அமைச்சர்கள் ஹலால் குழுவில் கருத்துத் தெரிவித்திருக்கின்றனர்.

அண்மைக்கால முஸ்லிம்களுக்கு எதிர்ப்பான செயற்பாடுகளில் முஸ்லிம் அரசியல் தலைவர்கள் தம் பங்களிப்பை சரியாக செய்யவில்லை என்ற குற்றச்சாட்டை சமூகத்தின் ஒரு சாரார் எழுப்பி வருகின்றனர். அரசாங்கத்துக்குள் இருக்கும் முஸ்லிம் தலைவர்கள் இந்த விடயங்கள் குறித்து பாராளுமன்றத்தில் பேசவில்லை அமைச்சரவையில் பேசவில்லை என்று சிலர் குற்றம் சாட்டுகின்றனர்.

இன்று இருக்கின்ற அரசியல் சூழ்நிலையில் இந்த அமைச்சர்களுடைய செயற்பாடுகள் நடவடிக்கைகள் சில சந்தர்ப்பங்களில் பகிரங்கப்படுத்த முடியாத நிலையில் அவர்கள் இருக்கிறார்கள். இதன் யதார்த்த தன்மையை உணர்ந்து கொள்வது முக்கியமாகும். சிலர் அமைச்சர்கள் அரசாங்கத்தில் இருந்து வெளியேற வேண்டுமென்றும் குரல் கொடுக்கின்றார்கள். அரசாங்கத்திலிருந்து உடன் வெளியேறுவதன் மூலம் எதனை சாதிக்கலாம் என அதற்கு மாற்றுக் கருத்து கூறுகின்றவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

நாடளாவிய ரீதியில் முஸ்லிம்கள் பரந்து விரிந்து வாழ்கின்ற ஒரு சமூகம் சில ஊர்களில் ஐந்து பத்து குடும்பங்கள் என்று பெரும்பான்மை சமூகத்திற்கு நடுவே வாழ்கின்றார்கள். இவர்களுடைய நலன், பாதுகாப்பு என்பவற்றை கருத்திற் கொண்டே சில தீர்மானங்களை அரசியல் தலைவர்கள் எடுக்க வேண்டி இருக்கிறார்கள். இதற்காக அரசியல் தலைவர்கள் பேசாமல் இருக்க வேண்டுமென்பதல்ல. தாம் உள்ளே நகர்த்துகின்ற காய்களைப் பற்றி சமூகத்திற்கு அறிவூட்டுவது அவர்களைப் பற்றி நிலவும் தப்பபிப்பிராயங்களை அகற்ற உதவும்.

எனவே முஸ்லிம் அரசியல் தலைவர்கள் இச்சந்தர்ப்பத்தில் ராஜதந்திரமாகவும் நுணுக்கமாகவும் செயற்பட்டு முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கியுள்ள ஆபத்தில் இருந்து சமூகத்தை மீட்டெடுக்க தமது பங்களிப்பை செய்ய வேண்டும். எல்லோரும் ஒன்றுபட்டு கலந்துரையாடி தீர்மானங்களை எடுக்க வேண்டும்.

பெஷன்பக் நிறுவன தாக்குதலின் பின் கைது செய்யப்பட்டவர்களை விடுவிப்பதற்கு அந்த நிறுவனம் பெருந்தன்மையோடு நடந்து கொண்டிருக்கிறது. இதனால் இப்பிரச்சினை மேலும் நீடிப்பது தவிர்க்கப்பட்டுள்ளது. என்றாலும் கூட இவ்வாறான தீர்மானங்களை எடுக்கும்போது நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் கூறியிருப்பது போன்று ஒருதலைப்பட்சமாக தீர்மானங்களை எடுத்திருக்கக் கூடாது என்பதே சமூகத்தின் கருத்தாகும். இவ்வாறான விட்டுக்கொடுப்புகளை செய்யும் போது மறு பக்கத்திலும் சமூகத்திற்கு நன்மை ஏற்படும் வகையில் பேரம் பேசுதல்களும் இடம்பெற்றிருக்கலாம்.

கடந்த பல மாதங்களாக முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கியுள்ள இப்பிரச்சினைகள் தொடர்பாக பல்வேறுபட்ட நடவடிக்கைகளை எடுத்து வந்த முஸ்லிம் அரசியல் தலைமைத்துவம், ஆத்மீக தலைமைத்துவமான ஜம்மியத்துல் உலமா, சிவில் தலைமைத்துவமான முஸ்லிம் கவுன்ஸில் என்பனவற்றை அணுகி அவர்கள் ஊடாக இவ்வாறான முடிவினை குறிப்பிட்ட நிறுவனம் எடுத்திருந்தால் அதன் மூலம் சமூகத்திற்கு கூடுதலான பயன் கிடைத்திருக்கும்.

இன்று உருவாகியிருக்கின்ற இந்த அவல நிலையிலிருந்து முஸ்லிம் சமுதாயத்தை மீட்டெடுக்க எல்லோரும் ஒன்றுபட்டு செயற்படுவது அவசியமாகும். முஸ்லிம் சமூகத்துடைய இருப்புடன் தொடர்புடைய ஒரு விடயமாக இருப்பதனால் எவருக்கும் இதில் பரீட்சார்த்தங்களை மேற்கொள்ள முடியாது. எனவே எல்லோரும் தூரநோக்கோடு செயற்பட்டு இந்த சவாலில் இருந்து மீட்சி பெற நடவடிக்கை எடுப்பது அவசியமாகும்.

No comments

Powered by Blogger.