Header Ads



இலங்கையை அநீதியாக நடத்தும் அமெரிக்கா தவறு செய்கிறது - கோத்தா ஆவேசம்


போருக்குப் பிந்திய இலங்கையுடனான அமெரிக்காவின் அணுகுமுறை தவறானது என்றும், இருநாடுகளுக்கும் இடையில் நல்ல உறவுகளை ஏற்படுத்திக் கொள்வதற்க இலங்கை தொடர்பான கொள்கைகளை அமெரிக்கா மீளாய்வு செய்ய வேண்டும் என்றும் பாதுகாப்புச்செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். 
 பாதுகாப்பு அமைச்சில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 

“இலங்கை இராணுவ அதிகாரிகளை அமெரிக்கா அநீதியான முறையில் நடத்துகிறது. அவர்கள் செய்வது தவறு என்று அவர்களுக்கு நான் கூற விரும்புகிறேன். 

ஒவ்வொருமுறையும் அவர்கள் (அமெரிக்க இராஜதந்திரிகளும், அதிகாரிகளும்) என்னைச் சந்திக்கும்போதும், எமது இராணுவத்துடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டும் என்று கூறுகிறார்கள். 

அமெரிக்காவில் கட்டளை அதிகாரிகள் மட்ட கற்கைநெறிக்கு அரசாங்கம் பரிந்துரை செய்த மூத்த இராணுவ அதிகாரிகளின் பெயர்கள் நிராகரிக்கப்பட்டது உள்ளிட்ட சர்ச்சைக்குரிய விவகாரங்கள் குறித்து, கொழும்பு வரவுள்ள அமெரிக்கக் குழுவுடன் கலந்துரையாடவுள்ளேன். 

இலங்கை நெருக்கமான உறவு தேவை என்று பல சந்தர்ப்பங்களில் தமது குழுக்கள் கூறியதற்கு மாறாகவே, அமெரிக்கா செயற்பட்டு வருகிறது.  தவறான தகவல்களின் அடிப்படையில், அமெரிக்கா எடுத்த முடிவினால் பாதிக்கப்பட்ட முன்னாள் புனர்வாழ்வு ஆணையாளர் மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க விவகாரம் அதற்கு ஒரு உதாரணம். 

அமெரிக்காவின் இந்தக் கொள்கை மாற வேண்டும். 

இந்தியா தான் பெருமளவில் - 2800 சிறிலங்காப் படையினருக்குப் பயிற்சி வாய்ப்புகளை வழங்குகிறது. அடுத்து. பாகிஸ்தான் 1000 படையினருக்கும், அதற்கடுத்து சீனாவும் பயிற்சிகளை அளிக்கின்றன. அமெரிக்கா இராணுவப் பயிற்சிகளை முற்றாக நிறுத்தினால்,இலங்கை அதிகாரிகள் சீனா, இந்தியா, பாகிஸ்தானுக்கே போக வேண்டும். 

அதேவேளை, அமெரிக்காவில் தற்போது இலங்கை  ராணுவத்தைச் சேர்ந்த 200 இளநிலை அதிகாரிகள் குறுகியகாலப் பயிற்சியை மேற்கொண்டுள்ளதாக இராணுவ அதிகாரிகளை மேற்கோள்காட்டி ஏஎவ்பி செய்தி வெளியிட்டுள்ளது.

No comments

Powered by Blogger.