Header Ads



அக்கரைப்பற்று கல்வி வலய ஆசிரியர் தட்டுப்பாட்டை நீக்குமாறு கோரிக்கை

(எஸ்.எல். மன்சூர்)

அக்கரைப்பற்று வலயத்தில் 65பாடசாலைகள் காணப்படுகின்றன. அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று, பொத்துவில் ஆகிய கோட்டங்களை உள்ளடக்கிய இவ்வலயத்தில் கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக கல்முனையில் மேலதிகமாக இருந்த ஆசிரியர்களை அக்கரைப்பற்று கல்வி வலயத்திற்கு மாகாண கல்வியமைச்சு மற்றும் கல்முனை கல்வி அலுவலகம் ஆகியன இணைந்து இடமாற்றம் செய்யப்பட்டு அக்கரைப்பற்று கல்வி வலயத்திலுள்ள ஆசிரியர்கள் வெற்றிடமாக காணப்படும் பாடசாலைகளில் இணைக்கப்பட்டு கல்வி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

இந்நிலையில் இவ்வருட(2013) ஆரம்பத்தில் வெளிவலயத்திலுள்ள குறிப்பாக கல்முனை கல்வி வலயத்திலிருந்து வருகை தந்து கற்பித்துக் கொண்டிருந்த ஆசிரியர்கள் எவ்வித முன் அறிவித்தலுமின்றி தத்தமது சொந்த வலயங்களுக்கு இடமாற்றம் பெற்றமையினால் அக்கரைப்பற்று கல்வி வலயத்தில் உள்ள பாடசாலைகளில் கடுமையான ஆசிரியர் தட்டுப்பாடு காணப்படுவதாக கூறப்படுகின்றது. அதேவேளை அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை கோட்டங்களிலிருந்து சுமார் 50க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பொத்துவில் கோட்டப் பாடசாலைகளுக்கு இவ்வாண்டு ஜனவரி மாதம் 15ஆந்திகதிமுதல் இடமாற்றம் வழங்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அதேவேளை அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று பாடசாலைகளிலிருந்து இவ்வாறு ஆசிரியர்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதால் இப்பாடசாலைகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை அதிகரித்துள்ளது. 

அட்டாளைச்சேனைப் பிரதேசத்திலுள்ள 24 பாடசாலைகளிலும் ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகின்றது. ஆரம்பக்கல்வி கற்பிக்கும் ஆசிரியர்;களினது பற்றாக்குறையின் காரணமாக இவ்வாண்டின் முதலாம் தரத்திற்குச் சேர்க்கப்பட்டுள்ள மாணவர்களை ஆங்கில ஆசிரியர்கள், தொண்டர் ஆசிரியர்கள் கற்பிக்கும் நிலைமை தோன்றியுள்ளது. திடீரென்று வேற்றுவலய ஆசிரியர்கள் 52பேரை இவ்வாறு அக்கரைப்பற்று வலயத்திலிருந்து இடமாற்றம் பெற்றுச் சென்றமையும் இதற்கு முக்கிய காரணமாகும் என்று வலயக்கல்வி அதிகாரிகள் கூறுகின்றனர். பாடசாலைகளில் பாடங்களை கற்பிக்க ஆசிரியர்கள் பற்றாக்குறையாக இருக்கின்ற அதேவேளை கல்முனை போன்ற வலயங்களில் அதிகளவு ஆசிரியர்கள் காணப்படுகின்றார்கள் என்ற காரணத்தினால் இந்த ஆசிரியர்கள் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஆசிரியர் பற்றாக்குiறாக காணப்படும் அக்கரைப்பற்று வலயக் கல்விப் பிரதேசத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டனர். மாணவர்களின் கல்வியில் அக்கரை கொண்டு உழைக்கும் கிழக்குமாகாண கல்வியமைச்சின் அதிகாரிகள் அக்கரைப்பற்று கல்வி வலயத்தில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்திக்குமாறு அதிபர்கள், மாணவர்களின் பெற்றோர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர். 

No comments

Powered by Blogger.