Header Ads



ஆட்கள் காணாமல் போகின்றமை - ஐ.தே.க., ஜே.வி.பி. எதிர்ப்பு - அவுஸ்திரேலியா விசனம்

பிரேமகுமார் குணரத்னம் மற்றும் திமுது ஆட்டிகல காணாமற்போனமை தொடர்பில் தாம் அதிக கவனம் செலுத்துவதாக எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கடத்தல் மற்றும் காணாமற் போதல் என்பன நாளாந்த செயற்பாடுகளில் ஒன்றாக மாறியுள்ளமை நாட்டின் நீதியும் பாதுகாப்பும் நடைமுறைப்படுத்தப்படும் முறைமையை தெளிவுபடுத்துவதாக அவர் குறிப்பிடுகிறார்.

கடந்த ஆறு மாதங்களில் 56 காணாமற்போன சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக குறிப்பிட்ட ரணில் விக்ரமசிங்க,  ஜெனீவா மாநாடு இடம்பெற்ற காலகப்பகுதியில் 19 கடத்தல் சம்பவங்கள் பதிவானமை வருந்தத்தக்கது எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை இந்த கடத்தல் சம்பவங்கள் ஜனநாயகத்திற்கு பாரிய அச்சுறுத்தலை தோற்றுவிப்பவை என மக்கள் விடுதலை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலைமை விரைவில் கட்டுப்படுத்தப்பட வேண்டிய ஒன்றென முன்னணி குறிப்பிட்டுள்ளது. தற்போது எழுந்துள்ள இந்த ஜனநாயகத்திற்கு எதிரான ஒடுக்குமுறையை தோற்கடிப்பதற்கு அனைவரும் முன்வர வேண்டுமெனவும் மக்கள் விடுதலை முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது.

இதேவேளை விசாரணைகள் முடிவடையும் வரையில் இவை காணாமற்போதல் சம்பவங்களா என்பது தொடர்பான தீர்மானமொன்றை எட்ட முடியாதென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

குறித்த சம்பவங்கள் தொடர்பில் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் சாட்சியங்களுக்கு அமைய விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். விசாரணை நிறைவடைந்ததன் பின்னர் தெளிவான தகவல்களை வழங்க முடியுமென அவர் குறிப்பிடுகிறார். குறித்த நபர்களை பொலிஸார் கடத்தியதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டினை முற்றாக நிராகரிப்பதாக குறிப்பிட்ட அஜித் ரோஹண,  எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அவ்வாறானதொரு சம்பவம் இடம்பெறவில்லை என குறிப்பிட்டார்.

இலங்கையில் சனிக்கிழமை அதிகாலை காணாமல்போன மக்கள் போராட்ட இயக்கத்தின் தலைவர் பிரேம்குமார் குணரட்ணத்தை கண்டுபிடித்துத் தருமாறு ஆஸ்திரேலிய அரசாங்கம் இலங்கையிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
ஆஸ்திரேலியாவில் தற்போது வசிக்கும் அவரது மனைவி டாக்டர் சம்பா சோமாரட்ண, ஆஸ்திரேலிய குடியுரிமை பெற்ற தனது கணவரை கண்டுபிடித்துதருமாறு ஐநாவிடமும் ஆஸ்திரேலிய அரசிடமும் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

No comments

Powered by Blogger.