Header Ads



பல்கலைக்கழக இஸட் வெட்டுப்புள்ளியை ரத்துச்செய்க - ஐ.தே.க. கோரிக்கை


கல்வியமைச்சர், பெற்றோர், மாணவர்களுக்கு தெளிவில்லாத "இஸட்' புள்ளி முறைமையை அரசாங்கம் உடனடியாக இரத்துச் செய்யவேண்டுமென அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுக்கும் ஐ.தே.கட்சி உயர் கல்வி பெறுபேறுகளின் பிழைகளுக்கு இறுதியில் கணனியே குற்றவாளியாக்கப்படுமென்றும் தெரிவித்துள்ளது.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில், உரையாற்றும் போதே லக்ஷ்மன் கிரியெல்ல எம்.பி. இதனைத் தெரிவித்தார். இங்கு தொடர்ந்து அவர் உரையாற்றுகையில்:

"இஸட்'' புள்ளிமுறை தொடர்பாக தமக்கு எதுவுமே தெரியவில்லையெனக் கல்வியமைச்சர் பந்துல குணவர்தன பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.  இது தொடர்பில் பெற்றோர்களுக்கும் மாணவர்களுக்கும் தெளிவில்லாத நிலைமையே காணப்படுகின்றது.

அதிகாரிகளுக்கு மட்டுமே இது குறித்து தெரிகின்றது. மாணவர்கள் பெறும் புள்ளிகளுக்கு மேலதிகமாக புள்ளி இதன் மூலம் வழங்கப்படுகின்றது. இதனால் மாணவர்கள் நெருக்கடிக்குள் தள்ளப்படுவதோடு அநீதியை எதிர்நோக்குகின்றனர். அந்தக் காலங்களில் மாணவர் பெறும் மொத்தப் புள்ளிகளுக்கமையவே பெறுபேறுகள் வழங்கப்படும். இதுவே சிறந்ததாகும். எனவே அரசாங்கம் உடனடியாக இஸட் புள்ளி முறைமையை இரத்துச் செய்யவேண்டும். 

அத்தோடு உயர்தர பெறுபேறுகளால் பாதிப்படைந்த மாணவர்களின் வினாத்தாள்கள் கல்விமான்கள், நிபுணர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட மாணவர்கள் உள்ளடக்கப்பட்ட குழுவொன்றினால் பரிசீலிக்கப்பட்டு மாணவர்களுக்கு நியாயத்தைப் பெற்றுக்கொடுக்கவேணடும். 

ஐ.தே, கட்சி இப்பிரச்சினையை அரசியல் மயமாக்க விரும்பவில்லை. ஏனென்றால் இது மாணவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் விடயம். ஏற்கனவே இப்பிரச்சினையால் மாணவர்கள் மனம் தளர்ந்து போயுள்ளனர். 

அவர்களை மேலும் விரக்தியில் தள்ள நாம் தயாரில்லை. அதேவேளை எம்.பி.க்களான ருவன் விஜேவர்தன, அகில விராஜ் காரியவசம தலைமையில் பாதிக்கப்பட்ட மாணவர்களின் முறைப்பாடுகளை பெற்றுக் கொள்வதற்கு கையடக்க தொலைபேசி சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

இலங்கையில் பிரபல்யம் பெற்ற கிரிக்கெட் வீரர் சதாசிவம் கொலை வழக்கு விசாரிக்கப்பட்டு இறுதியில் இக்கொலைக்கு உலக்கையே காரணமெனத் தீர்ப்பளிக்கப்பட்டது.  அதேபோன்று உயர் கல்விப் பெறுபேறுகளின் பிழைகளுக்கு கணனிகளே காரணமென்று தெரிவிக்கப்படும் நிலைமையே உருவாகும் என்றார். 

No comments

Powered by Blogger.