Header Ads



இலங்கை நீதிமன்றங்களில் 6 இலட்சத்து 50 ஆயிரம் வழக்குகள் தேக்கம்

நீதிமன்றங்களில் குவிந்துள்ள சுமார் 6 இலட்சத்து 50 ஆயிரம் வழக்குகளை துரிதமாக தீர்ப்பதற்காக சிவில் சட்டக் கோவையில் திருத்தம் செய்வதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது. 10 மில்லியன் பெறுமதியை விடக் குறைவான வழக்குகளை இணக்கப்பாட்டுடன் தீர்க்க புதிய சட்டத்தின் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீமினால் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டது. வழக்கு விசாரணைகள் தாமதமடைவதால் ஏற்படும் பொருளாதார நஷ்டம் குறித்து 2012 வரவு-செலவுத்திட்டத்தில் ஜனாதிபதி குறிப்பிட்டிருந்தார். இதன் பிரகாரமே சிவில் சட்டக் கோவையில் திருத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பிலான சட்ட மூலம் தயாரிக்கப்பட்டுள்ளதோடு விரைவில் அது பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட உள்ளது. இந்த சட்ட மூலத்தின் பிரகாரம் நீதிமன்றக் கட்டமைப்பினுள் இணக்கப் பாட்டு தலைவர்கள் நியமிக்கப்படுவர். தீர்க்கப்படாத சுமார் 6,50,000 வழக்குகள் நீதிமன்றங்களில் குவிந்துள்ளன. புதிய சட்டத்தினூடாக வழக்குடன் தொடர்புடைய சிக்கல் மீண்டும், மீண்டும் தலைதூக்குவதை தடுக்க குறித்த பிரச்சினை இரு தரப்பினரினதும் விருப்பத்துடன் முடிவுக்குகொண்டுவரப்படும்.

உத்தேச முறையின் பிரகாரம் வழக்குடன் தொடர்புடைய நீதிமன்ற உத்தரவு, அழைப்பாணை அடங்கலான நீதிமன்ற தகவல்கள், வழக்குடன் தொடர்புடைய தரப்பினருக்கு நேரடியாக வழங்காது அவர்களின் சட்டத்தரணிக்கோ குறித்த தரப்பினருக்கோ மின்னஞ்சல் மூலம் அனுப்பவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

No comments

Powered by Blogger.