Header Ads



பிரிட்டன் விசா தொடர்பில் புதிய விதிகள் - இலங்கையருக்கும் பாதிப்பு

பிரிட்டனுக்கு தற்காலிக விசாவினைப் பெற்றுச் செல்லும் குடியேற்றவாசிகள் அங்கு தொடர்ந்தும் தங்கியிருப்பதற்கு விண்ணப்பிக்க முடியாதென கொழும்பிலுள்ள பிரிட்டிஷ் உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. பிரிட்டனுக்கு வருகை தரும் குடியேற்றவாசிகள் தொடர்பான யோசனைகளை அந்நாட்டு அரசாங்கம் அறிவித்திருக்கிறது.

வேலை வாய்ப்பு ஊடாக பிரிட்டனில் நிரந்தரமாக தங்கியிருக்கும் விடயங்கள் தொடர்பான மறுசீரமைப்பு விடயங்கள் குறித்து பொதுமக்கள் கலந்துரையாடலை அந்நாட்டு குடிவரவுத்துறை அமைச்சர் டாமியன் கிரீன் ஆரம்பித்து வைத்துள்ளார். தற்காலிக அல்லது நிரந்தர விசாக்கள் தொடர்பான யோசனைகளில் கடுமையான விதிமுறைகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன. அதாவது பிரிட்டனில் தங்கியிருக்க விரும்புவோருக்கு இந்தக் கடுமையான விதிமுறைகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன.

தற்காலிக மற்றும் நிரந்தர குடிபெயர்வுக்கிடையிலான தொடர்புகளை உடைப்பதை நோக்கமாகக் கொண்டு இந்த யோசனைகளை நான் முன்வைத்துள்ளேன். தங்கியிருப்பதைத் தெரிவு செய்ய விரும்புவோருக்கு அநேகமாக இந்த விடயம் தானாகவே உருவாகிவருகின்றது. இந்த விடயத்தில் மாற்றம் தேவைப்படுகிறது. உரிய முறையில் செயற்படும் விதத்தில் குடிவரவு முறை உருவாக்கப்பட வேண்டும். சிறப்பான பணியாளர்கள் பிரிட்டனுக்கு வருகை தருவதை நாம் விரும்புகிறோம். எமது பொருளாதாரத்திற்கு வலுவான பங்களிப்பு வழங்குவதை விரும்புகிறோம். அதன் பின்னர் அவர்கள் தமது நாட்டிற்கு திரும்பிச் செல்ல வேண்டும்.

கணிசமான அளவுக்கு குடிவரவு மட்டத்தைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டு குடிவரவு முறைமையில் மறுசீரமைப்பை அரசாங்கம் அமுல்படுத்துகிறது. இந்த நடவடிக்கைகளின் அடுத்த கட்டமாக இன்றைய அறிவிப்பு உள்ளது என்று பிரிட்டிஷ் குடிவரவுத் துறை அமைச்சர் டாமியன் கிரீன் கூறியுள்ளார். அவர் இது தொடர்பாக மேலும் தெரிவித்திருப்பதாவது;
தற்போதையை முறைமையின் பிரகாரம் பிரிட்டனில் நிரந்தரமாகத் தங்கியிருப்பதற்கு விண்ணப்பிக்க தொழிலாளர் பலருக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.

2010 இல் 84 ஆயிரம் பேர் வேலை வாய்ப்பிற்காக பிரிட்டனுக்குள் பிரவேசித்துள்ளனர். அவர்களுக்கு தங்கியிருப்பதற்கு அனுமதி அளிக்கப்ப்பட்டது. 12 வார கலந்தாலோசனையின் பரிசீலனைக்கு எடுக்கப்படும் முக்கிய யோசனைகள் பின்வருமாறு,

தற்காலிகமாக வருகை தரும் தொழிற்தேர்ச்சி பெற்ற தொழிலாளர்கள் நிரந்தரமாகத் தங்கியிருக்க முடியும் என்ற ஊகம் முடிவுக்கு வருகிறது. அதேசமயம் உதாரணமாக 150,000 ஸ்ரேலிங் பவுண்ஸ் சம்பாதிப்போர் அல்லது விசேட பொருளாதார அல்லது பிரிட்டனுக்கு சமூக விழுமியங்களை வழங்கக்கூடிய தொழில்களைக் கொண்டிருப்போர் இந்த மார்க்கத்தினூடாக நிரந்தரமாகக் குடியிருப்பதற்கான ஏற்பாடுகள் தொடர்ந்தும் இருக்கும்.

மேற்குறிப்பிட்ட இரண்டாவது வகைக்குப் புறம்பானவர்கள் பிரிட்டனில் மூன்று வருடங்கள் தங்கியிருப்பதற்கு விண்ணப்பிக்க முடியும். அதேசமயம், ஆகக் கூடியது ஐந்து வருடங்களுக்கு தங்கியிருப்போரும் அவர்களில் சார்ந்தவர்களும் அந்த குறித்த காலப்பகுதிக்குப் பின்னர் வெளியேற வேண்டும். பிரிட்டனுக்குள் தங்கியிருக்க விண்ணப்பிப்போரைச் சார்ந்திருப்போருக்கு ஆங்கில மொழி தேவைப்படுகிறது. 12 மாதங்களுக்கு தற்காலிகமாக பணிபுரிவோர் மட்டுப்படுத்தப்படுவார்கள்.


No comments

Powered by Blogger.