March 10, 2018

யா அல்லாஹ், இலங்கை முஸ்லிம்களை பாதுகாப்பாயாக..!

நமது எதிர்காலம் நமது கரங்களில்தான் இருக்கிறது

இலங்கை முஸ்­லிம்­க­ளா­கிய நாம் மிகவும் நெருக்­க­டி­யான கால­கட்­ட­மொன்றைச் சந்­தித்­தி­ருக்­கிறோம். இந்த நாட்டில் வாழ்­வதா? நாட்டை விட்டும் வெளி­யே­று­வதா? இந்த நாட்டில் நமது சந்­த­திகள் வாழ முடி­யுமா? இன்றேல் இப்­ப­டியே காலா­கா­லா­மாக இன­வா­தத்­துக்கு நமது உயிர்­க­ளையும் உடை­மை­க­ளையும் பலி கொடுப்­பதா? என்­பதே இன்று எல்லா முஸ்­லிம்­களின் மன­திலும் எழும் பிர­தான கேள்­வி­யாக உள்­ளது.

1983 ஜூலைக் கல­வ­ரமே இந்த நாட்­களில் நமது கண்முன் வந்­து­போ­கின்­றன. தமிழ் மக்­க­ளுக்கு ஏற்­பட்ட அதே நிலை முஸ்­லிம்­க­ளுக்கும் வந்­து­விட்­டதா எனும் கேள்­விக்கு அது வெகுதூரத்தில் இல்லை என்பதே பலரிடமிருந்தும் விடையாக வருகிறது. தமி­ழர்­க­ளுக்கு எதி­ராக ஒரே நாளில் கல­வ­ரத்தை அரங்­கேற்­றி­ய­வர்கள் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக கட்டம் கட்­ட­மாக கவ­ல­ரத்தை கட்­ட­விழ்த்­து­வி­டு­கி­றார்­களா என்­ப­தற்கு காலம்தான் பதில் சொல்லும்.

இலங்கை முஸ்­லிம்கள் எப்­போ­துமே இந்த நாட்­டுக்கு துரோகம் செய்ய நினைத்­த­தில்லை. பயங்­க­ர­வா­தத்தை எதிர்­கொள்­வதில் இலங்கை அர­சாங்­கத்­துக்கும் பெரும்­பான்மை மக்­க­ளுக்கும் பக்­க­ப­ல­மா­கவே இருந்­தி­ருக்­கி­றார்கள். '' யுத்த காலத்தில் முஸ்­லிம்­கள்தான் எம்மைப் பாது­காத்­தார்கள். முஸ்லிம் சமூகம் எப்­போதும் எம்­மு­டன்தான் இருந்­துள்­ளது. இவ்­வா­றான முஸ்லிம் சகோ­த­ரர்­க­ளுக்கு ஏன் இந்த துரோ­கத்தை செய்­கி­றார்கள். இந்த வன்­மு­றை­யா­ளர்கள் துரோ­கி­கள்'' என பாது­காப்புப் படை­களின் தள­பதி அட்­மிரல் ரவி விஜே­வர்­தன நேற்று முன்­தினம் ஊடக மாநாட்டில் குறிப்­பிட்ட கருத்­துக்­களே இதற்குச் சாட்­சி­யாகும்.

இவ்­வா­றான பாரம்­ப­ரி­யத்தைக் கொண்ட முஸ்­லிம்­களை சிங்­கள பெரும்­பான்மை சமூகம் இந்த நாட்டைச் சூறை­யாட வந்­த­வர்­க­ளாக நோக்­கு­வ­தற்­கான காரணம் என்ன? இது எங்­கி­ருந்து ஆரம்­பித்­தது? இந்த இனக்­கு­ரோத சிந்­த­னையை சிங்­கள மக்கள் மத்­தியில் விதைத்­தது யார்? இதில் முஸ்லிம் சமூகம் விட்ட தவ­றுகள் என்ன? என்ற கேள்­வி­க­ளுக்கு அவ­­சர­மா­கவும் அவ­சி­ய­மா­கவும் விடை காண வேண்­டிய கட்­டத்­துக்கு முஸ்லிம் சமூகம் வந்­துள்­ளது.


இன்று முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக ஏரா­ள­மான குற்­றச்­சாட்­டுக்கள் பெரும்­பான்மை சகோ­த­ரர்­க­ளாலும் இன­வா­தி­க­ளாலும் முன்­வைக்­கப்­ப­டு­கின்­றன. இவற்றில் மிகப் பெரும்­பா­லா­னவை இட்­டுக்­கட்­டப்­பட்­டவை. அடிப்­ப­டை­யற்­றவை. ஆனாலும் சில குற்­றச்­சாட்­டுக்­களில் நியா­யங்கள் இருக்­கின்­றன. அவ்­வா­றெனில் நியா­ய­மான குற்­றச்­சாட்­டுக்­களை ஏற்றுக் கொண்டு அவற்றைத் திருத்திக் கொள்ள முஸ்லிம் சமூகம் தயாரா? அப்­ப­டி­யானால் அதை எங்­கி­ருந்து தொடங்கப் போகிறோம்? இதை வழி­ந­டத்­து­வது யார்? என்ற கேள்­வி­க­ளுக்கும் நாம் இன்றே விடை காண வேண்­டி­யுள்­ளது.

மறு­புறம் நாம் அல்­லாஹ்­வுக்கு அடுத்­தாக இந்த நாட்டின் அர­சாங்கம் மீதும் பாது­காப்புப் படை­யினர் மீதுமே நமது இருப்பை ஒப்­ப­டைத்­தி­ருக்­கிறோம்.  அவ்­வா­றான நிலையில் நம்மைப் பாது­காக்க அர­சாங்­கமும் படை­யி­னரும் தவ­றி­யி­ருக்­கின்­றனர். கண்­டியில் மாத்­தி­ர­மன்றி அளுத்­கம, கிந்­தோட்­டை­யிலும் இவ்­வா­றுதான் செய்­தனர். வன்­மு­றை­யா­ளர்கள் கல­வ­ரத்தை அரங்­கேற்ற பொலி­சாரும் விசேட அதி­ரடிப் படை­யி­னரும் அதை கைகட்டி வேடிக்கை பார்த்­தி­ருக்­கின்­றனர். சில இடங்­களில் தாக்­கு­த­லுக்கு துணை போயுள்­ளனர். இதற்­கான கண்­கண்ட சாட்­சிகள் உள்­ளன. இந்த விட­யத்தை உலமா சபை பிர­தி­நி­திகள் பிர­தமர் மற்றும் பொலிஸ் மா அதி­பரின் முன்­னி­லையே எடுத்துக் கூறி­யுமிருக்கின்றனர்.

ஆக, முஸ்­லிம்­களின் ஒட்­டு­மொத்த வாக்­கு­களால் ஆட்­சிக்கு வந்த ஜனா­தி­ப­தியும் பிர­த­மரும் அதுவும் பிர­த­மரே சட்டம் ஒழுங்கு அமைச்­ச­ரா­க­வி­ருக்­கின்ற நிலையில் முஸ்லிம் மக்­க­ளுக்­காக சட்­டத்தை சரி­வர அமுல்­ப­டுத்­த­வில்லை என்றால் அர­சியல் ரீதி­யாக எமக்கு பாது­காப்பு தரப் போவது யார்? இந் நிலை நீடித்தால் எதிர்­காலத் தேர்­தல்­களில் முஸ்­லிம்கள் நிச்­சயம் வாக்­க­ளிக்கக் கூட முன்­வ­ரப்­போ­வ­தில்லை. இது எவ்­வ­ளவு பெரிய அபாயம்?

 கண்டி கல­வர சூழ்­நி­லையில் முஸ்லிம் அர­சியல் தலை­மைகள் தமது சக்­திக்­குட்­பட பணி­களை இரவு பகல் பாராது செய்­தார்கள் என்­பதை யாரும் மறுப்­ப­தற்­கில்லை.  ஆனாலும் முஸ்லிம் அர­சி­யல்­பி­ர­தி­நி­திகள் மீது முஸ்லிம் சமூகம் எப்­போதே நம்­பிக்கை இழந்­து­விட்­டது. இவ்­வா­றான இக்­கட்­டான சம­யங்­களில் அவர்கள் தமது பத­வி­களைத் துறப்­பார்கள்... அர­சாங்­கத்­துக்கு அழுத்தம் கொடுப்­பார்கள்.. அரபு நாடு­களின் அழுத்­தத்தை இலங்­கைக்கு பெற்றுக் கொடுப்­பார்கள்... என்­றெல்லாம் இலங்கை முஸ்­லிம்கள் ஒரு­போதும் நம்பப் போவ­தில்லை. நாம் வாக்­க­ளித்து பாரா­ளு­மன்­றுக்கு அனுப்­பிய அத்­தனை 21 எம்.பி.க்களும்  பதவிகளுக்காக ஆளும் தரப்பில் இருக்­கையில் எமக்­காக எல்லை தாண்டிக் குரல் கொடுப்­பார்கள்.. தமது சுகபோகங்களை தூக்கி எறிவார்கள் என எதிர்­பார்ப்­பது எவ்வளவு மடமைத்தனம்?

இப்படி நமது எதிர்­காலம் குறித்து எழும் இந்த நியா­ய­மான கேள்­வி­க­ளுக்கு நாம் ஒவ்­வொ­ரு­வரும் விடை காணக் கட­மைப்­பட்­டுள்ளோம். நமக்­காக யாரும் வரு­வார்கள் என்ற எதிர்­பார்ப்­புகள் பொய்த்துப் போய்­விட்­டன. அல்­லாஹ்­வுக்கு அடுத்­த­தாக நமது எதிர்­கா­லத்தை நாமே திட்­ட­மிட வேண்­டி­யி­ருக்­கி­றது. அதற்­கி­ருக்கும் ஒரே வழி கல்­விதான்.

கல்­வியில் முஸ்லிம் சமூகம் மென் மேலும் அக்­கறை காட்ட வேண்டும். கல்­வியும் பண்­பா­டு­மற்ற நான்கு இளை­ஞர்கள் செய்த செயல்தான் இன்று இலங்கை முஸ்­லிம்­களை நடுத்­தெ­ரு­வுக்கு கொண்டு வந்து நிறுத்­தி­யி­ருக்­கி­றது. இன்னுமின்னும் இவ்வாறான இளைஞர்களைத்தான் நமது சமூகம் பிரசவிக்கப் போகிறதா? இஸ்லாமிய விழுமியங்களைப் புறந்தள்ளிய போதைக்கு அடிமையானவர்கள்தான் நமது சமூகத்தின் எதிர்காலத்தை தீர்மானிப்பவர்களா? இல்லை கல்வி அறிவும் மார்க்க அறிவும் ஒரேசேரப் பொருந்திய பண்பாடும் ஒழுக்கமும் கொண்டவர்கள்தான் நமது சமூகத்தின் அடுத்த தலைமுறையினராக வர வேண்டுமா? என்ற கேள்விகளுக்கு விடை காண வாருங்கள். அதன் மூலமாக மாத்திரமே இந்த நாட்டில் எதிர்காலத்தில் எம்மால் தலை நிமிர்ந்து வாழ முடியும் என்பதை மனதில் கொள்ளுங்கள்.

அல்லாஹ் இலங்கை முஸ்லிம் சமூகத்தைப் பாதுகாப்பானாக.

(விடிவெள்ளி பத்திரிகை வெளியிட்டுள்ள ஆசிரியர் தலையங்கம்)

1 கருத்துரைகள்:

சகோதரர்களே அஸ்ஸலாமுஅலைக்கும்.


கடந்த பல நாட்களாக நமது நாட்டில் நமது சமுதாயத்துக்கு எதிராக நடைபெற்றுக் கொண்டிருக்கும் இனவாத செயல்களைக் கருத்தில் கொண்டு நம்மை நாம் கேட்க வேண்டிய கேள்விகள்

1. சிங்களவர்கள் ஏன் நம்மை அடிக்கின்றார்கள் / நம் சொத்துக்களை ஏன் எரிக்கின்றார்கள் / நமது சமுதாயம் செய்த தவறுகள் என்ன? நம்மில் தவறுகள் இருப்பின் அவற்றை எவ்வாறு திருத்தி் கொள்வது?

2. நடைபெற்ற, நடைபெறுகின்ற நிகழ்வுகளில் இருந்து நாம் கற்ற பாடங்கள் என்ன?

3. இந்த நாசகார செயல்கள் இத்துடன் முடிந்து விடுமா அல்லது தொடரப்போகும் பேரழிவுகளுக்கு இதுதான் ஆரம்பமா?

4. அல்லது அப்பப்போ இப்படி அழிவுகள் நடக்கும். உண்மையா பொய்யாஎன்று கூட தெரியாத பேஷ் புக்,வட்ஸ்அப் செய்திப்பரிமாற்றம், எந்தவிதமான நன்மையும் தராத ஹர்த்தால்கள், பாதிக்கப்படாதவர்கள் பாதிக்கப்பட்டோருக்கு சாப்பாட்டு பார்சலுடன் முடிந்த உதவிகள் என்றுதான் நமது எதிர்காலம் இருக்குமா?

5. இதுதான் ஆரம்பம் என்ற உண்மை உணரப்படுகின்றதென்றால், நமது எதிர்கால சந்ததிகள் நிம்மதியாக வாழ என்ன செய்யப் போகின்றோம்?
அவர்கள் முஸ்லீம் நாடுகளுக்கு அல்லது பெரும்பான்மை கிழக்குக்கு ஹிஜ்ரத் போவதா?

6.அல்லது நம்மை நாமே பாதுகாக்க வேண்டிய வழிவகைகளை ஆராய்ந்து அதற்கேற்ப செயற்படுவதா?

7.அப்படி இல்லை என்றால் பெரும்பான்மை சமுதாயங்களுடன் சமரசமாக வாழும் முறைகளை சிந்தித்து செயலாற்றுவதா?
உங்களின் மேலான கருத்துக்களை பதிவிட்டால் அடுத்த கட்ட நகர்வை நாம் கூட்டாக சிந்தித்து செயற்படலாம்.

Post a Comment