Header Ads



ஈரான் விடுத்த கோரிக்கை, நிராகரித்த இலங்கை அரசாங்கம்


இலங்கை கடற்பரப்புக்கு அப்பால் நடுக்கடலில் தத்தளிக்கும் எண்ணெய் தாங்கிக் கப்பல்களுக்கு அவசியமான உணவு மற்றும் குடிநீர் விநியோகங்களை வழங்குமாறு ஈரான் விடுத்த கோரிக்கையை அரசாங்கம் நிராகரித்துள்ளது. அத்துடன், அத்தகைய சேவைகளை வழங்கும் தனிநார் நிறுவனங்கள் அமெரிக்காவின் இரண்டாம் கட்டத் தடைகளை (Secondary Sanctions) எதிர்கொள்ள நேரிடும் என எச்சரித்துள்ளது.


இதுகுறித்து வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில், இலங்கையின் கடற்பரப்புக்கு அப்பால் தற்போது மொத்தம் 47 வெளிநாட்டுக் கப்பல்கள் நங்கூரமிடப்பட்டுள்ளதாகவும், அவற்றில் 15 கப்பல்கள் ஈரானுக்குச் சொந்தமானவை என உறுதியாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.


அமெரிக்கா ஹோர்முஸ் நீரிணை மீது தனது கடற்படைத் தடையை மீள அமல்படுத்தியதை அடுத்து, கடந்த சில மாதங்களாகவே இக்கப்பல்கள் இலங்கைக்கு அப்பால் நங்கூரமிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.


இதனால் ஈரானியக் கப்பல்கள் பல துருவிகளுக்கிடையில் சிக்கியுள்ளன மற்றும் தாயகம் திரும்ப முடியாமல் தத்தளித்து வருகின்றன. ஈரானியக் கப்பல்கள் நாட்டின் பிராந்தியக் கடற்பரப்புக்கு வெளியே நங்கூரமிடப்பட்டுள்ளதால், அவற்றுக்கு எந்தவொரு விநியோகத்தையும் வழங்க இலங்கை அரசாங்கம் எந்தவிதமான கட்டாயத்திற்கும் உட்பட்டதல்ல சுட்டிக்காட்டினார்.


கப்பல்களுக்கு உணவு மற்றும் குடிநீர் போன்ற அத்தியாவசியப் பொருட்களை வழங்குமாறு கோரி ஈரானிய அதிகாரிகள் அரசாாங்த்தைத் தொடர்பு கொண்டதை அவர் உறுதிப்படுத்தினார். “ஒரு அரசாங்கமாக, நாங்கள் இதுவரை அவர்களுக்கு (ஈரானியக் கப்பல்களுக்கு) எதையும் வழங்கவில்லை, எதிர்காலத்திலும் அவ்வாறு வழங்கத் திட்டமிடவில்லை” என்று அமைச்சர் ஹேரத் தெரிவித்தார். ஈரானியக் கப்பல்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை வழங்க மறுப்பது அமெரிக்க அரசாங்கத்தின் அழுத்தத்தினால் அல்ல என்று மறுத்த அவர், நடுக்கடலில் தத்தளிக்கும் ஈரானியக் கப்பல்கள் தொடர்பாக அமெரிக்கா “எந்தவொரு அதிகாரப்பூர்வ செய்தியையும் உத்தியோகபூர்வமாகத் தெரிவிக்கவில்லை” என வலியுறுத்தினார். “கப்பல்களுக்கான இத்தகைய விநியோகங்கள் வழக்கமாகத் தனியார் துறையினராலேயே வழங்கப்படுகின்றன; இது அவர்களைச் சார்ந்த ஒரு விடயமாகும்” என்றும் அமைச்சர் மேலும் கூறினார்.


எவ்வாறாயினும், காலியான கச்சா எண்ணெய் தாங்கிக் கப்பல்களாக உள்ள இந்தக் ஈரானியக் கப்பல்கள் அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளுக்கு உட்பட்டவை என்பதை அவர் சுட்டிக்காட்டினார். எனவே, ஏதேனும் ஒரு தனியார் நிறுவனம் அவற்றுக்கு உணவு, குடிநீர் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களை வழங்கத் துணிந்தால், அவை அமெரிக்காவின் கண்காணிப்புக்குள் சிக்கிக் கொள்ளும் அபாயம் உள்ளதுடன், அந்த நிறுவனங்கள் மீது அமெரிக்கா இரண்டாம் கட்டத் தடைகளை விதிக்கக்கூடும். இதன் மூலம் அத்தகைய நிறுவனம் அமெரிக்க நிறுவனங்களுடன் செய்யும் எந்தவொரு வணிகத் தொடர்புகளையும் இழக்க நேரிடலாம்; மேலும் அவை அமெரிக்க வங்கி அமைப்பிலிருந்தும் முற்றிலும் விலக்கப்படலாம் என்று அமைச்சர் ஹேரத் எச்சரித்தார்.


“ஆகையால், தனியார் துறையினர் மிகுந்த எச்சரிக்கையுடனும் பொறுப்புடனும் நடந்து கொள்ள வேண்டும் என்று நாங்கள் அறிவித்துள்ளோம். இல்லையெனில், அவர்கள் அமெரிக்கத் தடைகளின் பிடியில் சிக்கித் தவிக்கும் அபாயத்தை எதிர்கொள்ள நேரிடும்” என அமைச்சர் குறிப்பிட்டார்.

No comments

Powered by Blogger.