Header Ads



குடும்ப முரண்பாட்டை தீர்க்க மின் கம்பத்தில் ஏறியவருக்கு பாடம் புகட்டிய நீதிமன்றம்


குடும்ப முரண்பாட்டை தீர்த்துக் கொள்வதற்காக உயர் மின்னழுத்த மின்சாரக் கம்பத்தில் ஏறி எதிர்ப்பை வெளியிட்டதால், மின்சார சபைக்கு ஏற்பட்ட நஷ்டத்தைச் செலுத்துமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றம் சம்பந்தப்பட்ட நபருக்கு உத்தரவிட்டுள்ளது. 


இந்த நபர்  கம்புருபிட்டிய பகுதியில் அமைந்துள்ள உயர் மின்னழுத்த மின்சார விநியோகக் கட்டமைப்பிற்குச் சொந்தமான கம்பமொன்றின் மீது ஏறி தனது எதிர்ப்பை வெளியிட்டிருந்தார். 


இதன் காரணமாக திஹகொட, கம்புருபிட்டிய, அக்குரஸ்ஸ, முலட்டியன, தெய்யாந்தர, மாவறல, தெனியாய உள்ளிட்ட பல பகுதிகளுக்கு இரண்டு மணித்தியாலங்களுக்கும் மேலாக மின்சாரம் துண்டிக்கப்பட வேண்டிய நிலை ஏற்பட்டது. 


இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, இந்த நபர் கம்பத்தில் ஏறியதால் மின்சார சபைக்கு ஏற்பட்ட நஷ்டத்தைக் கணக்கிட்டு அறிக்கையளிக்குமாறு மாத்தறை பிரதான நீதவான், கம்புருபிட்டிய பொலிஸாருக்கு உத்தரவிட்டார். 


அதற்கமைய நேற்று (28) மீண்டும் இவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட சந்தர்ப்பத்தில், இரண்டு மணித்தியாலங்களுக்கும் மேலாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் 201,059.90 ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதாக பொலிஸார் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளனர். 


இதன்போது சந்தேகநபர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதுடன், மின்சார சபைக்கு ஏற்பட்ட நஷ்டத்தைச் செலுத்துமாறும், வழக்கை மீண்டும் நவம்பர் மாதம் 3 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவும் மாத்தறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

No comments

Powered by Blogger.