Header Ads



அரபு மொழி சிறப்பியல்புகளும், முக்கியத்துவமும்


பல்வேறுபட்ட மொழிகளையும், விதம் விதமான பாசைகளையும் வல்ல இறைவன் உலகத்தாருக்கு ஓர் பேரருளாகவும், அவனது படைப்பின ஆற்றலுக்கு ஒர் சான்றாகவும், மாந்தர்களுக்கிடையிலான உரையாடல் ஊடகமாகவும ஆக்கிவைத்துள்ளான். பூலோககத்தில் மனித வரலாறு தொடங்கியது தொட்டு இன்று வரை உயிர் வாழக்கூடிய மொழிகள் மற்றும் காலத்தால் அழிந்து பாவனையிழந்து இறந்து போன மொழிகள் சுமார் ஏழாயிரம் வரை இருப்பதாக மொழிகள் ஆய்வுக்கான சர்வதேச நிலையம் கூறுகிறது. அதில் இன்று வரை உயிர் வாழும் பிரதான மொழிகள் வெறும் 200 மொழிகள் மாத்திரமே உள்ளன. 


அந்த வகையில் உலகளாவிய மொழிகளில் அரபு மொழி தொன்மையான மொழியாகவும், இன்று வரை உயிரோட்டமுள்ள மொழியாகவும், முன்வரிசையில் கம்பீரமாக வீற்றிருக்கும் மொழியாகவும் கருதப்படுகிறது.


எகிப்தில் மேற்கொள்ளப்பட்ட தொல்பொருள் ஆய்வொன்றில் கண்டெடுக்கப்பட்ட, நான்காயிரம் வருடம் பழமைவாய்ந்த புராதன அரபு கல்வெட்டு "ஸ்கிரிப்ட் - مخطوط عربي  قديم " அதற்கு சான்றாக உள்ளது. 


சர்வதேச மொழிகளில் ஆறாவது இடத்தில் உள்ள அரபு மொழி உலக வர்த்தக மொழியாகவும் கருதப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாதம் 18 ம் தேதி சர்வதேச அரபு மொழி தினமாக கொண்டாடப்படுகிறது. 


அரபு மொழியின் தனிச் சிறப்பம்சங்கள் -  சில வரிகளில். 


✍ ஐக்கியநாடுகள் சபையின் உலக மொழிகள் தரவரிசையில் அரபு மொழி ஆறாவது இடத்தில் உள்ளது.


✍ உலகெங்கும் சுமார் 45 கோடி மக்கள் அரபுப் பாசையை தாய்மொழியாக பேசுகின்றனர்.


✍ மத்திய கிழக்கு நாடுகள் உட்பட வட ஆபிரிக்க நாடுகள், ஈரான் துருக்கி போன்ற நாடுகளிலும் இம்மொழியை பேசுவோர் வாழ்ந்து வருகின்றனர்.


✍ அரபு நாடுகளில் அரபு மொழியே முதல் தர உத்தியோகபூர்வ மொழியாக காணப்படுகிறது.


✍ அரபு மொழி உலகெங்கிலும் வாழும் முஸ்லிம்களின் சமய வழிபாட்டு மொழியாக கருதப்படுகிறது. 


✍ துருக்கி, பாரசீகம், பிரஞ்சு, ஸ்பானிஷ், குர்திஷ், மலாய், ஆங்கில மொழிகளில் அரபு மொழியின் தாக்கமும் செல்வாக்கும் பரவலாக காணப்படுகிறது. 


✍ துருக்கி, குர்திஷ், மலாய், பாரசீக மொழிகள் அரபு எழுத்துக்களால் எழுதப்படுகிறது. 


✍ "ழாத் மொழி - لغة الضاد"  என அரபு மொழிக்கு ஒரு சிறப்புப் பெயர் உள்ளது. ஏனெனில், அந்த எழுத்தின் ஆழமான உச்சரிப்பு அறபு மொழியில் மாத்திரமே உள்ளது. 


✍ உலக அழகியல் கலைகளில் அரபு எழுத்தணிக் - فن الخط العربي கலை உலகப் புகழ்பெற்ற கலையாக கருதப்படுகிறது. 


✍ ஆங்கில மொழியில் 600 ஆயிரம் சொற்களே இருக்க, அரபு மொழியில் 12.3 மில்லியன் சொற்கள் உள்ள சொல்வளம் மிக்க பாசையாகும். 


✍ லத்தீன் மொழியில் 700 மூலச் சொற்களே இருக்க அரபு மொழியில் 16 ஆயிரம் மூலச் சொற்களைக் கொண்டுள்ளது. 


✍ பாரசீகம், ஹிப்ரு மொழிகள் போலவே வலது புறம் எழுதப்படும் மொழியாகும். 


✍ 28 அகர முதலி எழுத்துக்களைக் கொண்டது. 


✍ அரபு மொழி உலகத்தாருக்கு நல்வழி காட்ட வந்திறங்கிய இருதி வேதம் திருக்குர்ஆனின்தும், திருத் துதரினதும் மொழியாகும்.


👉 அரபு மொழிக் கலைகளும் அதனை கற்பதன் பயன்களும்!


அரபு மொழி காலத்தால் அழியாது உயிர் வாழும் வல்லமை மிக்கது. அழிந்து போகவும் முடியாது. காரணம், அது இருதி வேதம் அல்குர்ஆனோடு தொடர்புற்ற மொழி என்பதாகும். யுக அழிவு நாள் வரை அது நிலைத்து நிக்க வேண்டிய வரத்தை பெற்றுள்ளது. 


அரபுக் கலை இலக்கிய மரபுகள், கதைகள், காவியங்கள்  உலகப்புகழ்பெற்றவை. சொல்நயம் மிக்க அதன் எழுத்து நடையிலும் கவிதை நடையிலுமான பாரம்பரிய இலக்கிய எடுத்துக்காட்டுக்கள் பல்வேறு உலக மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன. 


அரபு மொழியை திறம்பட கற்பதற்கான இலக்கணங்களாக (علم الصرف - சொல்லிலக்கணம்) மற்றும் ( علم النحو - எழுத்திலக்கணம்) காணப்படுகிறது. இம்மொழியை கற்பதற்கான நுழைவாயிலாக இவ்விரு கலைகளும் காணப்படுகிறன. இம்மொழியை அலங்கரிக்கும் ( علم البلاغة - பொருளிலக்கணம்) ஆனது அரபு மொழியின் தனித்துவமான சிறப்பாகும். இக்கலைக்குள் மாத்திரம் (  علم البيان / علم الماني / علم البديع) என மூன்று அணியிலக்கணக் கலைகளை கொண்டுள்ளது. 


கவியரசர் என்று பெயர்பெற்ற எகிப்திய கவிஞர் அஹ்மத் சவ்கி அவர்கள் அரபு மொழியின் மகிமை பற்றி புகழ்பாடும் போது பின்வருமாறு பாடுகிறார்:

'மொழிகளில் எல்லாம் 

அழகியல் ரசனையை 

திறம்பட வைத்த அந்த 

வல்லவன், அல்லாஹ்,

அரபு மொழிக்குள்

பேரழகையும் அதன் 

சூட்சுமத்தையும் 

வைத்துவிட்டான்.'


முஸ்லிம்களின் சமைய வழிபாட்டு மொழி என்பதால் ஆத்மீக பாதையை செப்பனிட அரபு மொழியை கற்றுக்கொள்வது முடியுமான ஒவ்வொரு முஸ்லிம் மீதும்  இன்றியமையாத கடமையாக உள்ளது.


இஸ்லாத்தின் இரு புனித ஏடுகளான திருக்குர்ஆனும் நபி போதனைகளும் அரபு மொழியை மூலமாக கொண்டிருப்பதால் அதனை கற்றுக்கொள்வது ஒரு வணக்கமாகவும் இறைவனையும் ஆத்மீக வழியையும் கண்டறிந்து ஒழுக ஒரு சாதனமாகவும் காணப்படுகிறது. 


(ஒரு கட்டாயப் பணி செவ்வனே நடக்க உறுதுணையாக இருப்பவைகளை செய்வதும் கட்டாயப் பணியாகும் - ما لا يتم الواجب إلا به فهو واجب) என்ற சன்மார்க்க பொது விதிமுறைக்கமைய அரபு மொழி படிப்பது வரேவற்கப்பட்ட படிப்பாக மாறிவிடுகிறது. 


இறைவனின் இறுதி வழிகாட்டியான அல்குர்ஆனை அதன் மூல மொழியான அரபியினூடாக ஒரு வசனத்தை புரிந்து கொள்வதற்கும் மொழி பெயர்புக்களினூடாக பல முறை அறிவதற்குமிடையில் பல நூறு வேறுபாடுகள் உள்ளன.


கருத்துச் செறிவும் கலை நயமும் நிறைந்து காணப்படும் அரபுப் பாசையினூடாக வஹியின் அர்தங்களையும் நோக்கங்களையும் அறியக்கிடைக்கும் இனிமையை அரபு மொழி படித்தால்தான் புரிந்துகொள்ளலாம். 


ஜாஹிலிய சமூகத்தில் அரபு மொழியே ஆதிக்க சக்தியாக காணப்பட்டது. பெருமைக்கான அடையாளமாக வலம்வந்தது. அரபு உரைநடையும் கவிதை நடையும் கொடிகட்டிப் பறந்த ஒரு காலத்தில்தான் வான்மறை அல்குர்ஆன் வந்திறங்ஙியது. மொழியுலகம் அறியாத மூன்றாம் நடையாக பிரவேசம் கொடுத்து அற்புதம் காட்டியது. இதனை இலக்கியமேதை முஸ்தபா ராபிஈ வர்ணிக்கும் போது:


வளம் மிக்க அரபு மொழி,

பன்னெடுங்காலமாக ராஜா 

அற்ற ராஜ்ஜியமாக இருந்து வந்தது.

திருமறை அல்குர்ஆன் வந்திறங்கும் வரை!

என்பதாக வர்ணிக்கிறார். 


அதுபோலவே குறைந்த சொற்களையும் நிறைந்த கருத்துக்களையும் உள்ளடக்கிய இறுதித் தூதரின் அருமையான போதனைகள் யாவும் அரபு மொழிக்குக் கிடைத்த மற்றுமோர் வரமாகும். இதன் விளைவாக வற்றாத ஊற்றாக, ஜீவநதியாக  ஆதிக்கம் செலுத்தும் வரத்தை அரபு மொழி பெற்றுக் கொண்டது. 


இன மொழி வேறுபாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த மார்க்கம் இஸ்லாம் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அவைகள் மூலம் இறைவனை அணுகவோ, நெருங்கவோ முடியாது என்பதில் இரு கருத்தும் இல்லை. ஆனாலும் உலகத்தாரின் இறுதி வழிகாட்டலாக கருதப்படும் புனித ஏடுகளான   அல்குர்ஆன் மற்றும் நபி வாக்குகளின் வரிகளையும், அர்த்தங்களையும் அணுகும் ஊடகம் என்ற வகையில் அரபு மொழி சிறப்படைகிறது.


வர்த்தகம், தொழில் வாய்ப்பு, மற்றும் உலகாயித நோக்கங்களுக்காக ஆங்கிலம், மற்றும் இதர மொழிகளின் முக்கியத்துவத்தை நமது சமூகம் நன்கு அறிந்து வைத்துள்ளது. அது மாத்திரமின்றி அவைகளை கற்றுப் பயன் பெற, லெளகீக இலாபமடைய  இளம் சந்ததியினரை பல நூறுகள் செலவழித்து நாளாந்தம் பகுதி நோர வகுப்புக்களுக்குக் கூட அனுப்பப்படும் சூழலை நாம் கண்கூடாக காணுகின்றோம். 


எனினும் ஆன்மீக வளத்தை அதிகரிக்க, மறு வாழ்வின் தரத்தை பலப்படுத்த அரபு மொழியின் முக்கியத்துவம் பற்றிய பிரக்ஞைகள் நமது சமூக, அரசியல்  தலைவர்களிடம், சிவில், சன்மார்க்க தலைமை பீடங்களிடம், மற்றும் பெற்றோர், பாதுகாவலர்களிடம் போதிய அளவு இருப்பதாக தெரியவில்லை. 


ஈருலக வெற்றியின் ஊடக வாசலாக கருதப்படும் அரபு மொழியை கற்பதற்கும் கற்பிப்பதற்குமான காத்திரமான முன்னொடுப்புக்களை தமிழ் பேசும் உலகில் மேற்கொள்ள வேண்டிய தேவை உள்ளது என்பது ஒரு பெரிய முக்கிய அவதானமாகும். 


✍ ஆக்கம் மற்றும் தமிழாக்கம் / imran farook

No comments

Powered by Blogger.