Header Ads



ஜனாதிபதிக்கு ஆசிரியர்கள் சங்கத்தின் பதிலடி


பரீட்சைகளை கட்டாய சேவையாக்கவோ, தேர்வுக்குழுவை அவசரநிலையின் கொண்டு வரவோ, விடைத்தாள் மதிப்பிடும் பணியிலிருந்து இடைவிலகும் ஆசிரியர்கள் மீது வழக்குத் தொடரவோ அல்லது அவர்களின் உடைமைகளைப் பறிமுதல் செய்யவோ ஜனாதிபதிக்கு எந்தவோர் அதிகாரமும் இல்லையென இலங்கை ஆசிரியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.


நாட்டில் பொருளாதார நெருக்கடி நிலைமையால் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டதுடன் அரசாங்கத்தின் செயற்பாடுகளால் பரீட்சைகளும் பிற்போடப்பட்டன. ஆசிரியர்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் கடுமையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன. பல்கலைக்கழக விரிவுரையாளர்களையும் ஜனாதிபதி அச்சுறுத்தினார். ஜனாதிபதி இவர்களை மிரட்ட முயற்சி செய்கின்றார் என நாங்கள் சந்தேகிக்கின்றோம்“ என இலங்கை ஆசிரியர்கள் சங்க பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.


2023 ஆம் ஆண்டுக்கான பாடப்புத்தகங்கள் இன்னும் வழங்கப்படவில்லை. பாடசாலை சீருடைகள் இன்னும் முழுமையாக வழங்கப்படவில்லை. கல்வியை அத்தியாவசிய சேவையாக்கும் பதவியில் ஜனாதிபதி இருப்பாயின் மேற்குறிப்பிட்ட விடயங்களையும் சரி செய்திருக்க வேண்டும்.


கல்வியை அத்தியாவசிய சேவையாக்கும் ஜனாதிபதியின் முடிவை ஒரு அடக்குமுறை செயலாகத் தான் பார்க்க முடியும்.


சிறுவர்களின் போசாக்குத் திட்டங்கள் வலுப்படுத்தப்பட்வில்லை. பாடசாலைகளில் அதிகரிக்கப்படும் அனைத்து செலவுகளும் பெற்றோர் மீது திணிக்கப்படுகிறது. இப்போது அவர்கள் எம்மிடம் முகம் சுளிக்கின்றார்கள்.


நாங்கள் இதற்குப் பயப்படவில்லை. ஊழல் தடுப்புச் சட்டத்தைக் கொண்டு வந்து அவர்கள் எங்களை ஒடுக்கப் பார்க்கிறார்கள்.


கல்வி அமைச்சர் இப்போது பல்வேறு அறிக்கைகளை வெளியிடுகிறார். சரியான முடிவுகள் எடுக்கப்படாமலும் கலந்துரையாடப்படாமலும் இருப்பதால் இன்னும் மதிப்பீட்டுப் பணிகள் ஆரம்பிக்கப்படவில்லை. ஆசிரியர்களுக்கு ரூ.3,000 கொடுப்பதற்காக அமைச்சரவையில் ஒரு பத்திரத்தை சமர்ப்பித்தார். அது இரண்டு மாதங்களாக திறைசேரியில் இழுத்தடிக்கப்படுகிறது. இந்த மதிப்பீட்டுப் பணிகள் தாமதமாகுகின்றது என்றால் அது அரசாங்கத்தினால் தான்.


இவர்கள் மாணவர்களின் வாழ்க்கையோடு விளையாடிக் கொண்டு பழியை எம்மீது சுமத்துகிறார்கள்.


இந்தப் பிரச்சினைகளுக்கான பதில்கள் இந்த அரசாங்கத்திடம் இல்லை. தொழிலாளர் சட்டங்கள் பற்றித்தான் கவலைப்படவில்லை என ஜனாதிபதி கூறுகின்றார். அவர் எப்படி அவ்வாறு செய்யலாம். ஆசிரியர்களுக்கு ஜனாதிபதி சவால் விட்டால் அதை அவருக்கே திருப்பித்தர ஆசிரியர்கள் சங்கம் தயங்காது.


விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிக்கு 19,000 ஆசிரியர்கள் தேவை. ஆனால் 12,000 ஆசிரியர்கள் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர். 3,000 ரூபாய் தருவதாக இருந்தால் ஆசிரியர்கள் ஒரு முடிவு எடுப்பார்கள். அப்போது பிரச்சினையும் தீர்ந்திருக்கும். பல்கலைக்கழக விரிவுரையாளர்களும் இதில் பங்கேற்க வேண்டும். அவர்களின் தேவைகளும் நிறைவேற்றப்பட வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தினார்.

No comments

Powered by Blogger.