Header Ads



மெஸ்ஸி பெயரைக் கூறி ஆத்திரப்படுத்திய ரசிகர்கள், கோபமடைந்த ரொனால்டோ பாட்டில்களுக்கு உதைப்பு - சவூதியில் சம்பவம்


சௌதி ப்ரோ லீக் புள்ளிப் பட்டியலில் யார் முதலிடம் பிடிப்பது என்பதில் கிறிஸ்டியானோ ரொனால்டோ கேப்டனாக வழிநடத்திய அல்-நாசர் அணிக்கும் அல்-இட்டிஹாட் அணிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.


முன்பு அல்-பேட்டின் அணியை வீழ்த்தி அந்த முதலிடத்தை அல்-நாசர் பிடித்திருந்தது. ஆனால், நேற்று நடந்த போட்டியில் அல்-நாசரை வீழ்த்திய அல்-இட்டிஹாட் புள்ளிப் பட்டியலில் முதலிடத்தைக் கைப்பற்றியது.


நேற்று(மார்ச் 9) ஜெட்டாவில் உள்ள கிங் அப்துல்லா ஸ்போர்ட்ஸ் சிட்டியில், கிறிஸ்டியானோ ரொனால்டோவின் அல்-நாசர் அணி மற்றும் அல்-இட்டிஹாட் அணி சௌதி ப்ரோ லீக் போட்டியில் மோதியது. அதில், அல்-இட்டிஹாட் அணியிடம் 1-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.


அல்-இட்டிஹாட் அணி 4-2-3-1 என்ற வரிசையில் வீரர்களை நிறுத்தி தனது ஆட்டத்தைத் தொடங்கியது. மைதானத்திற்குள் ரொனால்டோ நுழையும்போது அல்-இட்டிஹாட் ரசிகர்கள் “மெஸ்ஸி மெஸ்ஸி மெஸ்ஸி” என்று அவருக்குப் போட்டியாளராகக் கருதப்படும் லியோனெல் மெஸ்ஸியின் பெயரை உச்சரித்தனர்.


ஆட்டம் தொடங்கிய முதல் சில நிமிடங்களிலேயே அல்-இட்டிஹாட் வீரர்கள் நல்லதொரு சவாலை வழங்கப் போகிறார்கள் என்பதற்கு ஆயத்தமாக, ரொனால்டோ மீது தங்கள் கண்களை வைத்தார்கள். அந்த அணியைச் சேர்ந்த ஹேமடுக்கு கோல் வாய்ப்பு ஒன்றும் ஆட்டம் தொடங்கிய நான்காவது நிமிடத்திலேயே கிடைத்தது. ஆனால், அதை அவர் வைடாக ஷாட் அடிக்கவே அந்த வாய்ப்பு தவறியது.


முதல் ஆறு நிமிடங்களில் அல்-இட்டிஹாட் கொடுத்த அழுத்தத்தில் இருந்த அல்-நாசர் அணிக்கு 7வது நிமிடத்தில் ஆட்டத்தின் முதல் கார்னர் கிக் மூலம் ஹெட்டர் கோல் அடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் எதிரணி வீரர் அதைத் தடுக்கவே, ஹெட்டர் ஷாட் வைடானது.


ரொனால்டோ கால்களுக்கு நடுவே பந்து கிடைக்கும்போதெல்லாம், அதை டிரிப்பிள் செய்து முன்னோக்கிக் கொண்டு சென்றார். ஆனால், எதிரணியின் தடுப்பாட்டக்காரர்கள் அவரைத் தடுத்துக் கொண்டே இருந்தார்கள்.


11-ஆவது நிமிடத்திலேயே அவர் பந்தை டிரிப்பிள் செய்து எதிரணியின் எல்லை வரை கொண்டு சென்று தனது அணியின் சக வீரர்களுக்கு பாஸ் செய்தார். ஆனால், மைதானத்தின் மத்தியப் பகுதிக்கு அவர் செய்த அந்த நீண்ட தூர பாஸ் துல்லியமாக இல்லாமல் போனதால் அது தவறவிடப்பட்டது.


அல்-நாசர் தொடர்ந்து பல முயற்சிகளை மேற்கொண்டது. இருப்பினும் கார்னர் கிக் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அதை எதிரணியின் தடுப்பாட்டக்காரர்கள் வீறுகொண்டு தடுத்துக்கொண்டே இருந்தார்கள்.


இந்த ஆட்டம் இரு அணிகளுக்குமே முக்கியமானது. இரண்டே புள்ளிகள் முன்னிலையில் அல்-நாசர் புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் இருந்தது. அந்த இடத்தை எப்போது வேண்டுமானாலும் தவறவிடலாம் என்பதால் இந்தப் போட்டியிலும் வெற்றி பெற்று முன்னிலையை உறுதி செய்ய வேண்டியிருந்தது. அதேபோல், அல்-இட்டிஹாட் அணிக்கு இரண்டாவது இடத்தில் இருந்து முதல் இடத்திற்கு நகர இந்தப் போட்டியின் வெற்றி மிக அவசியமாக இருந்தது.


இந்த நிலையில், இரு அணிகள் இடையிலுமே மூர்க்கமான ஆட்டம் வெளிப்பட்டது. ஆரம்பத்தில் அல்-நாசர் எதிரணி கொடுத்த அழுத்தத்தால் சற்று தடுமாறினாலும் சில நிமிடங்களுக்குப் பிறகு அந்த வீரர்களும் தற்காப்பு ஆட்டத்தைத் தாண்டி இறங்கி ஆடத் தொடங்கினார்கள்.


ஆட்டத்தின் 28வது நிமிடத்தில் ரொனால்டோ எதிரணியின் எல்லைக்குள் புகுந்து கோல் போஸ்டுக்குள் ஷாட் அடிக்க முயன்றார். ஆனால், அது ஆஃப் சைட் என்பதால் மறுக்கப்பட்டது.


அதைத் தொடர்ந்து மீண்டும் ரொனால்டோ கரீப்புக்கு பாஸ் செய்ய, அவரும் கோல் கீப்பரை நேருக்கு நேர் எதிர்கொண்டு கோல் அடிக்க முயன்றார். ஆனால், அந்த முயற்சியும் தோல்வியில் முடிந்தது.


அதைத் தொடர்ந்து, 35வது நிமிடத்தில் அல்-இட்டிஹாட் அணியின் இகோர் கொரனாடோ சுமார் 22 மீட்டர் தொலைவுக்கு ஒரு லாங் ஷாட்டை முயற்சி செய்தார். இருப்பினும் அந்த முயற்சியிலும் கோல் வாய்ப்பு எட்டாக்கனியாகிப் போனது. இப்படி இரு அணிகளுமே கோல் அடிக்காமல் இருந்த காரணத்தால், இருதரப்பு வீரர்களிடையிலுமே ஒருவித விரக்தியும் பரபரப்பும் தெரியத் தொடங்கியது.


முதல் பாதி முடிந்த நேரத்தில் இரு அணிகளுமே ஒரு கோல் கூட அடிக்காமல் இருந்தது. ரொனால்டோவின் ஆட்டம் இந்தப் போட்டியில் பெரிய தாக்கம் எதையும் முதல் பாதியில் செலுத்தவில்லை என்றும் வர்ணனையாளர்கள் கூறினர்.


50-ஆவது நிமிடத்தில் கரீப் மீண்டுமொரு கோல் வாய்ப்பைத் தவறவிட்டிருந்தார். அதனால் ஏற்பட்ட விரக்தி ரொனால்டோவின் முகத்தில் பிரதிபலித்தது.


அல்-இட்டிஹாட் அணியைச் சேர்ந்த ப்ரூனோ ஹென்ரிக்கிற்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. ஆனால், 54வது நிமிடத்தில் கிடைத்த அந்த வாய்ப்பில் அவர் ஹெட்டர் சரியாக அடிக்காமல் போனதால் அதுவும் தவறியது.


இப்படியாக, இரண்டாவது பாதியிலுமே இரு அணிகளும் தொடர்ந்து கோல் வாய்ப்புகளை உருவாக்க முடியாமல் திணறிக் கொண்டிருந்தார்கள். அல்-நாசர், அல்-இட்டிஹாட் இருதரப்பின் தடுப்பாட்டமுமே பலமாக இருந்தது.


அல்-நாசருக்கு ஒரு ஃப்ரீ கிக் வாய்ப்பு கிடைத்தது. அதை அடித்த ரொனால்டோ மிகத் தொலைவாகவும் வைடாகவும் அடித்ததால் அந்த வாய்ப்பு வீணானது.


ஆட்டம் இறுதிக்கட்டத்தை நெருங்கிக் கொண்டிருந்தது. வெறும் 30 நிமிடங்களே இருந்த நிலையில், இரு அணிகளுமே ஒரு கோல் கூட அடிக்காமல் இருந்தன. இரு அணிகளின் கீப்பர்களுமே திறம்படச் செயல்பட்டுக் கொண்டிருந்தார்கள்.


ஆனால், ஒருவழியாக அல்-நாசரின் தற்காப்பை உடைத்த ரொமரினோ அல்-இட்டிஹாட் அணிக்கான முதல் கோலை சாத்தியமாக்கினார். அது இந்த சீசனின் அவர் அடித்த ஏழாவது கோல். அரங்கம் அதிர அல்-இட்டிஹாட் ரசிகர்கள் கரகோஷங்களை எழுப்பி ஆர்ப்பரித்தார்கள்.


மைதானத்தின் நடுவிலிருந்து பந்தை டிரிப்பிள் செய்து கொண்டு சென்ற அகமது ஷாராஹிலி, அல்-நாசரின் எல்லை வரை கொண்டு சென்று அங்கிருந்த ரொமரினோவுக்கு பாஸ் செய்தார்.


அதை ரொமரினோ அல்-நாசரின் எல்லைக்குள் தட்டிச் சென்றவர், தனது வலது காலால் அடித்த ஷாட் அந்த அணியின் முதல் கோலாகப் பதிவானது.


அல்-நாசரின் கோல் கீப்பர் நவாஃப் அல்-அக்கிதி ரொமரினோவின் ஷாட்டிற்காக காத்திருக்காமல் முன்னேறி வந்து பந்தை எடுக்க முனைந்தார். அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி அற்புதமான கோல் ஷாட்டை ரொமரினோ சாத்தியமாக்கினார்.


இதற்குப் பிறகும் பலமுறை ரொனால்டோ கோல் அடிக்கும் முனைப்போடு ஆடினார். 90 நிமிடங்கள் முடிந்து மூன்று நிமிடம் கூடுதல் நேரம் கிடைத்தது. அப்போது அதற்கான வாய்ப்பும் அவருக்குக் கிடைத்தது.


தன் இடது காலால் கோல் போஸ்டுக்குள் நேராக ஒரு ஷாட் அடித்தார். ஆனால், அல்-இட்டிஹாட் கோல் கீப்பர் க்ரோஹேவின் வலிமையான வலது கை பந்தைத் தட்டிவிடவே கடைசி நிமிட முயற்சியிலும் கோல் கிடைக்காமல் போனது.


இதன்மூலம், அல்-நாசரை வீழ்த்தி அல்-இட்டிஹாட் அணி புள்ளிப் பட்டியலில் முதலிடத்திற்கு வந்தது. அல்-நாசர் இரண்டாம் இடத்திற்குத் தள்ளப்பட்டது.


இந்தத் தோல்வி ரொனால்டோவை மிகவும் கவலையுறச் செய்தது. அவர் கோபத்துடன் களத்தில் இருந்து வெளியேறினார்.


கோபத்துடன் மைதானத்தில் இருந்து வெளியேறிய ரொனால்டோ, மைதான ஓரத்தில் கிடந்த பாட்டில்களை ஆத்திரத்துடன் உதைத்தார்.


அதைத்தொடர்ந்து தனது சமூக ஊடக பதிவில், “முடிவு ஏமாற்றமளிக்கிறது. ஆனால், நாங்கள் இந்த சீசனிலும் அடுத்து வரவுள்ள போட்டிகளிலும் கவனம் செலுத்துகிறோம். அல்-நாசர் அணியின் ரசிகர்கள் அளிக்கும் ஆதரவுக்கு நன்றி,” என்று அவர் குறிப்பிட்டுள்ளார். bbc

No comments

Powered by Blogger.