Header Ads



ரணிலுடன் கோபம் கொண்டார் மனோ


தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பளத்தை அதிகரிக்குமாறு நாம் அரசாங்கத்தை கேட்டுக்கொள்கின்றோம். அதேவேளை பெருந்தோட்டப் பகுதிகளில் பயன்படுத்தப்படாத காணிகளை தோட்டத் தொழிலாளர்களுக்கு விவசாயத்துக்காக வழங்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளோம் என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம். பி பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பிரதமரிடம் நாம் முன்வைத்துள்ள வேண்டுகோளுக்கு இதுவரை பதில் கிடைக்கவில்லை என்பதால் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கூட்டங்களில் இனி தாம் பங்கேற்கப் போவதில்லையெனவும் அவர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தைப் பகிஷ்கரிப்பது தொடர்பில் நேற்றைய தினம் எதிர்க்கட்சியினர் பலரும் சபையில் கருத்துக்களை முன்வைத்தனர்.

இதன்போது விசேட கூற்றொன்றை முன்வைத்து உரையாற்றுகையிலேயே மனோ கணேசன் இவ்வாறு தெரிவித்தார். அவர் சபையில் மேலும் தெரிவிக்கையில்:

மிக மோசமான பொறுப்பற்ற அரசாங்கமே தற்போது நாட்டில் உள்ளது. தான் பிரதமர் பதவியை கேட்டுப் பெறவில்லை. தன்னை அழைத்தே ஜனாதிபதியே அப் பதவியை வழங்கினாரென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்து வருகிறார். ஆனால் விமல் வீரவன்சவோ ரணில் பெயரை சில தரப்பினர் பெயரிட்டதாக சபையில் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை ஒரே விடயத்துக்காக ஜனாதிபதியும் பிரதமரும் வேறு வேறாக அதிகாரிகளுக்கு அழைப்பு விடுத்து பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றனர். மிக மோசமான மடத்தனமாக அரசாங்கத்தையே அவர்கள் நடத்திக்கொண்டிருக்கின்றனர். கொழும்பு மாவட்டத்தில் மக்கள் எரிபொருள், மண்ணெண்ணெய், எரிவாயு நெருக்கடி தட்டுப்பாடு காரணமாக மக்கள் பெரும் கஷ்டப்படுகின்றனர். மலையகத்தில் தோட்டத் தொழிலாளர்கள் பெரும் கஷ்டங்களை அனுபவித்து வருகின்றனர்.

தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பளத்தை அதிகரிக்குமாறு நாம் அரசாங்கத்தை கேட்டுக்கொள்கின்றோம்.

அதேவேளை பெருந்தோட்டப் பகுதிகளில் பயன்படுத்தப்படாத காணிகளை தோட்டத் தொழிலாளர்களுக்கு விவசாயத்துக்காக வழங்குங்கள். காணிகளை பிரித்துக் கொடுப்பதாகக் கூறி 20 நாட்கள் கடந்துவிட்டன. இவ்வாறு வழங்குவதாக கூறிய காணிகள் எங்கே? என அவர் கேள்வி எழுப்பினார்.

அது தொடர்பில் நான் பிரதமருக்கு ஏற்கனவே கடிதம் எழுதியுள்ளேன். அவரின் கூட்டங்களுக்கும் சென்று வேண்டுகோள் விடுத்துள்ளோம் இன்னும் அவற்றுக்கு தீர்வு கிடைக்கவில்லை. இனிமேலும் நாம் பிரதமரின் கூட்டங்களுக்கு செல்லப்போவதில்லை.

ஜப்பான் எமக்கு பெரும் உதவி செய்த ஒரு நாடு. இன்று பாராளுமன்றம் நிர்மாணிக்கப்பட்டமை உட்பட ஜப்பானிடமிருந்து நாம் பெரும் உதவி, ஒத்துழைப்பைப் பெற்றுக் கொண்டுள்ளோம். எனினும் ஜப்பானுடன் தற்போது அதிருப்தி நிலையே காணப்படுகிறது என்றும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.