வெள்ளைக் கடற்கரையில்..
யாழ் மண்ணின் மைந்தருக்கு மண்கும்பான் மறக்காது
குதூகலம் கொப்பளிக்கக்
கூட்டமாய் படையெடுப்பர் கொண்டாட்டம் கொடியேறும்!
ஏழைந்து ஆண்டுகள்
எமைக் கடந்து சென்றபோதும் எரித்திடும் வெயிலின் வேளை குடித்திடும் நுங்கினைப் போல் இப்போதும் இனிக்கிறது!
வெள்ளைக் கடற்கரையில்
வெயிலோடு விளையாடிக்
கடலோடு நீராடிக்
களைத்து நாம் ஓடிவரக்
காத்திருக்கும் கந்தூரி!
கிடாயிறைச்சிக் கறியோடு
கறிகாயும் கமகமக்கப்
பலாவினிலே நெய்ச் சோறு பள்ளியெலாம் கமகமக்கும் கடற்கரையும் களைகட்டும்!
பதினைந்து நாயோடு
மூன்று புலி விளையாட்டு
பழசுகள் விளையாட
இளசுகள் சூடேற்றும்
விளையாட்டு வினையாகும்!
அலைவந்து கால் நனைக்க
சாட்டி வரை பொடி நடையில் துடிதுடிக்கப் பொடி மீன் வாங்கி ஈர்க்கினிலே கோர்த்து வரக்
காத்திருப்பர் காரிகையர்!
கடற்கரை மடத் தடியில்
கதையளந்து வீடு வரக்
கறுப்பரிசிச் சோற்றுடனே
கயல் மீன் கறி மணக்கும்
கையொன்று பார்த்திடுவர்!
பறையதிரும் றபானுடனே
பதுறுதீன் பாவா பாடும்
நுாறு மஸாலா பாடல் (மஸ்அலா) பள்ளியெங்கும் எதிரொலிக்கும்
பரவசமாய் கேட்டிடுவர்!
மெகர்பானின் கேள்விக்கு
அப்பாஸ் மன்னன் கூறும்
அழகான பதில் கண்டு
வாய் பிளந்து கேட்டு நிற்பர்
வானமும் வெளுத்து விடும்!
வெள்ளைக் கடற்கரையில்
வீழ்கின்ற அலைதனைப்போல் உயிர்த்தெழும் நினைவலைகள் ஒவ்வொன்றும் கதைசொல்ல நெஞ்சுக்குள் தேனுனூறும்!
- யாழ் அஸீம் -
Post a Comment