Header Ads



வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட முஸ்லிம்களின் ஆதரவு தேவை, அந்த முயற்சியிலே அதிக கவனம் செலுத்துகிறேன்




முஸ்லிம் மற்றும் சிங்கள மக்களின் ஆதரவு இன்றி தமிழ் மக்களுக்கான தீர்வை பெற முடியாது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்தார்.

சுவிட்சர்லாந்தில் நடந்த சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொண்ட பின் சூரிச் நகரில் சமூக செயற்பாட்டாளர்கள், வர்த்தகர்கள், ஊடகவியலாளர்களுடனான சந்திப்பில் சாணக்கியன் கலந்து கொண்டார்.

இலங்கையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிகளை ஒருங்கிணைப்பது மற்றும் சமகால அரசியல் தொடர்பான இச்சந்திப்பிற்கான ஒழுங்குகளை சுவிட்சர்லாந்தில் உள்ள ஊடகவியலாளர்களான இரா.துரைரத்தினம், தா. வேதநாயகம் ஆகியோர் செய்திருந்தனர்.

இச்சந்திப்பில் சுவிட்சர்லாந்து சோசலிசக்கட்சியை சேர்ந்தவரும் தொழிலதிபருமான சிறி இராசமாணிக்கம், தொழிலதிபர் திருச்செல்வம், செம்மாக்கிறேத்தன் ஸ்ரீ கதிர்வேலாயுதசுவாமி ஆலய தலைவர் வே.கணேசகுமார், சமூக செயற்பாட்டாளர் எம்.ஜெயமோகன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

கிழக்கு மாகாணத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிகளை மேற்கொள்வது பற்றியும் இச்சந்திப்பில் கலந்துரையாடப்பட்டது.

பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிகளை மேற்குலக நாடுகளில் இருக்கும் வசதி படைத்தவர்கள் நேரடியாக செய்ய முடியும் என்றும் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்தார்.

நீண்டகாலமாக புறக்கணிக்கப்பட்டிருந்த வடக்கு கிழக்கு பிரதேசத்தின் அபிவிருத்தியில் கவனம் செலுத்த வேண்டிய அதேநேரத்தில் தமிழ் மக்களின் உரிமைகளை பெற்றுக்கொள்வதிலும் அதிக கவனம் செலுத்த வேண்டியவர்களாக உள்ளோம்.

தமிழ் மக்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வை பெறுவதற்கு முஸ்லிம் மற்றும் சிங்கள மக்களின் ஆதரவையும் நாம் பெற வேண்டும். வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட வேண்டுமாக இருந்தால் கிழக்கு மாகாணத்தில் உள்ள முஸ்லிம் மக்களின் ஆதரவு தேவை. அதே போன்று சிங்கள மக்களின் ஆதரவும் தேவை. அந்த ஆதரவு தளத்தை ஏற்படுத்தும் முயற்சியிலேயே நான் அதிக கவனம் செலுத்தி வருகிறேன் என்றும் சாணக்கியன் தெரிவித்தார்.

1 comment:

  1. வடக்கு கிழக்கு இணைப்பு என்பது முஸ்லீம் சமூகத்திட்கு எவ்வித பிரயோசனமும் கிடைக்கப்போவதில்லை .மேலும் முஸ்லீம் சமூகத்தை பாதிப்புக்குள்ளாக்கும் விடயமாகவே இது காணப்படும் .

    ReplyDelete

Powered by Blogger.