Header Ads



4 கப்பல்களுக்கு செலுத்த 160 மில்லியன் டொலர் தேவை, மேலும் பணம் அச்சடிக்கும் நிலை, இந்தியாவிடமிருந்து 500 மில்லியன் பெற பேச்சு


எந்தளவு எரிபொருளை கொள்வனவு செய்தாலும் தேவையோ குறைந்தபாடில்லை எனவும் அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவிப்பு

இலங்கைக்கு வரவுள்ள 4எரிபொருள் கப்பலுக்கான 160 மில்லியன் டொலர்களை பெற்றுக்கொள்வதில் பெரும் சவால்களை எதிர்நோக்கியுள்ளதாக எரிசக்தி, மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். 

 அதற்காக மேலும் பணத்தை அச்சடிக்க வேண்டி நேரும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

எந்தளவு எரிபொருள் கொள்வனவு செய்யப்பட்டாலும் நாட்டின் தேவை குறைந்தபாடில்லை என தெரிவித்துள்ள எரிசக்தி மின்சக்தி அமைச்சர்,இந்திய கடன் உதவித் திட்டத்தின் கீழ் கிடைக்கும் இறுதி எரிபொருள் கப்பல் எதிர்வரும் 16ஆம் திகதி நாட்டை வந்தடையும் என்றும் தெரிவித்துள்ளார்.  அதற்கு மேலதிகமாக மேலும் 500மில்லியன் டொலர்களை இந்தியாவிடமிருந்து பெற்றுக் கொள்வதற்கான பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். 

அதேவேளை, நாடளாவிய ரீதியில் உள்ள மீன்பிடி துறைமுகங்களுக்கு தனியாக எரிபொருளை கொள்வனவு செய்து கொள்வதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக எரிசக்தி மின்சக்தி அமைச்சர் தெரிவித்துள்ளார். 

கடற்தொழில் அமைச்சு விடுத்துள்ள வேண்டுகோளுக்கிணங்க அரசாங்கம் அதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். 

அதற்கிணங்க நாடளாவிய ரீதியில் உள்ள 22 மீன்பிடி துறைமுகங்கள் ஊடாகவும் மீனவர்களுக்கு எரிபொருள் பெற்றுக் கொடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.   எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக மீன்பிடி துறைமுகங்களின் நடவடிக்கைகளில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.  அதேவேளை எரிபொருளை கொள்வனவு செய்வதற்கான டொலரை பெற்றுக்கொள்வதற்காக நாட்டில் மேலும் பணம் அச்சடிக்க நேரும் என அமைச்சர் தெரிவித்துள்ளார். அதற்கிணங்க எதிர்வரும் மூன்று மாதங்களுக்கான எரிபொருளை கொள்வனவு செய்வதற்கு நிதியைப் பெற்றுக் கொள்வதில் பெரும் சவால்களை எதிர்கொள்ள நேர்ந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.   எரிபொருளை கொள்வனவு செய்வதற்காக மத்திய வங்கியின் ஆளுநர் ஒருதொகை டொலரை ஒதுக்கி இருந்தாலும் டொலரை கொள்வனவு செய்வதற்காக பணம் பெற்றுக் கொள்வதற்கான ஒரே தீர்வு பணம் அச்சடிப்பதே என்றும் அவர் தெரிவித்துள்ளார்.   நாட்டுக்கு வரவுள்ள எரிபொருள் கப்பல்களுக்கு வழங்குவதற்காக தேவையான 160 மில்லியன் டொலர்களை தேடுவது இந்நாட்களில் எதிர் நோக்கியுள்ள பெரிய சவாலாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.   எரிபொருளை கொள்வனவு செய்வதற்கு தேவையான 530 மில்லியன் டொலர் தேவையை நாட்டில் தற்போதுள்ள பணத்தின் மூலம் முகாமைத்துவம் செய்ய முடியாத நிலை உள்ளதாகவும் தெரிவித்துள்ள அமைச்சர்,30 மில்லியன் டொலருக்கான கடன் கேள்வி பத்திரத்தை விநியோகிக்க முடியாத காரணத்தினால் கடந்த 20 தினங்களாக மசகு எண்ணெய்க் கப்பல் ஒன்று விடுவிக்கப்படாமல் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

No comments

Powered by Blogger.