கோட்டாபய பதவி விலகினால், பசில் ஜனாதிபதியாக வருவார் - நீதியமைச்சர் விஜயதாச
கண்டியில் இன்று -29- மாநாயக்க தேரர்களை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இதற்கு முன்னர் மாநாயக்கர் தேரர்களிடம் பேசிய விஜயதாச ராஜபக்ச,
“ஒரு குடும்பம் சிறிது சிறிதாக பொருளாதாரத்தை அழித்து வருகின்றது என்று குற்றம் சுமத்தப்பட்டு வந்தது. இதனால், குடும்பத்தினரை அமைச்சரவையில் இருந்து நீக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுத்தார். இதனால், தற்போது எஞ்சி இருப்பது ஜனாதிபதி பதவி விலகிச் செல்ல வேண்டும் என்ற கோரிக்கை மாத்திரமே. ஜனநாயக நாட்டில் மக்களுக்கு அப்படியான கோரிக்கையை விடுக்க முடியும்.” எனக் கூறியுள்ளார்.
இதனையடுத்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த நீதியமைச்சர்,
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை நீக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி கூறுகிறது. மக்களின் கருத்துக்களை அறிந்து நாங்களும் அதனை நீக்க விரும்புகிறோம். அதற்காக மக்கள் கருத்தை அறியும் சர்வஜன வாக்கெடுப்பை நடத்த வேண்டும்.
இதனால், கானல் நீரின் பின்னால் ஓடும் விடயங்களில் மக்கள் நம்பிக்கை வைக்க மாட்டார்கள். 21வது திருத்தச் சட்டத்தில் 19வது திருத்தச் சட்டத்திற்கு அப்பால் சென்ற முன்னேற்றமான விடயங்களையே நாங்கள் முன்வைத்துள்ளோம்.
அமைச்சு பதவிகளை வகிப்பதற்கு ஜனாதிபதிக்கு இருக்கும் உரிமையை நீக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கூறுகின்றன. எமது நாட்டின் அரசியலமைப்புச் சட்டம் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பாதுகாப்பு சம்பந்தமாக ஜனாதிபதி பொறுப்புக் கூற வேண்டும் என்று அரசியலமைப்புச் சட்டத்தில் முதலில் குறிப்பிடப்பட்டுள்ளது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியே நாட்டின் முப்படைகளின் தளபதி.
இதனால், பாதுகாப்பு அமைச்சு பதவியை ஜனாதிபதியிடம் இருந்து நீக்க வேண்டுமாயின் கட்டாயம் சர்வஜன வாக்கெடுப்பு செல்ல வேண்டும். நாட்டில் அப்படியான செயற்பாடுகளை முன்னெடுக்கக் கூடிய சூழ்நிலை இருக்கின்றதா என்பது மக்கள் அனைவருக்கும் புரியும். இதனை எதிர்க்கட்சியும் உணரும் என்று நம்புகிறேன்.
அரசியலமைப்புச் சட்டத்திற்கு அமைய நாடாளுமன்றத்தில் இருக்கும் சகல உறுப்பினர்களும் சமமானவர்கள். மக்கள் தெரிவு செய்யப்பட்டாலும் தேசிய பட்டியலில் தெரிவானாலும் நாடாளுமன்ற உறுப்பினர்களாகவே கருதப்படுகின்றனர்.
அரசாங்கம் தோல்வியடையும் நிலையில் இருந்தால், அடுத்ததாக ஆட்சி பொறுப்பை ஏற்க வேண்டியது எதிர்க்கட்சியும் எதிர்க்கட்சித் தலைவரும். நாங்கள் ஒரு மாதங்களாக பேச்சுவார்த்தை நடத்தி அரசாங்கத்தை பொறுபேற்குமாறு கோரிக்கை விடுத்தோம்.
ஜனாதிபதி தனியாக கோரிக்கை விடுத்தார். பிரதமர் பதவியை ஏற்குமாறு கோரிக்கை விடுத்தார்.முடியாது எனக் கூறிய போது, 41 பேரை கொண்ட எமது சுயாதீன அணியின் சார்பில் நான் ஒரு கோரிக்கையை விடுத்தேன்.
அரசாங்கத்தை பொறுபேற்று நடத்துங்கள், நாங்கள் எதிர்க்கட்சிக்கு நிபந்தனைகள் இன்றி ஆதரவு வழங்குவோம் எனக் கூறினேன். எதிர்க்கட்சி முடியாது என மறுத்து விட்டது.
அதன் பின்னர் பிரதான எதிர்க்கட்சியும் எமது சுயாதீன அணியும் இணைந்து அரசாங்கத்தை அமைப்போம் என்று நான் யோசனை முன்வைத்தேன். அதனையும் எதிர்க்கட்சி நிராகரித்தது. அப்படியானால் வேறு எதனை செய்ய முடியும். இதன் காரணமாகவே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக நியமித்தார்.
ஜனாதிபதி பதவி விலக வேண்டும் என்று இளைஞர்கள் கடந்த ஏப்ரல் மாதம் போராட்டத்தை ஆரம்பித்தனர். நான் இந்த போராட்டத்தை 2007 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கோப் அறிக்கையை சமர்பித்து இந்த மோசடி அரசியலை மாற்ற வேண்டும் என்று கூறி போராட்டத்தை ஆரம்பித்தேன்.
அனைத்து அரசாங்கங்களிலும் நான் பாதிக்கப்பட்டிருக்கின்றேன். அனைத்து அரச தலைவர்களுடனும் மோதியுள்ளேன். தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுடன் மோதினேன். என்னை போன்று ஜனாதிபதியுடன் மோதியவர்கள் எவரும் அரசியலில் இல்லை.
இவ்வாறான நிலைமையில், இளைஞர்கள் நாட்டுக்கு சிறந்த ஜனநாயகத்தை கொண்டு வர ஜனாதிபதியை கோட்டாபய ராஜபக்ச வீட்டுக்கு செல்லுமாறு கூறுகின்றனர்.
இளைஞர்கள் கூறுவது போல், ஜனாதிபதி பதவி விலகினால், இந்த பிரச்சினை முடிந்து விடும். அந்த பிரச்சினை முடிந்த பின்னர் அடுத்து வரும் பிரச்சினை என்ன?.
மொட்டுக்கட்சிக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் இருக்கின்றது. நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை வாக்குகளால் ஜனாதிபதியை தெரிவு செய்ய வேண்டும். அப்படி நடந்தால், அடுத்த ஜனாதிபதி பசில் ராஜபக்சவாக இருக்கலாம்.
மொட்டுக் கட்சியின் உறுப்பினர்களின் பெரும்பாலான உறுப்பினர்களை அவரே கையாள்கிறார் என்பதே இதற்கு காரணம்.
கோட்டாபய ராஜபக்ச விலகி, பசில் ராஜபக்ச அந்நத இடத்திற்கு வந்தால், நல்லதா?. இதன் காரணமாகவே நடைமுறையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என நாங்கள் கூறுகிறோம்.
21 வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை நிறைவேற்றிய பின்னர், நாட்டின் பாதுகாப்பு மற்றும் மக்களின் பாதுகாப்பு தொடர்பான கூடிய கவனத்தை செலுத்தி, நிறைவேற்று அதிகாரத்தை நீக்க வேண்டும்.
அதனை செய்ய வேண்டுமாயின் மக்களின் கருத்துக்களுக்கு மதிப்பளித்தே அதனை செய்ய வேண்டும் எனவும் விஜயதாச ராஜபக்ச கூறியுள்ளார். Tamil w
Post a Comment