Header Ads



பல நாட்கள் நீடித்த போராட்டம், வலுவிழந்தது ஏன்..?


ரஞ்சன் அருண் பிரசாத்

இலங்கை அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம் நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், இந்த போராட்டம் சுமார் 50 நாட்களை கடந்துள்ளது.

பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்த நிலையில், நாட்டில் அத்தியாவசிய பொருட்களுக்கான தட்டுப்பாடு பாரியளவில் நிலவியது.

இதையடுத்து, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவி விலகுமாறு வலியுறுத்தி, ஜனாதிபதியின் மிரிஹான பகுதியிலுள்ள வீட்டை கடந்த மார்ச் மாதம் 31ம் தேதி மக்கள் சுற்றி வளைத்து போராட்டம் நடத்தியிருந்தனர்.

இந்த நிலையில், அந்த போராட்டத்தில் பலர் காயமடைந்ததுடன், கோடிக்கணக்கான சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டது.

இந்த போராட்டத்தை அடுத்து, நாடு தழுவிய ரீதியில் பல்வேறு விதமான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

கொழும்பு - காலி முகத்திடலில் கடந்த ஏப்ரல் மாதம் 9ம் தேதி தன்னெழுச்சி போராட்டமொன்றை இளைஞர்கள் இணைந்து ஆரம்பித்திருந்தனர்.

போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட முதல் தேதியில் பல்லாயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் காலி முகத்திடலுக்கு வருகைத் தந்து, தமது ஆதரவை வழங்கியிருந்தனர்.

அன்று முதல் சில வாரங்கள் தொடர்ச்சியாக பல்லாயிரக்கணக்கான மக்கள் கடும் வெளியில், கடும் மழை, குளிர் என எதையும் பொருட்படுத்தாது, பகலிரவாக இந்த போராட்டத்தை நடத்தி வந்திருந்திருந்தனர்.

குறிப்பாக ஜனாதிபதி செயலகத்தை முற்றுகையிட்டு இந்த போராட்டம் நடத்தப்பட்டு வருகின்றது.

காலி முகத்திடலில் ஆரம்பிக்கப்பட்ட இந்த போராட்டத்தை அடுத்து, கோட்டா கோ கம என்ற மாதிரி கிராமமொன்று அங்கு அமைக்கப்பட்டு, ஜனாதிபதிக்கு எதிராக போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்து வந்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு வசதிகளை ஏற்படுத்தும் வகையில், கோட்டா கோ கம பகுதியில் பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன.

குறிப்பாக நூலகங்கள், மருத்துவ கூடங்கள், திரையரங்கு, உணவு வழங்கும் இடங்கள், குடிநீர் விநியோகிக்கும் இடங்கள், தொலைபேசி பேட்டரி சார்ஜ் செய்யும் இடங்கள் என பல வசதிகள் இங்கு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டன.

போராட்டம் இவ்வாறு தொடர்ந்து வந்த பின்னணியில், கடந்த மே மாதம் 9ம் தேதி அது வன்முறையாக மாறியது.

அப்போதைய பிரதமராக கடமையாற்றிய மஹிந்த ராஜபக்ஷ, அலரிமாளிகையில் தமது ஆதரவாளர்களை சந்தித்து கலந்துரையாடலொன்றை அன்றைய தினம் நடத்தியிருந்தார்.

இந்த கலந்துரையாடலில் கலந்துக்கொண்ட தரப்பினர், அங்கிருந்து வெளியேறி, பேரணியாக காலி முகத்திடலை நோக்கி வருகைத் தந்தனர்.

இவ்வாறு வருகைத் தந்தவர்கள், காலி முகத்திடலில் அமைக்கப்பட்டிருந்த கோட்டா கோ கம பகுதியிலுள்ள கூடாரங்களுக்கு சேதம் விளைவித்து, அமைதி வழியில் போராட்டங்களை நடத்தியவர்கள் மீது தாக்குதல் நடத்தியிருந்தனர்.

இதையடுத்து, அமைதி வழி போராட்டம் வன்முறையாக மாறியது.

மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவாளர்கள் வந்த பேருந்துகள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் அரச எதிர்ப்பு போராட்டக்காரர்களினால் சேதம் விளைவிக்கப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டது.

அதுமாத்திரமன்றி, ராஜபக்ஷ குடும்பத்திற்கு சொந்தமான பல சொத்துக்கள் சேதமாக்கப்பட்டு, தீக்கிரையாக்கப்பட்டது.

இந்த சம்பவத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோர, அடையாளம் தெரியாத சிலரின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்தார்.

இதன்படி, இந்த சம்பவத்தில் சுமார் 10 பேர் உயிரிழந்ததுடன், 200ற்கும் அதிகமானோர் காயமடைந்திருந்தனர்.

கோடிக்கணக்கான ரூபா பெறுமதியான சொத்துக்கள் நாடு முழுவதும் சேதமாக்கப்பட்டன.

இந்த நிலையில், நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, நிலைமை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டது.

இந்த சம்பவத்தை அடுத்து, காலி முகத்திடலில் படிப்படியாக போராட்டக்காரர்களின் எண்ணிக்கை குறைவடைய ஆரம்பித்துள்ளது.

தற்போது மிகவும் குறைந்தளவிலானோரே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அத்துடன், உணவு, குடிநீர் விநியோகித்து வந்த பல கூடாரங்கள் மூடப்பட்டுள்ளன.

போராட்டம் ஆரம்பித்து 50 நாட்களை எட்டவுள்ள நிலையில், போராட்டம் வலுவிழந்துள்ளதாக மக்கள் கூறுகின்றனர். BBC

எவ்வாறாயினும், அரசாங்கத்திற்கு எதிராக போராட்டங்கள் நாடு முழுவதும் வெவ்வேறு வகையில் இடம்பெற்று வருகின்றது.

சமையல் எரிவாயு தட்டுப்பாடு, எரிபொருள் தட்டுப்பாடு உள்ளிட்ட காரணிகளை முன்னிலைப்படுத்தி மக்கள் போராட்டங்களை நடத்தி வருவதை காண முடிகிறது.

காலி முகத்திடல் வன்முறை நாடு தழுவிய வன்முறையாக மாறிய நிலையில், அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாகவும், அதன் பின்னரான எரிபொருள் தட்டுப்பாடு காரணமாகவும் அந்த போராட்டம் வலுவிழந்தாலும், நாடு முழுவதும் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் தேவைகளை நிறைவேற்ற கோரி இன்றும் மக்கள் போராடி வருகின்றனர்.

No comments

Powered by Blogger.