Header Ads



காஸ் அடுப்பு வெடித்து, வீடு எரிந்து சாம்பலாகியது - கற்பிட்டியில் வேதனை, முடிந்தால் உடனடியாக உதவுங்கள் (படங்கள்)


புத்தளம் - கற்பிட்டி குறிஞ்சிப்பிட்டி, குரக்கான்சேனையில் சமையல் எரிவாயு அடுப்பு வெடித்ததில், வீடும், வீட்டுடன் இருந்த சிறிய வர்த்தக நிலையமொன்றும் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது. .

மூன்று பிள்ளைகளுடன் தனிமையில்  வாழ்ந்து வரும் தாய், நேற்று (26) அதிகாலையில் தனது பேரப்பிள்ளைக்கு தேநீர் தயாரிக்க தண்ணீரை கொதிக்க வைக்க காஸ் அடுப்பைப் பற்ற வைத்துள்ளார். 

இதன்போது, காஸ் அடுப்பு திடீரென பாரிய சத்தத்துடன் வெடித்துச் சிதறியதால், வீடும் தீப்பற்ற ஆரம்பித்துள்ளது.

இதனையடுத்து, வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த தனது மூன்று பிள்ளைகளையும், தனது மருமகளையும், பேரப்பிள்ளையையும் வீட்டுக்கு வெளியே அழைத்து வந்த குறித்த தாய், வீடு முழுவதும் பரவிக்கொண்டிருந்த தீயை அணைப்பதற்கு அயலவர்களின் உதவியையும் நாடியுள்ளார்.

எனினும் , கூரை தகரத்தினாலும், ஏனையவை பலகையினாலும் கொண்ட வீடு என்பதால் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை. குறித்த வீடு முழுமையாக தீயில் எரிந்துள்ளது. வீட்டில் இருந்த இருவருக்கு சிறிய தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

இதனால், சில்லறைக் கடையுடன் கொண்ட குறித்த வீட்டில் இருந்த அனைத்து ஆவணங்களும், பொருட்களும், ஆடைகளும் இந்த தீயினால் முழுமையாக எரிந்து சாம்பலாகியுள்ளதாக வீட்டு உரிமையாளரான தாய் கூறியுள்ளார். இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 

அத்துடன், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு கற்பிட்டி சகாத் ஒன்றியம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதோடு, வீடொன்றை நிர்மாணித்துக் கொடுப்பதற்கும் அந்த அமைப்பு முன்வந்துள்ளது.

பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உதவிகளை செய்ய விரும்புவோர் கற்பிட்டி சகாத் ஒன்றித்துடன் 0716080071, 0774277092 தொடர்பு கொள்ளுமாறும் அந்த அமைப்பினர்  கேட்டுள்ளனர்.

ரஸீன் ரஸ்மின்


1 comment:

  1. அவசரமாக வீடு கட்டுவதை யாராவது செய்யட்டும். இந்தக் குடும்பம் உடனடியாக சட்டத்தரணி நாகாநந்த கொடிதுவக்கு அவர்களைச்சந்தித்து இவர்களின் விபரங்களைக் கொடுத்தால் அவர் இந்த குடும்பத்துக்கு 10 கோடி நட்டஈடு பெற்றுத் தருவதற்கு உதவி செய்வார். அதற்காக அவர் இந்தக் குடும்பத்திலிருந்து எதையும் எதிர்பார்க்கமாட்டார். அந்தப் பணியை ஸகாத் நிதியைச் சேர்ந்தவர்கள் முன்வந்து செய்தால் அது பெரிய உதவியாக அமையும். தயவுசெய்து உடனடியாக இந்த வறிய குடும்பத்துக்கு உதவ முன்வாருங்கள்.

    ReplyDelete

Powered by Blogger.