Header Ads



ஜனாதிபதி உடனடியாக கிண்ணியா நகரசபை மேயரின் பதவியை பறிக்க வேண்டும் - நிமல் லன்சா

- பா.நிரோஸ் - 

கிண்ணியா - குறிஞ்சாக்கேணி படகுப் பாதை விபத்துக்கு கிண்ணியா நகரசபை மேயரே முதலாவதாக பொறுப்புக்கூற வேண்டியவர் என தெரிவித்த இராஜாங்க அமைச்சர் நிமல் லன்சா, விபத்தில் உயிரிழந்த அப்பாவி பிள்ளைகளுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றால், அந்த நகரசபை மேயரின் பதவியை ஜனாதிபதி உடனடியாகப் பறிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.    

“எதிர்க்கட்சி எம்.பி இம்ரான் மஹ்ரூபின் மைத்துனரே, படகுச் சேவைக்கு அனுமதியை வழங்கிய கிண்ணியா மேயர். விபத்துக்குள்ளான படகு சேவையை முன்னெடுத்தவரும் இம்ரானின் நெருங்கிய உறவினர்“ எனவும் லன்சா எம்.பி சபைக்கு அறிவித்தார்.   

பாராளுமன்றத்தின் நேற்றைய (24) அமர்வில் கலந்துகொண்டு தொடர்ந்து உரையாற்றிய அவர்,   விபத்தில் உயிரிழந்த அனைவருக்கும் அரசாங்கத்தின் சார்பில் அஞ்சலிகளைச் செலுத்துகிறேன். 

விபத்தில் சிக்கி வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறுபவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் எனவும் பிரார்த்திக்கிறேன் என்றார்.   

நீண்ட காலங்களால் இங்கு பாலம் இல்லை என்பதால் மக்கள் பாரிய சிரமங்களுக்கு முகங்கொடுத்தனர். 

நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் பலர் இதற்கு அடிக்கல் நாட்டியிருந்தபோதிலும், அதனை நிர்மாணிக்கவில்லை. பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் இந்த பாலத்தை நிர்மாணித்துத்தர வேண்டும் என என்னிடம் கோரிக்கை விடுத்தார் என குறிப்பிட்டார்.  

இதன்படி இந்த பாலத்தை அமைக்கும்போது மாற்றுப் பாதையாக 3 கிலோமீற்றர் வரையிலான பாதையைப் பயன்படுத்த தீர்மானிக்கப்பட்டிருந்தது. 

வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் ஊடாக இப்பாதையை அமைக்க நெடுஞ்சாலைகள் அமைச்சும் அனுமதி வழங்கியிருந்தது எனவும் தெரிவித்தார். 

படகு சேவைக்கு அனுமதி வழங்க வேண்டாம் என கூறியும், அனுமதி வழங்கிய கிண்ணியா நகரசபையே இந்த விபத்துக்கு முதலாவது பொறுப்புக்கூற வேண்டியவர்கள். 

கிண்ணியா மேயரின் செயற்பாடுகளே இந்த விபத்துக்குக் காரணம் எனவும் கூறிய இராஜாங்க அமைச்சர், படகு சேவையை முன்னெடுப்பதற்கான அனுமதியை வழங்கும் அதிகாரம் கிண்ணியா நகரசபைக்கு இல்லை. இல்லாத அதிகாரத்தைப் பயன்படுத்தி படகு சேவைக்கு அனுமதியை வழங்கியிருந்தது.

எஸ்.எம். தௌபீக் எம்.பி பாலத்தை அமைக்க அடிக்கல்லை மாத்திரமே நாட்டினார். எனினும் விபத்துக்குள்ளான படகு சேவையை முன்னெடுக்க இம்ரான் மஹ்ரூப் எம்.பியே அனுமதி வழங்கியிருந்தார். 

எனவே பாராளுமன்றத்தை தவறாக வழிநடத்தி இம்ரான் மஹ்ரூப் எம்.பி அரசியல் செய்ய வேண்டாம் எனவும், இம்ரான் மஹ்ரூப் எம்.பியும் இந்த விபத்துக்குப் பொறுப்புக்கூற வேண்டும்.

அப்பம் சுடுவதுபோல பாலத்தை அமைக்க முடியாது. எவ்வாறாயினும் இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் மீண்டும் நிகழாதிருக்க குறித்த பாலத்தை விரைவில் நிர்மாணிக்க நடவடிக்கை  எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.