Header Ads



மனசாட்சியே இல்லாத பிறவிகள், சாபம் உங்களை சும்மா விடாது (கண்ணீருடன் ஒரு உண்மைச் சம்பவம்)


- DR.Y.Yathunanthanan -

அந்த பெரிய அரசாங்க வைத்தியசாலை வழமை போன்று சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. அங்கு கோவிட் நோய் அறிகுறிகளைக் கொண்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு என்று எல்லா வசதிகளையும் உள்ளடக்கிய சிறப்பு விடுதி. அங்கு கட்டில்கள் முழுவதும் கோவிட் நோயாளிகளால் நிரம்பியிருந்தன. பெரும்பாலானவர்களுக்கு ஒக்சிஜன் வழங்கப்பட்டுக் கொண்டிருந்தது. அங்குள்ள அவசர சிகிச்சைப் பிரிவில் கோவிட் தொற்று தீவிரமடைந்த நோயாளிகள் மயக்க நிலையில் செயற்கைச் சுவாசக் கருவிகள் பொருத்தப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்தனர்.

அந்த நேரத்தில் அந்த விடுதிக்கு அவசர அழைப்பு ஒன்று வருகின்றது. கோவிட் தொற்றுக்காளான கர்ப்பிணித் தாயொருவர் மூச்செடுக்க சிரமப்படுவதாகவும் அவர்  அங்கு அனுப்பப்படப் போவதாகவும் தகவல் வந்தது. விடுதியிலோ இடமில்லை. எல்லாக் கட்டில்களும் நிரம்பியிருந்தன. எனினும் கர்ப்பிணித் தாய்க்கு இடம் கொடுக்க வேண்டிய அவசியத்தை உணர்ந்து நோயாளிகளில்  கொஞ்சம் பரவாயில்லை என்று பட்டவரை அவசரமாக வேறு விடுதிக்கு மாற்றி சகல வசதிகளுடன் கூடிய படுக்கையை அவசரமாக தயார் செய்து காத்திருந்தனர் வைத்தியர்களும் தாதியர்களும்.

சற்று நேரத்திலேயே ஒரு 43 வயது மதிக்கத்தக்க கர்ப்பிணி தாய் ஒருவர் அந்த விடுதிக்கு அவசரமாகக் கொண்டு வரப்பட்டார். மூச்சுத் திணறலுடன் வந்த அம்மாவுக்கு அந்த விடுதி வசதிகளையும் தயாராக நின்ற மருத்துவ குழாமையும் பார்த்ததில் கொஞ்சம் நிம்மதி வந்தது. அப்படி இருந்தும் தன்னைக் காப்பாற்றச் சொல்லி அந்தத் தாய் கேக்கவில்லை. தன் வயிற்றில் வளரும் முகமறியா அந்தக் குழந்தையை காப்பாற்றும்படி பலமுறை கேட்டபடி இருந்தார். உடனடியாகவே விடுதி படுக்கைக்கு மாற்றப்பட்டு ஒக்சிஜன் வழங்கப்பட்டது. என்ன கொடுமை சில நிமிடங்களுக்குள்ளேயே மூச்சுத் திணறல் அதிகமாகி ஒரு வைத்திய குழாமே தங்களால் இயன்ற முழுமுயற்சியையும் செய்தும் இயலாது போக அந்தத் தாயின் உயிர் பிரிந்தது. என்ன ஏது என்று தெரியாமலே அந்தக் கருவறைக்குள் சுகமாகத் தூங்கிய அந்தப் பிஞ்சின் உயிரும் பிரிந்தது.

எத்தனையோ மரணங்களைப் பார்த்தவர்கள் தான் அந்த வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் ஊழியர்கள். ஆனால் இந்த மரணங்களை தாங்காது  அனைவரும் கதறி அழுதார்கள். ஆனால் தொடர்ந்து அழுது கொண்டிருக்க முடியுமா?  இன்னொரு நோயாளி வருகிறார் என்ற அழைப்பு கிடைத்ததும் அவசரமாக உடைமாற்றி தயாரானார்கள்.

இந்த இரு உயிர்களையும் அழிவிலிருந்து காப்பாற்றி இருக்க முடியுமா? நிச்சயமாக இந்த அபலைப் பெண்ணுக்கு கோவிட் தொற்று ஏற்பட்டிருக்காவிட்டால். விசாரித்ததில் கிடைத்த தகவல்கள். திருமணமாகி பல ஆண்டுகளாகியும் பிள்ளை இல்லை. பல வைத்திய ஆலோசனைகள், சிகிச்சைகளுக்கு பிறகு பிள்ளை உருவாகிற்று என்று அறிந்த செய்திக்குப் பிறகு அவள் அடைந்த மகிழ்ச்சிக்கு அழவே இல்லை. குடும்பமே தலையில் வைத்துக் கொண்டாடியது. ஊரெல்லாம் கொரோனாவாம். கர்ப்பிணித் தாய்மாருக்கு தொற்றினால் ஆபத்தாம் என்ற கதைகளைக் கேட்டதிலிருந்து பாவம் பிள்ளையை நினைத்து அந்த அப்பாவிப் பெண் வீட்டை விட்டே வெளிக்கிடவில்லை. ஆனால் நிகழ்வுகளை வைக்க வேண்டாம், வெளியில் நிகழ்வுகளுக்கு செல்ல வேண்டாம் என அரசாங்கம் எவ்வளவோ அறிவுறுத்தியும் கேளாமல் ஒரு கொண்டாட்டத்தில் அந்த குடும்ப உறுப்பினகள் கலந்து கொண்டதன் விளைவு வீட்டிற்குள் பத்திரமாக இருந்த இருப்பதாக நினைத்த அந்த அப்பாவி தாய்க்கு கொரோனாவை கொண்டு வந்து கொடுத்தார்கள். விளைவு இரு உயிர்கள் பலியாகி விட்டன.

இன்றும் லொக் டவுன் ஏரியாவில் இருந்து கூட களவாக வெளியில் சென்று பிறந்த நாள் கொண்டாடுகிறார்கள் மனசாட்சியே இல்லாத பிறவிகள்.

நீங்கள் அத்தியாவசியமில்லாது வீட்டை விட்டு வெளியில் செல்லும் ஒவ்வொரு கணமும் நினையுங்கள். உங்கள் வீட்டிலோ அல்லது அயலிலோ ஒரு கர்ப்பிணித் தாய் இருக்கலாம். உங்களால் அவர்கள் பாதிக்கப்படப் போகிறார்கள் என்று. 

தாய், சிசு என இரு அப்பாவி உயிர்களின் சாபம் உங்களை சும்மா விடாது.

கண்ணீருடன்

DR.Y.Yathunanthanan

1 comment:

  1. உண்மையில் அவசியமற்று வெளியில் சுற்றித்திரிபவர்களும், அவசியமற்ற நிகழ்வுகளை ஒழுங்கு செய்வோரும் கொலைகாரர்கள் பட்டியலில் சேர்க்கப்பட வேண்டியவர்கள்.

    ReplyDelete

Powered by Blogger.