Header Ads



சிரேஸ்ட சட்டத்தரணி கௌரிசங்கரி, அசாத் சாலி சார்பில் மனுத் தாக்கல்


மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி சார்பாக சிரேஸ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசா, தானே மனுதாரராக முன்னிலையாகி சட்டமா அதிபர், பொலிஸ் மா அதிபர், குற்றப் புலனாய்வுப் பிரிவின் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி நிசாந்த டி. சொய்சா, குற்றப் புலனாய்வுப் பிரிவின் பிரதான பொலிஸ் பரிசோதகர் ஜயந்த பயாகல, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் ஜகத் அல்விஸ் ஆகியோரை பிரதிவாதிகளாகப் பெயரிட்டு இந்த மனுவை இன்று -05- உயர் நீதிமன்றில் தாக்கல் செய்துள்ளார்.

மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி 2021ம் ஆண்டு மார்ச் மாதம் 16ம் திகதி நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக, இனங்களுக்கிடையே முரண்பாட்டை ஏற்படுத்தும் வகையில், செயல்பட்டதன் மூலம் தண்டனை சட்டக்கோவை 120 பிரிவு மற்றும் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் 2ம் பிரிவின் கீழும் குற்றவியல் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.

மேலதிக விசாரணைக்காக குற்றவியல் புலனாய்வுப் பிரிவினர் 2021ம் ஆண்டு மார்ச் மாதம் 19ம் திகதி பாதுகாப்பு அமைச்சரான ஜனாதிபதியினால் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் 9(1) பிரிவின் கீழ் வழங்கப்படும் தடுப்புக் காவல் உத்தரவைப் பெற்றுக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் தடுத்து வைத்து விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

கைதும் தடுத்துவைப்பும் அரசியல் அமைப்பின் 12(1) 12(2) 13(1) 13(2) 14(1)ஐ மீறுவதாகவும், பாதுகாப்பு அமைச்சரின் தடுப்புக்காவல் உத்தரவு சட்டவலுவற்றதென கட்டளை வழங்கும் படியும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதுடன், இடைக்கால உத்தரவு வழங்கி கைதியான அசாத் சாலியை விடுதலை செய்யும்படியும் மனுவில் குறிப்பிடப்பட்டுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

2013ஆம் ஆண்டு பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் அசாத் சாலி கைது செய்யப்பட்ட போதும் கௌரி சங்கர் தவராசாவே இவர் சார்பில் மனுத்தாக்கல் செய்தமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.