Header Ads



இஸ்லாமிய நாடுகள் மீது அழுத்தம் பிரயோகிக்க, சுகயீனத்தை பொருட்படுத்தாது பிரதமர் பங்களாதேஸ் சென்றார் - சுமந்திரன்


ஜெனீவா பிரேரணை தொடர்பில் மற்றைய இஸ்லாமிய நாடுகள் மீது அழுத்தங்களை பிரயோகிப்பதற்காகவே பிரதம மந்திரி பங்களாதேஸ் சென்றுள்ளார் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். 

வவுனியா, குடியிருப்பு பகுதியில் உள்ள வவுனியா குளம் மற்றும் சுற்றுலா மையம் என்பவற்றை இன்று (03) மாலை பார்வையிட்ட பின் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். 

அவர் மேலும் தெரிவிக்கையில், ஜெனீவாவில் இலங்கை சம்மந்தமான பிரேரணை வாக்கெடுப்பு நடைபெற இருக்கின்றது. இந்தப் பிரேரணை நிறைவேற்றப்பட வேண்டும் என்பது எங்களது விருப்பம். இலங்கையை சர்வதேச தளத்தில் தொடர்ச்சியாக மேற்பார்வை செய்வதற்கான இந்த தீர்மானம் நிச்சயமாக நிறைவேற்றப்பட வேண்டும். 

இந்த தீர்மானத்தின் வலு போதாது என பலர் குறைப்படுகிறார்கள். ஐக்கிய நாடுகள் மனிதவுரிமை பேரவை எதை செய்யலாம் என்பது மட்டுமல்ல, இந்த பேரவையில் தற்போது இருக்கும் உறுப்பு நாடுகள் எவை என்பதையும் நாம் அவதானிப்போமாக இருந்தால் இந்த பிரேரணை வலிமையுள்ளதாக நாங்கள் காணலாம். இந்தப் பிரேரணையை தோற்கடிக்க வேண்டும் என அரசாங்கம் இயன்றளவு முயற்சி செய்கிறது. 

பிரதம மந்திரி தனது சுகயீனத்தையும் பொருட்படுத்தாது பங்களாதேஸ் சென்றுள்ளார். பங்களாதேஸ் வாக்களிக்கும் ஒரு நாடு. இஸ்லாமிய நாடு. மற்றைய இஸ்லாமிய நாடுகள் மீது சில அழுத்தங்களை பிரயோகிப்பதற்காக சென்றுள்ளார். எப்படியாவது இந்த பிரேரணையை தோற்கடிக்க வேண்டும் என இலங்கை அரசாங்கம் கடினமாக உழைக்கிறது. அவர்களுடன் சேர்ந்து சில தமிழ் தரப்புக்களும் இந்தப் பிரேரணை தோற்கடிக்க வேண்டும் என கஸ்ரப்பட்டு உழைக்கிறார்கள். இந்தப் பிரேரணையில் வலு இல்லை, இது பிரயோசனம் அற்றது என்று கூறி வாக்களிக்கும் நாடுகள் மத்தியில் குழப்ப நிலையை உருவாக்கியுள்ளார்கள். 

இந்தப் பிரேரணை யாருக்கு உகந்தது, யாருக்கு எதிரானது என்ற ஒரு குழப்ப நிலையை வாக்களிக்கும் நாடுகள் மத்தியில் வேணும் என்றே உருவாக்கி சில தமிழ் தரப்புக்கள் அரசாங்கத்தின் கைக்கூலிகளாக செயற்படுகிறார்கள். ஆனாலும் வடக்கிலும், கிழக்கிலும் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதான கட்சியாகிய தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெளிவாக உலக நாடுகளுக்கு ஒரு செய்தியை சொல்லியிருக்கின்றோம். இலங்கையை அவர்களது பிடியில் இருந்து விடக்கூடாது. சர்வதேச தளத்தில் இலங்கையை தொடர்ந்து மேற்பார்வை செய்வதாக இருந்தால் இந்த பிரேரணை நிறைவேற்றப்பட வேண்டும். அது நடைபெறும் எனத் தெரிவித்தார். 

-வவுனியா தீபன்-

1 comment:

  1. இஸ்லாமிய நாடுகள் இப்புண் ஆறாமல் பார்த்துக்கொண்டால் மவுசுதான்.

    ReplyDelete

Powered by Blogger.