Header Ads



போனஸ் ஆசனங்களை அதிகரிக்க திட்டம் - கட்சித் தலைவர்கள் தீர்மானிப்பார்கள்


- மகேஸ்வரி விஜயனந்தன் -

மாகாண சபைத் தேர்தலில் வெற்றியீட்டும் கட்சியொன்றுக்குக் கிடைக்கும் இரு போனஸ் ஆசனங்களின் எண்ணிக்கையை, புதிய தேர்தல் சட்டத்தின் கீழ் அதிகரிப்பதற்கான யோசனை முன்வைக்கப்பட்டு உள்ளதாகவும், அமைச்சர் கம்மன்பில தெரிவித்துள்ளார்.

அதன்படி, மாகாண சபைத் தேர்தலின் போது வெற்றி பெரும் கட்சிக்கு கிடைக்கும் இரு போனஸ் ஆசனங்கள், அந்த மாகாணத்துக்குரிய மாவட்டங்களுக்கு இரண்டு அடிப்படையில் அதிகரிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

அந்த வகையில், மூன்று மாவட்டங்களைக் கொண்ட மேல் மாகாணத்தில் வெற்றிபெரும் கட்சிகளுக்கு, இரண்டு போனஸ் ஆசனங்களுக்கு பதிலாக 6 ஆசனங்கள் வழங்கப்படுமென்றும் கூறிய அவர், இதன்மூலம், நிலையான மாகாண சபையொன்றை நிர்மாணித்துக் கொள்ள முடியுமென்றார்.

மாகாண சபைத் தேர்தல் தொடர்பான புதிய சட்டம் நிறைவேற்றப்பட்ட பின்னரே, தேர்தலை நடத்துவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதெனத் தெரிவித்த அமைச்சரும் அமைச்சரவையின் இணைப் பேச்சாளருமான உதய கம்மன்பில, இதுவரை தேர்தல் தொடர்பான உரிய திகதி குறித்து தீர்மானிக்கவில்லை என்றார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகச் சந்திப்பில் இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், மாகாண சபைகள் சட்டத்துக்கு அமைய,70 சதவீதம் தொகுதிவாரியாகவும் 30 சதவீதம் விகிதாசார பிரதிநிதித்துவத்தின் அடிப்படையிலும் தெரிவு செய்யும் யோசனைக்கு அமைச்சரவை இணக்கம் தெரிவித்துள்ள நிலையில், ஒரு தொகுதியிலிருந்து ஒரே கட்சியைச் சேர்ந்த மூவரைத் தெரிவு செய்யும் யோசனைக்கு அமைச்சரவையில் உள்ள சில அமைச்சர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர் என்றார்.

இதேவேளை, எவ்வாறெனினும், திருத்தப்பட்ட மாகாண சபை முறைமை தொடர்பான சட்டமூலமொன்று, விடயதானத்துக்குப் பொறுப்பான அமைச்சர் ஜனக்க பண்டார தென்னகோனால், நேற்றைய (நேற்று முன்தினம் - 29) அமைச்சரவைக் கூட்டத்தின் போது முன்வைக்கப்பட்டதாகவும் கூறிய அமைச்சர், இந்தத் தேர்தல் தொடர்பில், கட்சித் தலைவர்கள் கூட்டமொன்றை நடத்தி, பேச்சுவார்த்தை மேற்கொண்ட பின்னர், இறுதித் தீர்மானமொன்றுக்கு வரலாமென, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார் என்றும் குறிப்பிட்டார்.

No comments

Powered by Blogger.